Monday, December 29, 2014

கோட்டை (யை) விட்டார்கள்? டிசம்பர் தலையங்கம்

கோட்டை (யை) விட்டார்கள்?
இலங்கை தேர்தலை எதிர் நோக்கியுள்ள நேரம் இது.போரை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்பும் , தமிழர்கள் குறித்த எந்த ஒரு அணுகுமுறையும் தேவை இல்லை என்ற மமதையும் தலைவிரித்தாடும் தேர்தல் இது.
தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும் மகிந்த ராஜபக்ஸவின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மைத்திரி பாலசிறிசேனவின் தலைமையில் எதிரணியினர், சமஷ்டி அரசியல் அமைப்பு முறையை  வழங்கவோ அல்லது   எவருடனும் சமரசம் செய்து கொள்ளவோ தயாரில்லை எனவும்  கூறியுள்ளனர்.அதே அணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச, ’தாம் அதிகாரத்துக்கு வந்தால் புலம்பெயர் நாட்டிலுள்ள புலிகளையும் அழித்தொழிப்போம்என்று அனுபவமில்லா   நகைச்சுவையை வெளிப்படுத்தி உள்ளார்
தமிழ் மக்களை காலின் கீழ் இட்ட கர்வத்தினால்  இழந்து அரசியல் நிதானம், அரசியல் தந்திரம் , வாக்கு கவரும் வித்தை இவற்றை விட்டு விலகி  , தம்மை ஆதரித்து வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிட்டும் என்பதை  அனைத்து தரப்பும்சொல்ல மறந்து விட்டன. தவிர மாறாக, தமிழ் மக்களுடன் பேசவேகூடாது என்று  மகிந்தவும், கொடுக்கவே கூடாது என்று  மைத்திரியும் தமிழர் என்ற இனம் இல்லாமலேயே  இலங்கை இருப்பதாகக் கனவில் இருக்கின்றனர்..
மொத்தத்தில் இன , மத  மேலாதிக்கத்தை நிரூபிக்கும் போட்டியே இந்த தேர்தல் என்பது போல நடந்து வருகின்றனர்.முக்கிய வேட்பாளர் இருவரும்  தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான அடிப்படைத்தகுதிகளின்றியே நிற்கின்றன.

தமிழ் தேசியக்கூட்டமைப்பும், தமிழ் மக்களும் கையறு நிலையில் இருக்கின்ற சூழ்னிலை இது.அப்படியானால் மூன்றாவது வேட்பாளர் ஒருவர் அனைத்து தமிழ் வாக்குக்களையும் பெறக்கூடிய வாய்ப்பிருந்தும், தமிழர்கள் தமது அரசியல் பலத்தை காட்ட இப்படி ஒரு வழி இருந்தும் ஏன் கோட்டை விட்டார்கள்?

No comments:

Post a Comment