Tuesday, December 9, 2014

வீழ்ந்தாலும் வெளிப்படுவேன்


வீழ்ந்தாலும் வெளிப்படுவேன் 

துன்ப மண்ணில் கால் புதைந்து
துயர  மழைத் தலை வாங்கி
வறுமை வெள்ளம் உடல் எதிர்க்க
வீறு கொண்ட வித்து நான்.

விருட்சமாக வீழும் முன்பு
நூறு வித்து, 
என் அறிவு தடவி
அன்பு  நனைத்துக்
காடென சூழக்
காலடி  வீழ்வேன்.

வீழ்ந்த பின்னும்

வித்தக வீணையாகும்
மரமாவேன்

சுடர் தரும் தீயாகும்
சருகாவேன்


பிணியறு மருந்தாகும்
வேராவேன்

ஏனெனில் நான்

கற்றலும்
கற்பித்தலும்

கற்ற படி நிற்றலும்

கற்றதன் பயன்
பெற்றலும்

வாழ்க்கையாகக் கொண்டு
கற்பிதம் தாண்டி
அற்புதம் செய்யும்

அறிவூட்டல் பணியின்
அடிமை –
அறிவுப் பொறி ஏற்றும்
ஆசான்.




No comments:

Post a Comment