Google+ Followers

Monday, March 17, 2014

இந்தியாவின் விடுதலை இன்னும் கிட்டவில்லயா? மார்ச் 2014

இந்தியாவின் விடுதலை இன்னும் கிட்டவில்லயா?


கற்புக்கு கால காலமாக வரைவிலக்கணங்களையும் உதாரணங்களையும் , புராணங்களையும் பங்களித்து வரும் , வந்த   நாடு இந்தியா.அண்மையில், கிராமத்து தலைமைத்துவ  உத்தரவின் பெயரில் ஒரு பெண்ணை குழுவாக கற்பழித்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடந்துள்ளது.இதற்கு தண்டனையாக
இந்த  மாதம் ஐம்பது வயது  வெளி நாட்டு பெண்ணை கற்பழித்த பெருமை இந்திய குடி மக்கள்  குழுவினருக்கு   கிட்டியுள்ளது. அதுவும் தலை நகர் புடில்லியில். அத்ற்கு முன் சுவிஸ் பென், பின் இங்கிலாந்தை சேர்ந்த பெண் அதன் பின் அமெரிக்க பெண்.இவற்றைத்  தொடர்ந்து பல நாடுகள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பாலியல் வன்முறைகளே உச்சம் பெற்றிறருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள் கற்பழிப்புக்களின் எண்ணிக்கை 57 சதவீதமாக எகிறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வோரு 21 நிமிடமும் ஒரு பெண் கற்பழிக்கப் படுவதாக 2012  ஆண்டு  புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இதில் என்ன வேடிக்கை என்றால் கற்பழிப்புகளை வித விதமாகச் செய்ய வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது கற்பனை அல்ல, ஓடும் பஸ்ஸில் மாணவியை கற்பழிப்பது, ஐந்து வயது மகளை கற்பழித்த தந்தை, வேறு சாதியில் மணமுடித்த பெண்ணை குழு கற்பழிப்புக்கு உத்தரவிட்ட கிராமத்து தலைமை, மருமகளை கற்பழித்த மாமனார், பணிப்பெண்ணை கற்பழித்த வீட்டுத் தலைவர்  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்படியானால் மகாத்மா காந்தி சொன்னதன் படி  ’எப்போது நள்ளிரவில் எவ்வித அச்சமும் இல்லாமல் ஒரு பெண் நடமாட முடிகிறதோ அப்போதுதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது  என்ற அர்த்ததின் அடிப்படையில் இந்தியாவின் விடுதலை இன்னும் கிட்டவில்லையா?


இந்தியாவின் ‘காதல் கோயில்’ (கோட்டை)

இந்தியாவின் ‘காதல் கோயில்’ (கோட்டை)
’கஜுராஹோ’
ஆருத்ரா
இந்தியாவின் ‘காதல் கோயில்’ (கோட்டை) எங்கிருக்கிறது  தெரியுமா? இந்தியாவில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ‘பண்டேல்கந்த்’ என்ற கிராமத்தில்  கஜுராஹோ கோயில் அமைந்துள்ளது. ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த சண்டெல்லா அரசர்களே இவற்றை உருவாக்கியவர்கள். இக்கோவில்கள் சிற்றின்பம் சார்ந்த சிற்பங்களளைக் கொண்டு இருப்பதால் காமசூத்திரா கோவில்கள் என்றும்  இக்கோவில்கள்  அழைக்கப்படுகின்றன.
‘கஜூரா’ என்றால் அதற்குப் பேரீச்சம்பழம்  என்று  அர்த்தமாகும்.இந்தக் கோவில்களைக் கட்டிய காலம்   950 ஆம் ஆண்டு மற்றும் 1150 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் எனப்படுகிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக இந்த நினைவுச்சின்னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் மேலும் ஜெகதாம்பி தேவி ஆகிய தெய்வங்களுக்கு  இங்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பின் எப்படி ‘காதல் கோயில்’ என்று நீங்கள் கேட்கும் அவசரம் புரிகிறது. காதலுக்கு முக்கிய தேவை பொறுமை.கோவிலின் உள்ளே பேரின்பத்துக்கும் கோவிலின் வெளியே சிற்றின்பத்துக்கும் முக்கியத்துவம் அளித்து இக் கோயில் கட்டப் பட்டுள்ளது. இறைவனை அணுக ஒருவன் தன்  உடல் இச்சைகளையும், சிற்றின்ப   விருப்பங்களையும் கோவிலுக்கு வெளியே விட்டு வரவேண்டும் அப்போதே பேரின்பம் கிட்டும் என உருவப்படுத்திக் காட்டுகிறது.

இங்குள்ள சிற்பங்கள்  ஜைன , பிரமண்ய முறைகளின் படி அமைந்துள்ளன.கோயில் அமைப்பு கைலாய மலையை ஒத்த அடுக்குக்களின் அமைப்பை ஒத்தது.
பண்டைக் காலத்தில் ஆண்கள் தமது இளம் பிராயத்தில் பிரம்மசார்யம் காப்பது மரபாக இருந்தது. ஆசிரமங்களில் தங்கி முனிவர்களைக் குருவாக கொண்டு,  பிரம்மசரியம் புலன்களை அடக்கி கல்வியே நெறியாக இருத்தல் , கிருஹஸ்தம் இல்லறத்தில் நல்லறம் காண்பது , வானப்பிரஸ்தம் மனைவியுடன் காட்டில் வாழ்வது, முக்தி அபீஷ்டம் அடுத்த பிறவி எடுக்காமல் முத்தி எடுப்பதற்கு  இருக்க வேண்டிய கடமைகளை  ஆற்றுவது ஆகிய  நான்கு நல் நெறிகள் பிராமணர் மரபாக இருந்தது.
இக் கோயிலின்  வெளிப்புறத்தில்  காணப்படும் சிற்றின்ப சிற்பங்கள் பிரம்மசார்யம் காத்தவர்கள் தங்களை உலகியல் வாழ்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளவும், குடும்பத்தலைவர்களாகவும்,  நல்ல கணவனாக உருவாகவும் கற்றுக் கொள்வதற்காகவே  இந்தச் சிற்பங்களை உருவாக்கினார்கள் என்றே கொள்ள வேண்டும்.
வெறும் பாலியல் சம்பந்தப்பட்ட சிலைகள் மட்டுமே இருக்கும் என்று எண்ணினால் அது மிகவும் தவறு. அங்கே உள்ள இருபத்தி இரண்டு  கோயில்களில் நான்கு அல்லது ஐந்து கோயில்களில் மட்டுமே பாலியல் சம்பந்தமான சிற்பங்கள் இருக்கும். ஏனைய  கோயில்களில் ஆன்மிகம் சம்பந்தமான சிலைகளே உள்ளன என்பதே உண்மை.
இச் சிற்பங்கள்  சித்தரிக்கும் உலகியல் இன்பங்களைக் கவனிப்பதன் மூலம்  உடல் சார்ந்த துய்ப்பிற்குத் தேவையான கல்வியை கற்றுக்`கொடுக்க முனைப்பதே இந்த சிற்பங்களின் நோக்கமாகக் கொள்ள வேண்டும். பாலியல் கல்வியின் பயன் பாட்டிற்கே இந்த சிற்பங்கள் கருவிகளாக இருந்திருக்க வேண்டும்.

யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கஜுராஹோ என்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஏறத்தாழ பதின் மூன்றாம்  நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோயில் . பத்தொன்பதாவது  நூற்றாண்டில் கஜுராஹோவில் எண்பதிற்கும்  மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இப்போது மிச்சமிருப்பவை சுமார் இருபது  கோயில்கள் மட்டுமே. ஆனாலும் இருபதாம்  நூற்றாண்டினை எட்டும் வரை யாருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிய செய்திகளோ சிறப்புகளோ தெரிந்திருக்கவில்லை. இதற்கு காரணம் பல படையெடுப்புகள் இந்தியாவை ஆக்கிரமித்தன. குறிப்பாக பிரிட்டிஷ் ராச்சியம் இங்குள்ள கலைசெல்வங்கள் அனைத்தையும் கொண்டு போய் விடக் கூடாது என்பதில் இங்குள்ள மக்கள் குறியாக இருந்திருக்கின்றனர்.அதனால் தான் இந்த கோயில்கள் இருக்கும் இடத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட காலம் வரை காடு வளர்த்து , இக்கலைச் செல்வங்களை மறைத்து வைத்திருந்தனர்.
இந்தக் காமச்சிற்பங்களுக்கு  பலர் பலவித அர்த்தங்களை சொல்கின்றனர். சிலர் இவற்றை, பழங்குடிக்கடவுள்களின் இனப்பெருக்கச் சடங்குகள் என்று கூறுகிறார்கள். வேறு சிலர், மறைந்திருக்கும் ஆன்மீக படிமப்பொருள்களை சூட்சுமமாக அறிவிப்பதாகப் பார்க்கிறார்கள்.

இங்குள்ள சிற்பங்கள் தாந்திரிக முறையில் ஈடுபடும் பாலியல் (Tantric Sex ) முறைகளையும் வழக்கங்களையும்  குறிப்பிடும் விதத்தில் அமைந்துள்ளன.
தாந்த்ரீக அண்டம் (Tantric Cosmos) ஆண் பெண் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆண் உருவமும் ஆற்றலும் கொண்டது.பெண் சக்தி கொண்டது.இரண்டும் இணையும் போதே அண்ட சராசரம் இயங்கும் என்பதே இந்து மற்றும் தாந்த்ரீக தத்துவமாகும். ஒன்றில்லாது மற்றொன்று இயங்காது.

'ஆக்ஸ்ஃபோர்ட் பாரம்பரிய வரிசையில் அடங்கும்  நூல் வரிசையில்  இடம் பெற்றுள்ள , ’தேவங்கன தேசாய்’ எழுதியுள்ள  , ‘கஜுராஹோ’  என்ற நூல்  காமம் சார்ந்த இந்தியக் கலைகளின் வேறு பல முகங்களை ஆராய முட்படுகின்ற நூல் ஆகும். தேசாய் சிக்கலும், பரந்ததுமான காமம் என்ற  பொருளைப் பற்றி, அதன் பல முகங்களையும், தன் ஆழ்ந்த  புரிதல்களையும் கொண்டு ஆராய்வதற்கு முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளார். அதே நேரத்தில் காமம் என்ற பண்டைத்தொழிலை கொச்சைப்படுத்தாமலும், அதன் அழகியலையும் , ரசனையையும் மேம்பட்டு சிலாகித்தும்,   கலை வளத்தினை போற்றி இருப்பதையும் பாராட்ட வேண்டும்.

காமம், ஆன்மீகத்தின் பெளதீக வெளிப்பாடு என்பது தேசாயின் இந் நூல் கூறும் கருத்தாகும்.
’மனித உடல், ஆண், பெண் என்பது துவைதத்தின்  (இரட்டை நிலை)உச்சநிலை. இந்தத் துவைதம் பெளதீகமான நிலையில் மீண்டும் இணைவது ஆரம்ப அத்வைத (ஒருமை) ஒருண்மையான பேரானந்தத்துக்கு திரும்பிச்செல்ல வழிவகுக்கிறது. ஆகவே காமம், ஆன்மீகத்தின் பெளதீக வெளிப்பாடு ' என முடிக்கிறார்.

என்ன மத்தியப் பிரதேசம் செல்லத் தயார் ஆகிறீர்களா?அனந்த சயன அழகுறையும் திருவனந்தபுரம்!

அனந்த சயன அழகுறையும் திருவனந்தபுரம்!

சந்திரிகா சுப்ரமண்யன்

                வனப்பு மிக்க தென்னை மரங்களும், வலிமைமிக்க புன்னை வனங்களும் தாலாட்டும் கேரளத்தின் நுரை பொங்கும் கடற்கரையின் அழகு நயத்தில் கண்மூடித் துயில்கிறான் மாதவன், அந்த மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் மயங்கி உறங்கிய அனந்த சயனத்தை குறித்து திருவனந்தபுரம் என்ற திருநாமம் அத்தலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
                கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் திருக்கோயில் அவ்வூர்க் கோட்டையில் அமைந்துள்ளது. கலைநயமும், சிற்ப, பாரம்பரிய, புராணப் பெருமைகளையும் பெற்றுள்ள இத்திருத்தலம் கேரள மக்களின் மத, கலாச்சார, சமூக வாழ்க்கையுடன் இறுகிய பிணைப்பையுடையது.
தங்கக் கலசங்கள்
                ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் எழிலுடன் எழுந்து நிற்கும் இக்கோயிலைச் சுற்றி கோட்டை மதில்கள் காவல் நிற்கின்றன. கருங்கல்லாலான கோயில் கோபுரம் தமிழகக் கோயில்களைப் பின்பற்றி கட்டப்பட்டது. நூறு அடிகள் உயரமான இக்கோபுரம் ஏழு நிலைகளையும், பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளையும் உடையது. உச்சியில் ஏழு தங்கக் கலசங்கள் ஆதவன் அணைப்பில் தகதகத்துக் கொண்டிருக்கின்றன. மூலவாசலின் கனத்த கதவுகள் பல அரிய கலைப் பொக்கிஷங்களைத் தாங்கி நிற்கின்றன. கோயிலினுள் சுமார் முந்நூறு தூண்களும், அத்தூண்களில் விளக்கு தாங்கிய பெண்மணிகளின் சிற்பமும் காணப்படுகின்றன.
கருவறைக் கடவுள்
                உள் கருவறை இரண்டு அடுக்குகளை உடையது. கேரள மாநிலத்துக்கே உள்ள சிறப்பான சிற்ப அலங்காரங்களைத் தாங்கி நிற்கின்றன. உள்ளே நாபியில் கமலத்தை தாங்கிய பத்மநாபன் பள்ளி கொண்டிருக்கிறான்.
                மையுண்ட விழிகள் மூடிக் கிடக்க, ஆதிசேஷனின் நிழலில், அழகு வதனத்தில் அடிக்கோடிடும் சிரிப்புடன், கையை அணையாகக் கொண்டு கண்மூடி சாய்ந்திருக்கும் வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, மாயனைமன்னு வடமதுரை மைந்தனை, மாதவனை, மண்ணு' புகழ் கேசவனை கேரள மக்கள் மட்டுமல்ல உலகத்து சைவ, வைணவர் வந்து வணங்குகின்றனர்.
                கருவறையை சுற்றிலும் உள்ள சன்னதிகளில் கிருஷ்ணர், சாஸ்தா, வியாசர், சிவன், ராமன், சீதை, லட்சுமணன், நரசிம்மன், அநுமான் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. கோயில் சுவர்களில் பல புராண உண்மைகள் படமாகத் தீட்டப்பட்டுள்ளன.
கோயிலின் காலம்
                பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் காலம் பற்றி கூறும் பல ஓலைச்சுவடிகள் உள்ளன. துளுபிராமண முனிவரான திவாகர முனிவரின் காலத்துடன் ஒத்துக் கூறப்பட்டுள்ளது. இன்னொரு சுவடி வில்வமங்களம் சுவாமியர் காலத்தியதாக நிற்கிறது. வைணவப் பெரியார் நம்மாழ்வாரின் படைப்புகள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இக்கோயில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன.
புதிய சிலை
                பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்த்தாண்டவர்ம மகாராஜா என்ற கேரள மன்னரின் காலத்தில் இதன் சீரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது தான் முன்பிருந்த ஸ்ரீ அனந்த பத்மநாதர் சிலை அகற்றப்பட்டு தற்போதுள்ள சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சிறப்பான ஒரு கருவி மூலம் மேற்கொள்ளப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன.
சிற்பச் சிறப்பு
                திராவிட, கேரள சிற்பக்கலை முறைகளை இணைத்து படைக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மலையாள, சமஸ்கிருத கல்வெட்டுகள் 1729 முதல் திருத்தியமைக்கப்பட்டு வந்துள்ளதை உணர்த்தி நிற்கின்றன. விளக்கு மாடத்தின் ஒருபகுதி 1934 இல் தீக்கிரையாகி மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
                சீவலி மண்டபம், குலசேகர மண்டபம் என்ற மண்டபங்களைத் தவிர ஒட்டக்கால் மண்டபம் கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது.
ஸ்ரீபலிபுரம்
                இருபது சதுர அடிப் பரப்பும், அரையடி தடிமனுள்ள ஒற்றை பளிங்கு கல்லால் அமையப் பெற்றது இம் மண்டபம். அங்குள்ள சான்றுகள் ஸ்ரீபலிபுரம் என்ற பீட மண்டபத்தை உருவாக்க நாலாயிரம் சிற்பிகளும், ஆறாயிரம் சிற்றாள் மற்றும் நூறு யானைகள், சுமார் ஏழு மாதங்கள் பாடுபட்டள்ளனர் என்று செப்புகின்றன.
துவஜ ஸ்தம்பம்
                இங்குள்ள துவஜ ஸ்தம்பம் எண்பதடி உயரம் உடையது. இது பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது. உயர்ரக தேக்கு மரத்தில் கைதேர்ந்த வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தேக்கு மரம் சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நிலத்தில் படாமல் யானைகளைக் கொண்டு சுமந்து வரப்பட்டது எனப்படுகிறது.
தீர்த்தம்
                இங்குள்ள பத்ம தீர்த்தம் தவ தீர்த்தமாகும். இங்குள்ள இன்னொரு மண்பமான நமஸ்கார மண்டபத்தில் பல சித்திரக்கலைப் பொக்கிஷங்கள் உறைகின்றன.
ராஜ மரியாதை
                ஆண்டாண்டு காலமாக இராஜ பரம்பரையின் தொடர்புகளை பெற்றிருந்த இக்கோயிலில் 1750 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் அனைத்து உரிமைகளும் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ராஜ மார்த்தாண்டவர்மா தன் வாளை ஸ்ரீ பத்மநாத சுவாமி பாதங்களில் வைத்துப் பணிந்தார். அதன் பின்தான் மக்களை ஆளும் பிரதிநிதியாக பத்மநாத சுவாமியின் பாதங்களிலிருந்த வாளை ராஜ மரியாதையோடு எடுத்துச் சென்று ஆட்சியைத் தொடங்கினார். இந்த விசித்திரமான பணிக்காக மார்த்தாண்ட வர்மருக்கு பத்மநாததாசர் என்ற பெயர் வழங்கப்பட்டது. திருவாங்கூர் இந்திய அரசுடன் இணைந்தபின் இன்றும் இப்பழக்கம் வழக்கத்தில் உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
திருவிழா
                கொடியேற்றம், பள்ளிவேட்டை, ஆராட்டு என்று கேரள விழாக்களுடன் பத்துநாட் திருவிழா இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் நடக்கிறது. கருட வாகனத்தில் பெம்மான் உலாவும் அழகே அழகு. பெம்மான் சங்கு முகம் எனப்படும் கேரளக்கடல் நதிக்கன்னியுடன் கலக்கும் இடத்தில் நீராடும் காட்சியே காட்சி.
                இவை தவிர இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் பெறும் இலட்சதீப நிகழ்ச்சி, பெருமானின் திருநட்சத்திரமான திருவோணம் ஆகியவை தீபங்களால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்படும் நன்னாளாகும்.
                குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
                மெத்தென்று பஞ்ச சயனத்தின் மேலேறிக்
                கொத்த மலர் பூங்குழல் நப்பின்னை பொய்கை மேல்
                வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
                மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
                எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
                எத்தனை யேனும் பிரிவாற்ற கில்லாயால்
                தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்
என்று திருப்பாவை போற்றும் கார்மேனிச் செங்கண்ணன் கனிமுகமும் கமலப் பாதங்களுமே காத்தருளும்.
Sunday, March 2, 2014

தலையங்கம் 2013 நவம்பர்

மிக பரபரப்புடன் பேசப்பட்ட குயின்ஸ்லாந்து, பண்டர்பேர்க் மருத்துவர் பட்டேல் வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது மருத்துவர் பட்டேல் சகலக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப் பட்டிருக்கிறார். அவருக்காக வாதாடிய  பாரிஸ்டரிடம் இது குறித்து பத்திரிகைகள் “பண்டர்பேர்க் மக்களுக்கு நியாயம் வழங்கப் பட்டதாக நினைக்கிறீர்களா என்று கேட்ட  கேள்விக்கு, ”நியாயம் என்பது சாட்சிகளின் அடிப்படையில் வழங்கப் படுவதாகும். சமூக பிரங்க்ஞையுடன் சமுதாயத்தில் கொடி கட்டிப் பறப்பதால் கிடைப்பதல்ல.”  என்று கென் ப்ளெமிங், கியூசி, பதில் அளித்துள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை முதல் , பொது நல வாய அமைப்புகள் வரை அனைத்தும் மறைமுகமாக  இதே அடிப்படையில் தான் செயல் படுகின்றன என்றே படுகிறது. குறிப்பாக  இலங்கை நிலைமை குறித்த நிலைப்பாட்டின் முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை இதன் அடிப்படியில் தான் வந்திருப்பதாக தோன்றுகிறது. உள் நாட்டு அவலங்கள் தொடர்புடைய சாட்சிகள் எத்தனை வலுவாக இருந்தாலும் கவனிக்கப் படாமல்,  நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் பேணப் படுவது  மேற்படி கூற்றுடன் ஒத்துப் போவது போலத்தான் தெரிகிறது. பொது நல வாய அமைப்பு மாநாடு இன்னும் ஒரு படி மேலே போய் காலுக்குத்தான்  காலணி பொருந்தாமல், காலணிக்கு ஏற்றவாறே கால் பொருந்தும் வகையில் பொது நல வாய அமைப்பு மாநாடு காத்திருந்து மாநாட்டை தள்ளி வைத்து இலங்கையில் நடத்தியுள்ளது .

சட்டத்துறையில்  பணி  செய்வோருக்கு முதல் கடமை சட்டத்துக்கும், அடுத்த கடமை நீதிமன்றத்துக்கும் அதன் பின்னரே தன் கட்சிக்காரருக்கும் என வகுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு கடமைப் படுவது  என்பது நீதிக்குத்   தலை வணங்குவதாகும். இது  போலவே  ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் உலக நீதிக்கு தலை வணங்க வேண்டியது கடமையாகும். உலக நீதி என்பது ராஜ தந்திரம் என்பதற்கு அப்பாற் பட்டது. அதைப் போலவே பொது நல வாய அமைப்பும் அதற்குட்பட்ட  நாடுகளின் நலம் கருத வேண்டும்.தவறுகள் நிகழும் போது தலையில் குட்ட வேண்டும்.  நல்லது நடக்கும் போது முதுகில் தட்ட வேண்டும். அப்போது தான் நீதி நிலைக்கும்.

மீண்டும் முதல் பத்திக்கு போவோம். ’சமூக பிரக்ஞை’ , ’உலக நன்மை’, இன்று இவை  எந்த அளவில்  ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளின் நோக்கமாக அமைந்துள்ளன என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது. இவ்  அமைப்புகளின்  நியாயம் எப்படி அநியாயத்தின் கைப்பாவையாகி உள்ளது என்பதுவும் முதல் பத்தி பதிலின் காரணமாக எழும் வேதனையை ஒத்த உணர்வைத் தருவதாகவே இருக்கிறது

தலையங்கம் செப்டெம்பெர் 2013

இலங்கைப் பிரச்சனையை வைத்தே இந்திய   தேர்தல்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக தமிழக தேர்தல்களில் இலங்கைப் பிரச்சனை தொடர்பான தேர்தல் கொள்கைகள் முக்கிய பங்கு வகித்தன.தேர்தல்கள் முடிந்த பின்னர் இந்தக் கொள்கைகள் அனைத்துக் கட்சிகளினாலும் உடைப்பில் போடப்படும் என்பது சரித்திரச் சான்றாகும். “நாயை எங்கே அடித்தாலும் அது காலைத் தூக்கும்என்பது போல இந்திய அரசியலில் எது என்றாலும் உடனே இலங்கைப் பிரச்சனை பெரிதாகத் தூக்கிப் பிடிக்கப்படும். அது போலவே  ஆஸ்திரேலிய அரசியலை அகதிகள் பிரச்சனை ஆட்டி படைக்கின்றது என்றால் மிகையாகாது.
லேபர் கட்சியின் கெவின் ரட் அறிமுகம் செய்துள்ள அகதிகள் தொடர்பான ப்புவா நியு கினி  முகாம் கொள்கைகள் கடும்விமர்னத்துக்கு உள்ளாகி உள்ளன.இது தேர்தல் தொடர்பாக நகர்த்தப் படும் ஓர்  அரசியல் காய் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் ,லிபரல் கட்சி தனது தேர்தல் கொள்கையில் இனி வரும் அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப் படுமெனவும், இதுவரை படகுகள் மூலம் வந்துள்ள அகதிகளுக்கும் இதே  கதிதான்  எனவும் தெரிவித்துள்ளது. ‘நமது நாட்டிற்குள் யார் வருவது என்பதை நாமே தீர்மானிப்போம்’ என்று டோனி அப்பட் , முன்பு ஜோன் ஹாவர்ட் சொன்னதைத்தான் இப்போது  பின் மொழிந்துள்ளார்.தவிர இங்கிலாந்தினை பின் பற்றி அகதி மீளாய்வு முறை அகற்றப் படும் எனவும் ஒரே அலுவலர் புகலிட நிர்ணயம் செய்த பின் மூன்று மாத காலத்துக்குள் கோப்பு மூடப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவையெல்லாம், ஆஸ்திரேலியா ஐக்கிய நாடுகளின் அகதி மாநாட்டு ஒப்பந்தத்தின் கையொப்பதாரியாக  ஒரு பொம்மை போல செயல்பாட்டு தன் கடமையை செய்ய தவறவில்லை என்பது போல ஒரு மாயை செயல்பாட்டு நடவடிக்கையே என்று தோன்றுகிறது.
ஆட் கடத்தல் நடப்பது உண்மை என்றாலும் கூட அப்பாவி அகதிகள் பாதிக்கப்படுவது வருத்தத்துக்குரியது. எந்தக் கட்சி வந்தாலும் அகதிகள் கொள்கை கையிலெடுக்கப்பட்டு தமது நிலையை தக்க வைத்துக் கொள்ளும் ஒரே நோக்கில் ஆஸ்திரேலியா சர்வதேச பொறுப்புக்களை காலில்போட்டு மிதிப்பது  கண்டிக்கத்தக்கது. குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு சர்வதேச உடன்படிக்கையின் தார்மீக பொறுப்புகளை சுமக்கும் கையொப்பதாரி , கடமைகளை மறந்து , மறுத்து நடந்து கொள்வது சர்வதேச அளவில் நகைப்பிற்கிடமாகவே உள்ளது.
இது அரசியல்வாதிகளுக்கு சாதரணமாக இருக்கலாம்.அரசாங்கத்துக்கு அழகல்ல. அகதிகள் தொடர்பான தெளிவான மனிதாபிமானத்துடன் கூடிய ஓரே கொள்கை உருவாகும் வரை இந் நிலை மாறாது.