Google+ Followers

Wednesday, April 9, 2014

மொகரக்கட்ட புஸ்தகம்- ஃபேஸ் புக் ’அட்ராசிட்டி’ பற்றி நடிகர்கள், செந்தில், கவுண்டமணி


மொகரக்கட்ட புஸ்தகம்
ஃபேஸ் புக் ’அட்ராசிட்டி’ பற்றி  நடிகர்கள், செந்தில், கவுண்டமணி 
கற்பனை ஆக்கம்  : சூப்பர் சுப்பம்மாள்

ஃபேஸ் இல்லாதவன் கூட இருப்பான். ஃபேஸ் புக் இல்லாதவனைக் காணமுடியுமா? சரஸ்வதி பூஜைக்கு  பூஜையில் வைக்க புத்தகத்தைக் கேட்டால் ஃபேஸ் புக்கை எங்கே வைப்பது மம்மி என்று கேட்கும் காலம் இது.

அப்படி சிக்கனும் கே எஃப் சீயும் போல, பிட்சாவும் சீசும் போல, குவாட்டரும் சைட்டிஸ்சும் போல தமிழர் வாழ்வில் முக நூல் பிரியாத வரம் பெற்றுள்ளது.

ஃபேஸ் புக் ’அட்ராசிட்டி’ பற்றி  நடிகர்கள், செந்தில், கவுண்டமணி  பேசினால் எப்படி இருக்கும்?அந்தக் கற்பனையின்  விளைவுதான் இது:

செந்தில் : அண்ணே இன்னிக்கு ஃபேஸ் புக் பார்த்திட்டிங்களா?

கவுண்டமணி : அட  ஃபேசே தெரியாத அளவுக்கு வீங்கிப் போன தலையா,

என் மொகரக்கட்டய பார்க்கவே எனக்கு நேரமில்ல. உன்ன மாதிரி வெட்டித் தடித் தாண்டவராயன் எல்லாம் பல்லு வெளக்காம பார்க்கிற மேட்டரையெல்லாம் என்னப் பார்த்தியான்னா கேக்கிற? மூடு குழாய.

செந்தில்:

அய்யோ என்னண்ணே கோச்சுகிறீங்க? அதுல ஒரு ஆண்ட்டி ஒங்களுக்கு பொறந்த நாள் வாழ்த்து போட்டுருக்கு அண்ணே.

கவுண்டமணி:

உன்ன எத்தனி தடவ அண்ணேன்னு இழுக்காதன்னு சொல்லி இருக்கேன்.உங்கப்பனுக்கு நா மவனுமில்ல என் ஆத்தாளுக்கு நீ மவனுமில்ல. அந்தம்மா யாருன்னு கூடத் தெரியாது.உன் கூட ஃபேஸ் புக்கில சகவாசம் வச்சிகிட்டதால உன் வட்டத்தில  நாலாவது அடுக்கு தொடர்புல இருக்குற  ஆண்ட்டி எனக்கு ஏன் பொறந்த நாள் வாழ்த்து போடனும்? மவனே எவளயாவது உள்ள இழுத்து உட்ட உன் தேங்காத் தலைய  செதறு காய் அடிச்சுறுவேன்.

 

செந்தில்:

அத்த வுடுங்க இத்த பாருங்க இந்த முருகன் படத்த ஷேர் பண்ணி அஞ்சாவது நிமிசத்துக்குள்ள பலன் கிடைக்குமாம்.

 

கவுண்டமணி:

இல்லாதவனுக்கு  ஒரு ஒத்த ரூவாய ஷேர் பண்ணாத ஒட்ட மண்டயா ! முருகன் படத்த காட்டி  திருவிளயாடல் படம் ஓட்றத்துக்கு வேற ஒண்ணுமே கெடைக்கலியாடா? பக்தின்னு பேர்ல எத்தனி பேர்டா கெளம்பி இருக்கீங்க?

 

செந்தில்:

சரி சரி இதப் பாருங்க  அண்ணே . இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு உலகம் பூரா கிளைகள் தொடங்குறாய்ங்கலாம்.

கவுண்டமணி:

அடே அணுகுண்டுத்தலையா . இதுவரை இந்தியாவை மட்டுந்தான் அழிச்சிகிட்டு இருந்தீங்க. இப்ப ஒலகத்தயும் அழிக்க கெளம்பீட்டிங்களாடா?

 

செந்தில்: இந்த குட்டி பாப்பாவுக்காவது லைக்  போடுங்க அண்ணே. எப்புடி சிரிக்குது பாருங்க?

கவுண்டமணி:

டேய் கொழந்த எல்லாம் பேஸ் புக் பாக்க கூடாதுடா. பீரங்கித்தலையா . வேணா! சொல்றேன் கேளு !! சின்னப் புள்ளைங்கல உட்டுரு.

செந்தில்:இதோ லேட்டஸ்ட் ஹிந்தி பாட்டை கேளுங்க  என சொகமா இருக்கு?

கவுண்டமணி:

அடேய் வேண்டாண்டா விட்டுரு.அடேய் பீரங்கித் தலையா உனக்கு தமிழே தகராறு.இந்தப் பாட்டுல தல வால் எதாவது உனக்கு புரிஞ்சிச்சா? ஒரு சொல்லாவது வெளங்கிச்சா பிஞ்சத் தலையா? நீயெல்லாம் இந்திப் பட்டு கேட்லைன்னு இந்தி  அழுதிச்சா? இல்ல மன் மோகன் சிங் தான் ராஜினாமா செய்ரேன்னாரா?

 

செந்தில்: எங்க அக்கா ஃபேஸ் புக்கில நெறைய இங்கிலீஸ்ல போஸ்ட் பன்ணியிருக்கா அதைப் பார்ப்பமா?

கவுண்டமணி:

அடேய் பெருசா எலிசபெத் மகா ராணி வீட்டு எருமைக் கன்னுக் குட்டினு நெனெப்பு ஆங்? ஏ எங்க தொடங்கும்னு கூட தெரியாத எருமைத் தலையா ஒங்கொக்கா ஒவ்வொருத்தர் போஸ்டா உருவி கட் அன்ட் பேஸ்ட் செஞ்சி சொந்த சரக்குன்னு அள்ளி விட்டுட்டு இருக்கா.அது ஒரு போஸ்ட்டு அதப் படிக்கிற நீ ஒரு வேஸ்ட்டு.

 

செந்தில்:ஸ்டாப் ஸ்டாப் இதப் பாருங்க,  நாம ஒறவுக்காரங்க ஆயிட்டோம். ஒங்க  ஃபேஸ் புக்கில இருக்க  ஒங்க அண்ணன் மகன் , என் ஃபேஸ் புக்கில இருக்க என் ஒண்ணு விட்ட அக்காளோட மச்சானின் சித்தப்பா மகனோட மச்சினிய ஃபேஸ் புக்கில பார்த்து ரசிச்சு  பிரைவெட்டா மெஸேஜ் அனுப்பி லவ் பண்ணி மூணு வருசத்துக்கப்புறம் இப்ப கல்யாணம் பண்ண போறோம்னு போட்டிருக்கு, அப்ப நம்ம சொந்தமாயிட்டமில்ல. இப்ப என்னா செய்வீங்க? இப்ப என்னா செய்வீங்க? நாம ரெண்டு பேரோட ஃபேஸ் புக்கும் டச்சிங் டச்சிங் ஆகி  ஒரு கல்யாணம் நடக்க காரணம் ஆயிட்டொமில்ல.

 

கவுண்டமணி: அடே இட்லி அண்டாத் தலையா , என் அண்ணன் மகன் நல்லவண்டா ஒரு வேளை அவன் தப்பி ஓடியிருந்தா அதுக்கு பேரு கல்யாணமாடா? இதுக்குத்தாண்டா இந்த மொகரக்கட்ட புஸ்தகம் எல்லாம் வேணான்னு சொன்றேன்.எவன் எவகிட்ட ரவுசு உடுவான்னே தெரியாது. ஏதாவது எக்குத்தப்பா ஆனா  எங்க வீட்டுல தொடப்பம் பிஞ்சுறும்.

செந்தில்:அமைதி அமைதி .இங்க பாருங்க. நம்ம பக்கத்து  வீட்டு சொர்ணக்கா  எதிர் வீட்டு சேட்டுகிட்ட துட்ட வாங்கிட்டு தலைமறவாயிட்டாளாம். சேட்டு ஸ்டேட்டஸ் போட்டு இருக்கார்.

கவுண்டமணி:அட வெங்காயத்தலையா  எதுக்கெல்லாம் ஸ்டேட்டஸ் போடரதுன்னு ஒரு வெவெஸ்தயே இல்லாத வெண்ணயாடா அந்த சேட்டு.

 

செந்தில்:அப்ப நம்ம கோயில் குருக்கள் அமாவாசை தர்ப்பணம் பண்றாராம் அந்த ஸ்டேட்டஸ்சை பாருங்க.

கவுண்டமணி: தாங்க முடியலியேடா. தர்ப்பணம் , கருமாதி, பால், இப்படி எல்லாத்தையுமா ஸ்டேட்டஸ் போடுவீங்க. இனிமே இதெல்லாம் நீ படிப்பியாடா பக்கட் தலையா ?

 

செந்தில்: அய்யோ அடிக்காதீங்க. அடிக்காதீங்க. இதப் பாருங்க. அட நம்ம முதலாளிப் பொண்ணு மகா மெகா சீரியல் நடிகர் ரவியோட ஓடிபோய்ட்டாளாம். நம்ம கூட வேல பார்க்குற ராஜாத்தி மாமி டைம் லைன்ல போட்டிருக்கிறாங்க.

கவுண்டமணி: அட அந்த கால பாட்டிங்க செஞ்ச ஊர் வம்ப இப்ப இப்படி செய்ய கெளம்பிட்டாங்களா? இதுல நீயும் ஒரு ஆப்பு கட்டயாடா புல் டோசர் தலையா. இது ஒரு மேட்டர்ணு ,இந்த கருமாந்தரத்த  நா பார்க்கணும் ? தூ

 

செந்தில்:சரி அண்ணே சமையல் வாசம் அடிக்குது நம்ம சாப்பிடலாமா?

 

கவுண்டமணி: ஐயோ. அது பக்கத்து வீட்லங்கோ .எங்கூட்டில இன்னைக்கு சமைக்கவே இல்லீங்கோ

செந்தில் :

பொய் சொல்லாதீங்க ,இங்க  பாருங்க அண்ணி ஃபேஸ் புக்கில போட்டுருக்காங்க. ’இன்று நான் பிரியாணி சமைத்தேன். எனக்கு பிடித்த லெக் பீஸ் எல்லாம் தனியா எடுத்து வச்சிட்டேன்.” என் ஃபேஸ் புக்கில பார்த்தேன்.

கவுண்டமணி : வேற என்னத்த எல்லாம் போட்டுருக்காடா?

செந்தில் : சொன்னா கோச்சிக்க மாட்டீங்களே

கவுண்டமணி : இல்ல சொல்லுடா சொக்கப் பாணத்தலையா.

செந்தில் : அண்ணியும் எதிர் வீட்டு சேட்டும்  சேர்ந்து சினிமா  பார்த்ததை நான் பார்த்துட்டேன்.

கவுண்டமணி : சேட்டு என் வீட்லயே சேட்ட உடுறானா? என்னடா குடும்பத்துல கொழப்பத்தை உண்டு பண்ற ?

செந்தில் : டென்சன் ஆவாதீங்கண்ணே. ஃபேஸ் புக்ல தான்.

கவுண்டமணி : அதுல அப்படி ஒரு கருமம் இருக்கா? எங்க காட்டு,  காட்டுப் பன்னித் தலையா ?

செந்தில் : ஐயோ அண்ணே உங்கள ப்ளாக் பண்ணி வைச்சிருக்காங்க.

கவுண்டமணி : வேற என்னத்தை எல்லாம் புளாக் பண்ணி வைச்சிருக்காளோ?

செந்தில் :கவலப் படாதீங்க.வேறொரு பேர்ல ஒரு ஃபேஸ் புக் அக்கவுண்ட் வச்சிருக்கேன். அண்ணி அதுல இருக்காங்க. நாம அதுல போய் பார்க்கலாம்.

கவுண்டமணி : அட வானா சட்டித்தலையா எத்தனை அக்கவுண்ட் வச்சிருக்கடா?

செந்தில் :இங்க பார்த்தீங்களா? அண்ணியும் சேட்டும்  தீபிகா படுகோனே செக்ஸியா  நடிச்ச ராம் லீலா பார்த்திருக்காங்க.

கவுண்டமணி : அடிப்பாவி முப்பது வருச கல்யாண உறவை மூணே வருச ஃபேஸ் புக் உறவுல காலி பண்ணிட்டாளே.

செந்தில் :அய்யோ அண்ணே ! அண்ணி சேட்டோட சினிமா பார்த்தத என் சம்சாரம் ‘நானும் சேட்டு கூட ஃபேஸ் புக்கில  படம் பார்க்கலாமான்னு’ கேள்வி கேட்டுருக்கா , அது எனக்குத் தெரியக் கூடாதுன்னு என்னை ப்ளாக் செய்து வச்சிருக்கா. என்ன கொடும அண்ணே இது.

கவுண்டமணி : அட தம்பி இந்த மாதிரி இவளுக நம்மள தவிக்க உட்டுட்டாளுகளே. அதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இந்த மொகரக்கட்ட புஸ்தகம் எல்லாம் வேணான்னு. இப்ப நம்ம நெலமைய பார்த்தியா?