Google+ Followers

Monday, December 29, 2014

ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை - சென்னைபல்கலைக் கழக மானாட்டில் எனது பங்களிப்பு

http://www.slideshare.net/chandrikasubramaniyan/ss-42488543

கம்பன் விழாவில் எனது தொடக்க உரை

தமிழ்க்கடவுள் முருகனுக்கு முதல் வணக்கம்
என் தாய் மடியாம் தமிழினிற்குத் தனிவணக்கம்

சண்ட மாருதமும் கொண்டல் முழக்கமும் கூட்டி வந்து
தமிழ் கொட்டிய கம்ப வாரிதி ஐயா அவர்களை வணங்குகின்றேன்  

வானர சேனையை வழிப்படுத்திய மாருதி போல
எங்கள் இளைஞர் படையை  இங்கு நெறிப்படுத்தி நிற்கும்
இளவல் ஜெயராமை வாழ்த்துகின்றேன்

கம்பன் புகழ் பாடி கன்னித் தமிழ் வளர்க்க வந்திருக்கும்
தமிழார்ந்த அனைவரரையும் வரவேற்கின்றேன்


சிரம் தாழ்த்தி கரம் கூப்பி என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு
இன் நிறைவு நாளில் தொடக்க உரையைத் தொடங்குகிறேன்

வானத்து சூரியன்
வழித்தோன்றல்
ராமனின்
கதை சொன்ன
கம்ப  நாடன்
தாள் தொழும்
நாள் இன்று.

அறுபதி னாயிரத்து மூன்று
மனைவியர்  
கூடியவனுக்குப்
பிறந்த
அவதார புருஷன்,

ஓர்  இல்      ஒரு சொல்     ஒரு வில்

என்று வாழ்ந்த
வாழ்க்கையை
இந்த உலகம்
வாழ்வதற்காக
எடுத்துச் சொன்ன
கவிதைக்காரன்
கம்ப நாடனைக் கொண்டாடும் நாள் இன்று.

காட்டிலே  ஈரேழாண்டு
கழித்தவன் காதையை - தன்
பாட்டிலே அறியச்செய்தான்
பாவலன் கம்ப ன்

அறத்தினால் அன்றி
புறத்து  ஒர்வழியும் இல்லை
புகழினைப்  பெறுதற்கு - என்பதைப்
புரியச் சொன்னான்
தேரெழுந்தூரினை
ஊர் வழுத்திடச் செய்த
உன்னதக் கவிஞன்

கவியினில்
சொல்லத் தக்கோன்
கம்பனன்றி - இப்
புவியினில் எவனும் இல்லை
என்ற புகழ் சேர்த்து
வள்ளல் சடையப்பன் வாழ்த்தும் நண்பன்.

கட்டுத்தறியில் கூட
கவி சொட்டும்  
வீட்டுடைக் கவிஞன்
இவனின்
பாட்டுடை த் தலைவனோ
அரவம் அணைந்த
அரி அவதாரமே.

சொந்தக் கதையல்ல
இவன் சொன்னது
வால்மீகி
சொன்ன கதை எனப் பலர்
சொல்லால்  இடித்தாலும்

எல்லாமே இல்லை
படித்ததை அறிவெனும்
பற்றுக் கோல் கொண்டு-
கவி வடித்தது எந்தன்
சிறப்பென நின்றான்.

யாப்பியல் மரபு சேர்த்து
யாழ் ஒலி சந்தம் சேர்த்து
மூப்பிலாக் காவியத்தை
மூவுலகறியத் தந்தான்

சொல்வண்ணம்
மொழி வண்ணம்
இயல் , இசை,நாடக வண்ணம்
சந்த வண்ணம் -சிந்து வண்ணம்
உண்மை, தத்துவம்,சத்தியம்   -  உரைத்த வண்ணம்,

உளவியல் நிலவியல்  புவியியல், அறிவியல்  புதைத்த வண்ணம்

கவி வண்ணம்,
அங்கு  கண்டோம்
கம்பனின்  கை வண்ணம்
எங்கும்  கண்டோம்

அரங்கண் உறங்கும்
அரங்கில் அரங்கேற்றிய
அற்புதக் காவியம்

ஆறு காண்டங்கள்

ஆற்றுப் படலம் முதல்
விடை கொடுத்தப் படலம் வரை
நூற்று பதினாறு  படலங்கள்

பத்தாயிரத்து ஐநூற்று முப்பத்து  நான்கு
பாடல்கள்
தொண்ணூற்று ஆறு வகை ஓசைகளுடன்
இராமாவதாரம் உருவானது
எப்படி? எப்படி??
நாளொன்றுக்கு
எத்தனைப் பாடல்கள் எழுதியிருப்பான்?
சிந்திப்போம்….  மெய் சிலிர்ப்போம் ….

பாற்கடல் தெய்வத்தைத் - தன்
பாக்கடலில் நீராட்டிய
கவி மாக்கடலின்
கால்  பணியும்
இவ்வேளையில்
கம்பனைத்
தமிழால்
வாழ்த்தவும்
வணங்கவும்
வந்திருக்கும் அனைவரையும்

வணங்குகிறேன்
வரவேற்கின்றேன்

இனி அரங்கு உங்கள் வசம்

நீங்களோ கம்பன் வசம்

உலக வரை படத்தில் ஒப்பந்தக் கூலிகளின் கால் தடம் இலங்கையில் மட்டுமே அவல வாழ்க்கை

உலக வரை  படத்தில் ஒப்பந்தக் கூலிகளின் கால் தடம்
இலங்கையில் மட்டுமே அவல வாழ்க்கை

அண்மையில் மொரிசியசு தீவில் ஒப்பந்தக் கூலிகளின் தடம் என்ற தலைப்பில் சர்வதேச மா நாடு ஒன்று நடந்தது . மூன்று நாட்கள் நடந்த இந்த மா நாட்டுக்கு உலகெங்கிலும்  இருந்து வந்த பதினாறூக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்களூம் , கூலிப்பணீயில் ஈடுபட்டிருந்த தலைமுறைகளின் வாரிசுகளூம் கட்டுரைகளை சமர்பித்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த ஒப்பந்தக் கூலிகளின் புலம் பெயர்வின் பின் தற்போது அவர்களின் சமூக  நிலை குறித்து சுய விமர்சனமாக அந்தந்த நாட்டை ஆய்வாளர்கள் கட்டுரை சமர்ப்பித்தனர். கென்யா, பிஜி, மொரிஷியஸ், தென் ஆப்ரிக்கா, ரே யூனியன், செயிண்ட் லூசியா, சுரினாம்,கயானா, ஆஸ்திரேலியா,  இப்படி பங்கேற்ற நாடுகளின் வரிசை வியக்க வைத்தது. அங்கு சென்ற இந்தியர்கள் , அவ்ர்களின் நான்காவது தலைமுறை ,அந் நாட்டு மக்களாக சகல உரிமைகளுடனும், தமது முந்தைய பரம்பரையின் கூலிப் பணிகளின் சுமைகளை விலக்கி கல்வி, பொருளாதாரம், பதவிகள் அரசியல் என்று சம அந்தஸ்த்துடன் வாழ்கின்றனர். அதனால் தான் தமது முன்னோர்  கடந்து வந்த பாதையின் கற்களையும் முற்களையும் எடுத்துக் காட்டி தமது சாதனையின் சரித்திரத்தைச்  சொல்லிப் பெருமைப்பட அவர்களுக்கு வாய்ப்பு கிட்டியது.
180 ஆண்டு ஒப்பந்தக் கூலி முறை பற்றிய ஆய்வு மா நாட்டினை , மூன்று நாட்கள் மொரிஷியஸ் கல்வி மற்றும் கலை கலாச்சார அமைச்சு , அபர்வாசி காட் எனப்படும் , அந் நாளில் கூலி வேலைக்காக வந்தவர் தொடர்பான அமைப்புடன் இணைந்து போர்ட் லூயிசில் , மகாத்மா காந்தி கல்வி கழகத்தில் நடத்தியது.

பிரிட்டிஷ் அரசினரால் ,உலகம் முழுவதும் ஒரு காலத்தில் கூலித் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டு வேலை வாங்கிய புண்ணியம் பிரிட்டிஷ் அரசினருக்கே உரியதானாலும், அதன் பின் அவர்கள் தலை தூக்கியது வரலாற்று உண்மையாகும்.

ஆனால் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்து இலங்கை பொருளாதாரத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கும் தோட்டத்தொழிலாளார்கள் இன்னும் லயன் வீடுகளில் இருப்பதும் , மருத்துவம், சுகாதாரம்கல்வி , அடிப்படைத் தேவைகள் இன்ன பிற விடயங்களில் பின் தங்கியிருப்பதும் சமூகத் துயரமே.உலக அளவில் ஒப்பந்தக் கூலி தலைமுறையினரின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக இருந்தது.அதே சமயம் இலங்கையில் அந்த சமூகம் இருக்கும்  நிலை தலை குனிவை ஏற்படுத்தியது.
 
முதல் நாள் விழா இந்திய வெளி விவகார அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் உரையுடன்  தொடங்கியது.உலகம் பூராவும் உள்ளா ஒப்பந்தக் கூலி நாடுகளை பட்டியலிட்டவர் ஏனோ இலங்கையை மறந்து விட்டார்.சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தம் ஐம்பது வயதை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் கவனயீனம் கவலைக்குரியதாகும்.

தவிர இந்திய ஒப்பந்தக் கூலிப் பயணத்தில் இலங்கை மட்டுமே கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது.அவர்களுக்கென்றே தனி துணைத் தூதரகம் ஒன்றும் , நிதியங்கள் பலவும், பல நலத்திட்டங்களும் , காலம் காலமாக நின்ற நாடற்றோர் பிரச்சனைகளூம் இப்படியான ஒரு மா நாட்டில்  குறிப்பிடப் படாமை கவனத்தை ஈர்த்தது., அதுவும் பதுளை மண் சரிவும், லைன் வீடுகள் நிலைமையும் சமூக வலைத் தளங்களில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த மறதி கவனிக்கப் பட்டிருக்க வேண்டும்.

நல்ல வேளை இலங்கை மலையக மக்கள் தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரையும், எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் படைப்பான மலையகத் தமிழர் பற்றிய ஆவணமும் நிகழ்வில் இடம் பெற்றது மேற்படி குறையை நிவர்த்தி செய்தது.ஆவணம் பற்றி அறிமுகத்தை செல்வி ஜீவா சதாசிவம் நிகழ்த்தினார்.

கூட்டத்தில் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சபை ஒரு நிமிட மௌன அஞ்சலியை பதுளை மண் சரிவினால் காணாமல் போன , உயிரிழந்த மக்களூக்காக செலுத்தியது.யுனெஸ்கோவின் இன் நிகழ்வுக்கு பொறுப்பாளரான அதிகாரி இது குறித்து மேலதிகமாக கேட்டறிந்தார்.

சிட்னி லிண்ட் கபே பணய நாடகம்- நடந்தது என்ன?

சிட்னி லிண்ட் கபே பணய நாடகம்
நடந்தது என்ன?

சிட்னியின் மார்ட்டின் பிளேஸ் பகுதி. சிட்னியின் மத்திய வர்த்தக மையமான  சிட்னி அகநகர்ப் பகுதியில்  வழக்குரைஞர்களின் முக்கிய  சந்திப்புமையம் லிண்ட் கபே. முகத்தில் அறையும்  கோடைகால வெய்யில் . பலர் இருந்து பேசி, உணவருந்திக்கோண்டிருந்தனர்.

காலை பத்து  மணியளவில் திடீரென வழக்கத்துக்கு மாறான பரபரப்பு தொடங்கியதுஎங்கு திருப்பினாலும் போலீஸ் தலைகள். பல அலவலகங்கள் , நீதிமன்றங்கள் உட்பட கட்டாய வெளியேற்றம் தொடங்கி இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. உயர் நீதிமன்றத்திலிருந்து இரண்டே நிமிடத்தில் இருந்த லிண்ட் சொக்கலேட் கபே வாசலில் பொலீஸ் குவிந்திருந்தது. பொலிஸ்மூடுங்கள் மூடுங்கள் என்று கத்திக் கொண்டிருந்தனர்.மக்கள் சிதறியோடத்தொடங்கியதைக் காணக் கூடியதாக இருந்தது.

தொடர்ந்து பல தெருக்களைக் கடந்தும்  இந்த பரபரப்பும் பயமும்  அடுத்தடுத்த தெருக்களிலும் தொற்றிக் கொண்டது. மக்கள் ஓடத்தொடங்கி இருந்தனர். நகர சுற்றுக்குள் இயங்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வாகனப்போக்குவரத்து ஒழுங்கு  மீறிக்கொண்டு இருந்தது. வாடகைக்கார்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. எல்லோரும் சிட்னி நகர எல்லையைக் கடந்து  போவதிலேயேக் குறியாக இருந்தனர்.
லிண்ட் கபே  கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர்  மற்றும் , தற்போதய முதல்வர்  அலுவலகமும், மேலும் பல முக்கிய அலுவலகங்களூம் அமைந்துள்ளன. நீதிமன்ற வளாகங்களும், ரிசர்வ் வங்கி கட்டடமும் , வங்கி, செவன் தொலை காட்சி நிலையக் கலையகம் மேலும் பல முக்கிய நிறுவனங்கள்  இயங்கும் இடம்.
அரை மணி நேரத்துக்குள் பொலீஸ் முற்றிலும் லிண்ட் கபேயைச் சுற்றி வளைத்ததுடன்  சுற்றியுள்ள முக்கிய தெருக்கள் மூன்றையும் தடை வலையமாக்கியது.தொடர்ந்து முழு நகர எல்லையும் சீல் வைக்கப்பட்டு, முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் உள்ளே இருக்கும் ஆட்களுடன் மூடப்பட்டன.
எட்டாவது செல்போர்ன் சேம்பரைச் சேர்ந்த பாரிஸ்டர்கள் கட்ரீனா டாசன், ஜூலி டெய்லர் ஆகியோர் 9.30 அளவில் வழக்கமான லிண்ட் கப்பாச்சினோவுக்காக வந்திருந்தனர். எட்டு பணியாளர்களுடன் , சுமார் பதினோரு வாடிக்கையாளர்களுடன் கபே இயங்கிக் கொண்டிருந்தது.
கபேயின் தானியங்கிக் கதவு வழியாக சுமார் ஐம்பது வயது மனிதன் ஒருவர் நுழைந்தார்.தலைப்பாகையும், கையில் நீல நிறப் பையும் வைத்திருந்தார். மேன் ஹாரொன் மொனிஸ். மொனிஸ் இன்னும் சில வினாடிகளில் மொனிஸ்டராக (பூதம்) மாறுவார் என்று  அப்போது யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை.நீலப்பையில் ஒளிந்திருந்த துப்பாக்கியையும் யாரும் அறிந்திருக்கவில்லை. வந்தவுடன் அவர் தானியங்கிக் கதவை நிறுத்தியதின் காரணமும் புரியவில்லை.

சடுதியில் மொனிஸ் , அங்கிருந்த 17 பேரையும் தரையில் உட்காரும் படி  கட்டளையிட்டார்.எனா நடக்கிறது என்று சுதாரித்துக்கொள்ளும்  முன் எல்லாம் நடந்து விட்டது. வெளியிலிருந்து இதைப் பார்த்த ஒரு பெண்மணி பொலீசுக்கு தகவல் சொன்னார்.

9.45 க்கு இன்னொரு பணியாளர் ப்ரூனோ வந்த போது உள்ளே நுழைய முடியாத படியால் அவரும் கண்ணாடி வழியாக உள்ளே நடப்பதைக் கண்டார்.
திடீரென பணியாளர் சென் என்ற இளம் பெண்னின் பேயறைந்தது போன்ற  முகம் கண்ணாடியில் தோன்றியது. மொனிஸ் இட்ட ஆணையின் படி அரேபிய எழுத்துக்களைக் கொண்ட கருப்புக் கொடி ஒன்றைக் கண்ணாடி சுவற்றில் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தார்.அதில் அல்லாவவை அன்றில் வேறொரு தெய்வம் இல்லை என்று எழுதியிருந்தது.
இப்போது பொலீஸ் மார்ட்டின் இடத்தை விட்டுப் பொது மக்களை அகற்றத் தொடங்கியிருந்தது. கபேக்கு நேர் எதிரே அமைந்திருந்த செனல் செவன் தொலைகாட்சியின் கலையகத்து ஊழியர்களும் அகற்றப்பட்டனர்.இருவர் மட்டும் லிண்ட் கபேயில் நடப்பதை படம் பிடிக்க பொலீஸ் ஆணையின் பேரில் கேமராவை இயக்கப் பணிக்கப்பட்டனர்.
அந்த நிமிடம் , கண்ணாடி மீது அழுத்தப்பட்டிருந்த சென்னின் கைகள்  உலகம் முழுவதும் ஒளிபரப்பானது.

மதிய அளவில் மிகயில் என்ற பணய்க் கைதி தனது முக நூலில், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இட்ட செய்தியில் “நான் லிண்ட் கபே யில் ஐ எஸ் உறுப்பினரிடம் பணயக் கைதியாக இருக்கிறேன் .அவர் மிக எளிய வேண்டுகோளினை முன் வைத்திருக்கிறார்.அவை ஏற்கப்படவில்லை. அதனால் எங்களைக் கொல்வதாகக் கூறுகிறார்.” என்று குறிப்பிட்டார்.
மாலை 4.35 – 5 மணிக்குள் நான்கு பணயக் கைதிகள் வெவ்வேறு கதவுகள் மூலம் தப்பினர்.மொனிஸ் கைதிகளைப் பயன் படுத்தி  வானொலி நிலையங்களை அழைத்தும், யூ டியூப் மூலமாகவும்  தனது கோரிக்கைகளை முன் வைக்கத்தொடங்கினான்.தன்னை சகோதரர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டான்.
கோரிக்கைகள்:
ஐ எஸ் கொடி அனுப்பி வைக்கவும்.
ஊடகங்களில் ஆஸ்திரேலியா ஐ ஏஸ் தாக்குதலுக்குள்ளாகியது என அறிவிக்கவும்.
பிரதமருடன் பேச வேண்டும் அது நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும்,
.
அப்படி செய்தால் ஐவர் விடுவிக்கப்படுவார்கள்.

இன்னொரு கைதி,  ”மூன்று குண்டுகள், ஜோர்ஜ் தெருவில், மார்ட்டின் இடத்தில், சேர்குலர் கீ ஆகிய இடங்களில்  உள்ளன.அவை வெடிப்பதைதடுக்க உடனே கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றார்.தொஅடர்ந்து பல கைதிகள் பிரதமர் உடனே அழைக்க வேண்டும் என்று தகவல் அனுப்பத் தொடங்கினர்.
அதிகாலை இரண்டு மணியளவில் மொனிஸ் கண்கள் களைப்பாலும் , தூக்கத்தாலும் ஆட்கொள்ளப்பட்டது. அப்போது சிலர் தப்பியோட முயன்றனர்.மொனிஸ் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். கபேயின் நிர்வாகி டோரி ஜோன்சன் சுடுவதை தடுக்கத் தொடங்கினார். மேலும் ஆத்திரமடைந்த மொனிஸ் டோரியை அடித்து துன்புறுத்தி , இறுதியில் சுட்டான்.
மேலும் ஐந்து  நிமிடங்களில் இந்தியாவை சேர்ந்த  விஸ்வனாத் ரெட்டி உடப்ட மேலும் ஆறு பேர் வெளியேறினர்.துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் வேறு வழியில்லாமல் பொலிஸ் நுழைய வேண்டி வந்தது.
ஐந்தே நிமிடங்களில் கண்ணாடிக் கதவை சிதறடித்து பொலிஸ் உள்ளே நுழைந்தது.கடைசி சில நிமிடங்களில் மொனிஸ் ஆடிய நாடகம் முடிவுக்கு வந்தது.பாரிஸ்டர் கட்ரீனாவின் உயிரைக் குடித்த குண்டுக்கு சொந்தக்காரர் யார் என்பது இன்னும் உறுதி படுத்தப் படவில்லை.பலர் காயமுற்றனர்.
இந்த முற்றுகையின் மூலம்  அரசுக்கு மிரட்டல் விடுவது, விளம்பரம் ,அச்சுறுத்தல் ஆகியவையே மொனிஸ்சின்  முதன்மையான நோக்கங்களாகும்.
ஹாரொன் மொனிஸ்  ஆம் ஆண்டில் ஈரானில் இருந்து வந்து  ஆஸ்திரேலியாவினால் அகதியாக அங்கீகரிக்கப்பட்டவன். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் போரிட்டு இறந்த  ஆஸ்திரேலிய படை வீரர்களின் குடும்பங்களுக்கு அவதூறுக் கடிதங்களை அனுப்பி வைத்தவன்.
தவிர  தனது முன்னாள் மனைவியைக் கொன்றதற்கு உடந்தையாக இருந்தவன்.  ஷேக் என்று தனக்கு தானே  பட்டமளித்துக் கொண்டு , ஆன்மீக ஆற்றுதல் என்ற பெயரில் பல பாலியல் குற்றச்சாட்டுகளை செய்தவன். மேற்படி காரணங்களுக்காக  சுமார் ஐம்பது  வழக்குகளை எதிர்கொண்டவன்.
பல குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரின் நடவடிக்கைககள்  எப்படி அலட்சியம் செய்யபட்டது என்பது கேள்வியாக உள்ளது.பொலீசும்,  அரசும் ஏன் நடவடிக்கை எடுக்க தாமதம் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இது பற்றி துரித பரிசீலனை நடத்துமாறு மத்திய அரசாங்கமும், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கமும் உத்தரவு பிறப்பித்துள்ளன. கடந்த காலத்தில் வன்முறைகளில் ஈடுபட்டவராகவும், மனநிலை பிறழ்ந்தவராகவும் கருதப்பட்ட நபர் கொடிய குற்றச்செயலின் பின்னரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதன் காரணம் தெரிய வேண்டியிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மொனிஸ்சை 14 வருடங்களுக்கு ஈரான்னில் செய்த குற்றச்செயல்களுக்காக விசாரிக்க, ட  அவனை நாடு கடத்துமாறு ஈரான்  அழைப்பு விடுத்திருந்ததை, அவுஸ்திரேலியா  ஏற்றுக்கொள்ளவில்லையென ஈரான் பொலிஸ் திணைக்களத்தின் தலைமை அதிகாரி தெரிவித்திருக்கிறார்..
ஒற்றை மனிதன் பதினேழு மணி நேரம் அரசுடன் பேரம் பேசி இருப்பதென்றால் , இந்த பலவீனம்  தீவிர வாதத்தின் பலமாகி விடக் கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையுமாகும்.தவிர

ஆஸ்திரேலியாவில் அகதிக் கொள்கைகள் இறுக்கமடைந்து வரும் இவ்வேளையில்,    பல்லினக் கலாசாரம் பயங்கரவாதத்தை பரிசளிக்கும் பட்சத்தில்    எதிர்கால அகதிக் கொள்கை, மதம் சார்ந்த  அணுகுமுறைகள் செயற்பாடுகள்   மோசமாக மாறக் கூடிய எதிர் விளைவுகளை , சூழ்னிலையை  உருவாக்கி விட்ட மொனிஸ் ஆஸ்திரேலிய மக்கள் மட்டுமல்ல அகதி நிலைக் கோரும் அனைவரும் தூற்றும்   என்ற மொனி(ன்)ஸ்டர் என்பதில் தவறில்லை.