Sunday, October 26, 2014

மனோரமா

மனோரமா 

1200 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப் படைத்த தமிழ் திரைப்பட ரசிகர்களால் ஆச்சிஎன அன்போடு அழைக்கப்படும் மனோரமா கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்டவர்.  1943  ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என்ற பெருமையுடன் நடித்தவர்.
சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.1958 இல் , கவிஞர் கண்ணதாசன் மாலையிட்ட மங்கையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார். அன்று தொடங்கிய  தனது கலை பங்களிப்பிற்காக 2002 இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுவழங்கி கெளரவிக்கப்பட்டார்
தமிழக அரசின் கலைமாமணி விருது’, ‘புதிய பாதைதிரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருதுமற்றும் பல முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள்எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை நடிகர் முதல் இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

சிங்களத்தில் திருவாசகம்

சிங்களத்தில் திருவாசகம்

ஆயிரத்து இருநூறு  ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் அருளிய நூல் திருவாசகம்.திருவாசகத்தின் முழுமையான முதலாவது மொழிபெயர்ப்பு 115 ஆண்டுகளுக்கு முன் 1900இல் வெளியானது. மொழிபெயர்த்தவர் ஜி. யூ. போப்பையர். ஆங்கில மொழிபெயர்ப்பு.அந்தப் புத்தகம் 1987 ஆம் ஆண்டு சென்னைப் பலகலைக்கழகத்தில் சுப்பம்மாள் வாங்கிப் படித்தேன்.அன்று முதல் வான் கலந்த மாணிக்க வாசகத் தேன் சுவையில் நான் கலந்தேன்.
திருவாசகம் இந்தியில் பேரா. சுந்தரம் மொழிபெயர்த்து கொல்கத்தா சாந்திநிகேதன் வெளியீடாக 1995இல் நூலானது.மலையாளத்தில் திருவாசகம் திரு. சந்திரசேகரன் நாயர் மொழிபெயர்த்து திருவனந்தபுரம் மன்னர் வெளியிட்டு 2012இல் நூலானது. தெலுங்கில் திருவாசகம் பேராசிரியர்கள் பரிமளம்+அரம்பை மொழிபெயர்த்து 2013இல் திருமலை திருப்பதி தேவத்தானத்தால் நூலானது. கன்னடத்தில் திருவாசகம் பேரா. ஜெயலலிதா மொழிபெயர்த்து 2014இல் நூலானது.வடமொழியில் திருவாசகம் தெரு. ச. கோதண்டராமன் மொழிபெயர்த்துச் சுவாமி தயானந்த சரசுவதி அவர்கள் அச்சிட 2014இல் நூலாது.
சிங்களத்தில் திருவாசகம் திரு. வடிவேல் இராமசாமி, திரு. இலிண்டன், திரு. வே. சண்முகநாதன் (மூவரும் கல்முனை) மொழிபெயர்த்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக் கைலாசபதி அரங்கத்தில் 26.05.2014 அன்று மாண்புமிகு அமைச்சர் வாசுதேவா நாணயக்கார இந்து, புத்த கலாச்சாரப் பேரவையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து  கொள்ளும் போது மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெரும் முயற்சியால் கலாநிதி மோகன். அமைச்சரின் தமிழ்ப்பிரிவுச் செயலாளர்  கலாநிதி மோகன். சொன்னதன் படி வாசுதேவ நாணயகாரவிடம் காண்பிக்கப்பட்டது.
அங்கே நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலிய இரத்தின தேரர் இருந்தார். தமிழ்ச் சாகித்தியங்கள் சிங்கள மக்களிடையே முழுமையாகப் போய்ச் சேரவில்லை என வண. அதுரலிய இரத்தின தேரர் உரையில் குறிப்பிட்டார். திருக்குறள் சிங்கள மொழிபெயர்ப்புச் சிங்கள மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளதாகக் கூறினார்.அமைச்சர் வாசுதேவ நாணயக்கராவும் அங்கு இருந்தார்.அமைச்சரிடம் திருவாசகம் சிங்கள மெழிபெயர்ப்பைக் காட்டிய போது  பக்கங்களைப் புரட்டியபின் வண. அதுரலிய இரத்தின தேரரிடம் அமைச்சர் நூலைக் கொடுத்தார்.
திருவாசகம் சிங்கள நூலின் பக்கங்களைப் புரட்டிய தேரர், மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் எழுதிய முன்னுரையைப் படித்தார். பாராட்டினார். "அருமையான இந்த நூலில் எனக்கு ஒரு படி தருவீர்களா" எனக் கேட்டார். மேடையில் வெளியிட்டு வையுங்கள் படியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் சொன்னார்கள். மேலதிகப் படிகள் அச்சிடப் பணமில்லாமல் இருக்கிற  நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அருமையான நூல் சிங்கள மக்களுக்குக் கிடைக்கவேண்டும் எனத் தேரர் கூறினார். அச்சிட்டுத் தரவேண்டிய கடமை அமைச்சருக்கு உள்ளது. "அச்சிட்டுத் தாருங்கள்" என அமைச்சரிடம் தேரர் கேட்டார். அமைச்சரும் மேடையிலேயே அச்சிட ஒப்புக் கொண்டார். அமைச்சர் நூலை வெளியிட்டார், தேரர் பெற்றுக்கொண்டார்.
இப்படித்தான் தொடங்க வேண்டும் நல்லிணக்கம். நன்றி, மறவன் புலவின் நல்மணியே.

பார்த்ததில் ஈர்த்தது
இந்து நூல் வெளியீட்டில் இஸ்லாமிய பேராசிரியர்
மறுபடியும் ஆன்மிகம் தான், இப்போது ’’சிவவாசகம் ’’ மற்றும் ’’பக்திப் பயிர்வளர்த்த பதின்மூவர்’’. நூல் வெளியீடு. இந்த . இரு நூல்களின்  வெளியீட்டு விழா. பூரண கும்ப மரியாதைகளுடன்..திருபனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தர மூர்த்தி சுவாமிகள்...மற்றும் திருச்சிமலைகோட்டை மெளன மடம்..ஸ்ரீமத் குமாராசுவாமி தம்பிரான் சுவாமிகள் வரவேற்கப்பட.அவர்களுடன் இணைந்து வாணியம்பாடி பேராசிரியர். அப்துல் காதர்  இந்து நூலைப் பெறும் மதநல்லிணக்கத்துடன் ஆரம்பித்தது விழா.


திருபனந்தாள் ஸ்ரீகாசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெளியீட..மீனாட்சி கல்விக்குழுமங்களின் தலைவர்..தின இதழ் பத்திரிக்கையின் நிறுவனர் திரு இராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்கள்

மதம் சாதி கடந்து..சைவசமய தொண்டாற்றிய  அரும்பெரும் மக்களின் பெருமை சொல்லும்..பக்திப் பயிர்வளர்த்த பதின் மூவர் நூலை திருச்சி மலைக்கோட்டை மெளனமடம் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெளியிட..பேராசிரியர். கவிஞர் அப்துல்காதர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

இனிய இசையுடன்...திருமதி கிரிஜா ஹரிஹரனின் அற்புதக்குரலில்..சிவவாசக பாடல்கள் 8 எடுத்து ஒலியமைத்த..குறுந்தகட்டை....திருச்சி மலைக்கோட்டை மெளன மடம். ஸ்ரீமத் குமராசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெளியிட...மீனாட்சி.கல்விகுழும நிறுவனர் திரு இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்கள்

நூலசிரியர் இரா .குமாருக்கு  .’’’இறைத்தமிழ் வேந்தர்’’’..எனும் இன்சொல் பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.இவர் தின இதழ் ஆசிரியர், இதழியல் தொடர்பாக நூல் படைத்தவர்.பல ஆண்டு கால பத்திரிகை ஆசிரியர் அனுபவம் பெற்றவர்.


படித்ததில் பிடித்தது

மன்னிக்கவும் படிக்க முடிந்தது. எழுத முடியவில்லை.ஆசிரியரிடம் எவ்வளவு கேட்டும் ஒரு நாள் அவகாசம் தர மறுத்துவிட்டார்.

மறைந்தார் ‘மிஸிஸ் டவுட் ஃபயர்' சந்திரிகா சுப்ரமண்யன்

மறைந்தார் ‘மிஸிஸ் டவுட் ஃபயர்'
சந்திரிகா சுப்ரமண்யன்



ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வெளிவந்த  'மிஸிஸ் டவுட் ஃபயர்' படம் அனேகருக்கு மறந்து போயிருக்காது.அதை ஒட்டி கமல் ஹாசன் எடுத்த வெற்றிப்படம் தான் ‘அவ்வை ஷண்முகி. அது போலவே முண்ணா பாய் எம் பி பி எஸ்சும்,  'பேட்ச் ஆடம்ஸ்'  என்ற படத்தின் மறு தயாரிப்பு தான். இந்த இரு தமிழ் படங்களைப் பார்த்து வயிறு புண்ணாகும் வரை சிரிக்காதவர்களே இருக்க முடியாது.இவற்றில்  நடித்தவர் ரொபின் வில்லியம்ஸ்.அண்மையில் அவர் இறந்து விட்டது கலை உலகின் பேர் இழப்பு.
ரொபின் வில்லியம்ஸ் என்ற மாபெரும் கலைஞனின் அற்புத நடிப்பில் வந்த இப்படங்கள் நடிப்பு சார்ந்த முக , உடல் மொழிகள் பற்றிய கலைக்களஞ்சியங்கள் ஆகும். 63 வயதான ரொபின் வில்லியம்ஸ் மிக அற்புதமான நகைச்சுவை கலைஞன். தனது அபாரமான நகைச்சுவை நடிப்பினால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வசீகரித்தவர்.உலகினை சிரிக்க வைத்த அவர் சமீப காலமாக மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது காலம் செய்த கோலம். முடிவு மரணம்.
1951ல் சிகாகோவில் பிறந்தவர் ரொபின் வில்லியம்ஸ். படிக்கும் போது  பள்ளிக்கூடத்தில் நாடக கிளப்பில் சேர்ந்தார். பிறகு, அமெரிக்காவின் புகழ்பெற்ற நுண் கலைக் கல்லூரியான நியூயார்க்கில் இருக்கும் ஜுலியார்டில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆசிரியர் ஒருவர் அவருக்கு நகைச்சுவையை தேர்ந்தெடுக்கும்படி ஊக்கமளித்தது அங்குதான் .தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருந்தாலும் ‘குட்மார்னிங் வியட்னாம்’, டெட் பொயட்ஸ் சொசைட்டி, வன் ஹவர் போட்டோ போன்ற படங்களிலும் அவர் நடித்தார். ஹாப்பி ஃபீட்டில் பெங்குயின் குரல் இவர்து ஆகும். ஜுமாஞ்சி , அல்லாடின் ஆகிய சிறுவர் மனம் கவர்ந்த படங்கல் இவரது பங்களிப்பே.
அவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும் 'குட் வில் ஹண்டிங்' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது 1998ல் கிடைத்தது. 1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹண்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர்.ஐந்து கிராமி விருதுகள் பெற்றவர்.
ஆஸ்கர் விருது பெற்ற வில்லியம்ஸ், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பினால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வசீகரித்தவர். ரசிகர்களை மகிழ்வித்த வில்லியம்ஸ் இறந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். "என் கணவர் மற்றும் சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.ஜாஸ் இசை மற்றும் சைக்கிள் ஓட்டுவது இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள்.



சென்னை நாளில் சென்னை என்னும் அன்னையை போற்றுதும்

சென்னை போற்றுதும் ! சென்னையை போற்றுதும் !!


என்னை வளர்த்த சென்னை எனக்கு இன்னொரு தாய்.
இத்தனை கல்விக்கும் முதலான கல்வியைத் தந்த தந்தை.
வேலையை நேர்த்தியாகச் செய்யக் கற்று தந்த சகோதரி.
பொறுப்புடன் மணம் முடித்து வைத்த சகோதரன்.
பிள்ளைப்பேறு பார்த்த செவிலி.

இன்னும் நான் காதலிக்கும் காதலன்.
என்றும் என் மனதுடன்  பிணைந்து கிடக்கும் கணவன்.
நான் கற்றதை திருப்பித் தர நினைக்கும் பிள்ளை.
ஸ்ரீலங்கா முதல் சிட்னி வரையிலான என் நெடிய பயணத்தில்
சென்னை என் முதல் கல். மைல் கல்.

கடந்து போன இருபத்தைந்து நாடுகளில்
இன்றும் நெஞ்சோடும் நினைவோடும் நிற்கும்  நிலம்.
நாடுகள் தாண்டி போகும் போதெல்லாம்
தங்கிடத் தேடும் நிழற்குடை.

சென்னை போற்றுதும் ! சென்னையை போற்றுதும் !!

சென்னை நாளில் சென்னை என்னும் அன்னையை போற்றுதும்!!!

ஆட்சி மாறும் , காட்சி மாறும், மனசாட்சியும் மாறும்

ஆட்சி மாறும் , காட்சி மாறும், மனசாட்சியும் மாறும்
இந்தியப் பிரதமர்  நரேந்திர மோதியும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட்டும், இரவோடு இரவாக ஒரு யுரேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இருக்கின்றனர்.
உலக அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிடம், யுரேனியம் வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில், இந்தியா கையெழுத்திடாததைக் காரணம் காட்டி, இதுவரை அதற்கு மறுப்புத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் பங்கேற்பதை தடுத்துவிடும் என்றும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்றும் ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சி கருத்ஹ்டுத் தெரிவித்துள்ளது.
அமைதிக்காக மட்டும் யுரேனியத்தை பயன்படுத்துவோம் என்று இந்தியா உறுதியளித்ததை தொடர்ந்து யுரேனியத்தை வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டதாக ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் அண்ட்ரூ ரொப் கூறியிருக்கிறார்.
எல்லாம் சரி முன்பு ஒரு காலத்தில் ( மே 1998)  இந்தியா அணு சக்தி சோதனை செய்த போது இந்தியாவில் இருந்த தனது தூதர் ரொப் லாரியைத் திருப்பி அழைத்த ஆஸ்திரேலியா எங்கே?அப்போது இருந்த தெற்காசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனம் காணாமல் போனது எப்படி?


”முதல் மொழி தமிழ்” நூல் வெளியீடு

சிட்னி சங்கத் தமிழ் மாநாடும் – 
“முதல் மொழி தமிழ்” நூல் வெளியீடும்


சிட்னி சங்கத் தமிழ் மா நாடு மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இன் நிகழ்ச்சிக்கு சிட்னி கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்தது விழாவை ஒட்டி சங்கத் தமிழ் தொடர்பான மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
விழாவிற்கு சென்னையிலிருந்து தமிழர் அறிஞர்கள் மறைமலை இலக்குவனார், முனைவர் உலக நாயகி பழனி மற்றும் புது தில்லி  தமிழ் சங்கத் தலைவர் ராகவன் நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
உள்ளூர் வெளியூர் தமிழ் ஆர்வலர்களின் சிறப்பு பட்டி மன்றங்கள், நடனம் மற்றும்  இசை, கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சங்கத் தமிழ் தொடர்பான தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் தமிழ்  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் இடம் பெற்றது.
இவ் விழாவின்  நோக்கம் அடுத்த தலைமுறைக்கு தமிழை அறிமுகம் செய்வதே ஆகும்.இதன் சிறப்பாக “ முதல் மொழி தமிழ்” என்ற தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்ட நூல் ஒன்று வெளியிடப்பட்டது.எழுதியவர் சிட்னி வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் மற்றும் அவரது மகள் நிவாசினி சுப்ரமண்யன்.
நூலை அறிமுகம் செய்த சிட்னி தமிழ் கலை கலாச்சார மன்றத் தலைவர் , திரு. அனகன் பாபு, இனிவரும் நாட்களில் புலம் பெயர்ந்த தமிழ் இளைய தலைமுறையினர் தமிழ் பற்றிய அடிப்படை அறிவைப் பெறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்றதுடன் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த தாயும் மகளும் மூவாயிரம் வருடத்திற்கு முந்திய மொழியை அடுத்த தலைமுறைக்கு எளிமையாக அறிமுகப்படுத்த முயன்றிருப்பது நூலின் சிறப்பாகும் என்று பேசினார்.
சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இந் நூல் தமிழின் இரண்டு தலைமுறை இடைவெளியை நிரப்ப உழைத்த உழைப்பின் வெளிப்பாடு என்றார்.ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய தமிழ் பற்றிய ஒரு தகவல் பெட்டகம் என்றும் பாராட்டினார்.
நூலை சென்னை தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார் வெளியிட முதல் பிரதியை புது தில்லி தமிழ்ச்சங்கத் தலைவர் ராகவன் நாயுடு பெற்றுக் கொண்டார்.
நிறைவாக கலாநிதி சந்திரிகா சுப்ரமணயன் ஏற்புரை நிகழ்த்தும் போது ” ஒரு மாத காலத்துக்குள்  எங்கள்  வேலைகளுக்கு நடுவில் எழுதப்பட்ட மிகக் கடுமையான உழைப்பின் பிறப்பு இந்த நூல். அடுத்த தலைமுறைக்கு தமிழைப்பற்றி  ஆங்கிலத்தில் ஓர் இளையவர் சொல்வதே சிறப்பு என்று நினைத்த போது , நானே எழுதித் தருகிறேன் என்று  நிவாசினி  முன் வந்தாள். தகவல் சேகரிப்பு பணி எனதானது. I am Tamil என்று நான் பெயரைத் தேர்ந்தெடுத்த போது இல்லை “முதல் மொழி தமிழ் ” தான் நன்றாக இருக்கும் என்று ஒரு  நள்ளிரவில் பெயரைச் சூட்டினாள்.அட்டைப்படப் புகைப்படம் திருமயிலை கபாலீஸ்வரர் கோயில் அவள் எடுத்தது.
எழுதி முடித்த  போது அவள் சொன்னது , “ தமிழ் மிக  ஆர்வமூட்டுவதாக உள்ளது”. ஆம் இந்த நூலின் நோக்கமே ”தமிழ்   அடுத்த தலைமுறையினருக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும்” என்பதாகும்.


கம்பன் விழா சிட்னி- எனது தொடக்க உரை





தமிழ்க்கடவுள் முருகனுக்கு முதல் வணக்கம்!

என் தாய் மடியாம் தமிழினிற்குத் தனிவணக்கம்!!

சண்ட மாருதமும் கொண்டல் முழக்கமும் கூட்டி வந்து
தமிழ் கொட்டிய கம்ப வாரிதி ஐயா அவர்களை வணங்குகின்றேன்  

வானர சேனையை வழிப்படுத்திய மாருதி போல
எங்கள் இளைஞர் படையை  இங்கு நெறிப்படுத்தி நிற்கும்
இளவல் ஜெயராமை வாழ்த்துகின்றேன்

கம்பன் புகழ் பாடி கன்னித் தமிழ் வளர்க்க வந்திருக்கும்
தமிழார்ந்த அனைவரரையும் வரவேற்கின்றேன்


சிரம் தாழ்த்தி கரம் கூப்பி என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு
இன் நிறைவு நாளில் தொடக்க உரையைத் தொடங்குகிறேன்

வானத்து சூரியன்
வழித்தோன்றல்
ராமனின்
கதை சொன்ன
கம்ப  நாடன்
தாள் தொழும்
நாள் இன்று.

அறுபதி னாயிரத்து மூன்று
மனைவியர்  
கூடியவனுக்குப்
பிறந்த
அவதார புருஷன்,

ஓர்  இல்      ஒரு சொல்     ஒரு வில்

என்று வாழ்ந்த
வாழ்க்கையை
இந்த உலகம்
வாழ்வதற்காக
எடுத்துச் சொன்ன
கவிதைக்காரன்
கம்ப நாடனைக் கொண்டாடும் நாள் இன்று.

காட்டிலே  ஈரேழாண்டு
கழித்தவன் காதையை - தன்
பாட்டிலே அறியச்செய்தான்
பாவலன் கம்ப ன்

அறத்தினால் அன்றி
புறத்து  ஒர்வழியும் இல்லை
புகழினைப்  பெறுதற்கு - என்பதைப்
புரியச் சொன்னான்
தேரெழுந்தூரினை
ஊர் வழுத்திடச் செய்த
உன்னதக் கவிஞன்

கவியினில்
சொல்லத் தக்கோன்
கம்பனன்றி - இப்
புவியினில் எவனும் இல்லை
என்ற புகழ் சேர்த்து
வள்ளல் சடையப்பன் வாழ்த்தும் நண்பன்.

கட்டுத்தறியில் கூட
கவி சொட்டும்  
வீட்டுடைக் கவிஞன்
இவனின்
பாட்டுடை த் தலைவனோ
அரவம் அணைந்த
அரி அவதாரமே.

சொந்தக் கதையல்ல
இவன் சொன்னது
வால்மீகி
சொன்ன கதை எனப் பலர்
சொல்லால்  இடித்தாலும்

எல்லாமே இல்லை
படித்ததை அறிவெனும்
பற்றுக் கோல் கொண்டு-
கவி வடித்தது எந்தன்
சிறப்பென நின்றான்.

யாப்பியல் மரபு சேர்த்து
யாழ் ஒலி சந்தம் சேர்த்து
மூப்பிலாக் காவியத்தை
மூவுலகறியத் தந்தான்

சொல்வண்ணம்
மொழி வண்ணம்
இயல் , இசை,நாடக வண்ணம்
சந்த வண்ணம் -சிந்து வண்ணம்
உண்மைதத்துவம்,சத்தியம்   -  உரைத்த வண்ணம்,

உளவியல் நிலவியல்  புவியியல்அறிவியல்  புதைத்த வண்ணம்

கவி வண்ணம்,
அங்கு  கண்டோம்
கம்பனின்  கை வண்ணம்
எங்கும்  கண்டோம்

அரங்கண் உறங்கும்
அரங்கில் அரங்கேற்றிய
அற்புதக் காவியம்

ஆறு காண்டங்கள்

ஆற்றுப் படலம் முதல்
விடை கொடுத்தப் படலம் வரை
நூற்று பதினாறு  படலங்கள்

பத்தாயிரத்து ஐநூற்று முப்பத்து  நான்கு
பாடல்கள்
தொண்ணூற்று ஆறு வகை ஓசைகளுடன்
இராமாவதாரம் உருவானது
எப்படி? எப்படி??
நாளொன்றுக்கு
எத்தனைப் பாடல்கள் எழுதியிருப்பான்?
சிந்திப்போம்….  மெய் சிலிர்ப்போம் ….

பாற்கடல் தெய்வத்தைத் - தன்
பாக்கடலில் நீராட்டிய
கவி மாக்கடலின்
கால்  பணியும்
இவ்வேளையில்
கம்பனைத்
தமிழால்
வாழ்த்தவும்
வணங்கவும்
வந்திருக்கும் அனைவரையும்

வணங்குகிறேன்
வரவேற்கின்றேன்

இனி அரங்கு உங்கள் வசம்
நீங்களோ கம்பன் வசம்

அன்னமாச்சார்யா

என்றும் வாழும் அன்னமாச்சார்யா
கலைமகள் தீபாவளி மலர்



திருப்பதியை நினைப்போருக்கு தாபாக்க அன்னமாச்சார்யாவும் சேர்ந்தே தான் நினைவுக்கு வருவார். அத்தனை ஈடுபாட்டுடன் திருவேங்கடவன் திருவருளை போற்றிப் பாடல்களை எழுதியவர் அன்னமாச்சார்யா. தெலுங்கு , சமஸ்கிருதம் இரண்டு மொழியிலும் இவர் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். எம் எஸ் அம்மாவின் தேன் குரலிலும் , பிரியா சகோதரிகளின் இசையிலும் இன்றும் நம்மைக் கட்டிப் போட்டு வைத்திருப்பவை இந்தப் பாடல்கள்.அன்னமாச்சார்யா திருவேங்கடவனின் திரு வாளின் அவதாரம் எனப்படுவார். இவருக்கு 16 வயதாயிருக்கும் போது பெருமாள் நேரில் காட்சி கொடுத்து அருள் பாலித்தார் என்பது வரலாறு.
தாபாக்க அன்னமாச்சார்யா ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் தாபாக்க கிராமத்தில்  1424 இல் சர்வதாரி ஆண்டு வைகாசி பௌர்ணமி அன்று பிறந்தார்.தொண்ணுற்று ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து 1503 இல் மறைந்தார்.
ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் மீதும் அலர்மேல் மங்கை மீதும் மொத்தம் சுமார் முப்பத்து இரண்டாயிரம் ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். முப்பத்து இரண்டாயிரம் பாடல்களும் முப்பத்து இரண்டாயிரம் மந்திரங்கள் என நம்பப் படுகிறது.
1922 ஆம் ஆண்டு வரை இவரது பாடல்கள் எதுவும் கிட்டவில்லை. காரணம் இவரது பாடல்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டும் செப்புத் தகட்டில் பதிவும் செய்யப்பட்டிருந்தன. இத்தகடுகள் பலகாலம் ஒளித்து  வைக்கப் பட்டு  1922 இல் தான் கண்டுபிடிக்கப் பட்டன. பதினான்காயிரம் பாடல்களா கொண்ட 25 ஆயிரம் செப்பேடுகள் திருவேங்கடவன்  கோவில் உண்டியலுக்கு எதிரில் கண்டு பிடிக்கப்பட்டன. அங்கு உள்ள ஒரு ரகசிய  அறையில் இந்த ஓலைச்சுவடிகளூம் , பின்னாளில் அவை எழுதப்பட்ட செப்பேடுகளும் 400 ஆண்டுகளூக்கு மேலாக மறைந்தே கிடந்துள்ளன.

திருப்பதி தேவஸ்த்தானம் பன்னிரண்டு ஆயிரம் பாடல்களைக்கண்டு பிடித்து பதிப்பித்தது. இவரது மனைவியும் புலமைத்துவம் பெற்றவர்.இவரது மனைவி திம்மக்கா சுபத்ரா கல்யாணம் என்ற பாடல் தொகுப்பை எழுதி தெலுங்கில் எழுதிய முதல் பெண் கவிஞர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
அவரது பாடல்கள் அத்யார்தம மற்றும் சிருங்கார ரச வகைப்பாடல்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன.அத்யார்த்தம ங்கீர்த்தனை என்பது தெய்வீகத்தின் மேம்பட்ட நிலையை பாடுவததாகும்.  இறைவனை நாடும் உயிர் இறைவனைச் சேர படும் பாடு, அதன் தொடர்பாக சந்திக்கும் சோதனைகள், எதிர்கொள்ளும் போராட்டங்கள்,லௌகீக , ஆன்மீக இருமுனைப் போராட்டத்தின் நடுவில் ஆன்மா படும் அவஸ்தைகள் ஆகியவற்றை வெளிக்காட்டி  பாடப்படும்  பாடல்கள். அன்னமாச்சார்யர் தான் இறைவனை அடைவதற்காக முயலும் போது அனுபவித்த வேதனகளையும் , சோதனைகளையும் உணர்வு பூர்வமாக தன் பாடல்களில் வெளிப்படுத்துடுகிறார்.
சிருங்கார ங்கீர்த்தனை என்பது பெருமாளை ஆத்மா தேடும் தேடல், நாயக நாயக பாவனையில் காட்டப்படும் அன்பு, இறுதியில் பெருமாளிடம் முழு சரணாகதி  போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
அன்னமாச்சார்யாவின் சங்கீதம் அனைத்தும் ஒரே வகையானக் கட்டமைப்பைக் கொண்டன.ஒவ்வொரு பாடலும் பல்லவி, நான்கு வரிகளைக் கொண்ட மூன்று சரணக் கோர்வைகள், அனேகமாக அனுபல்லவி இல்லாமல் அமைந்திருக்கும் .மிக உயர்ந்த இலக்கிய நயத்துடன் அமைந்திருந்தாலும் கூட பழகுத் தெலுங்கும் ஆங்காங்கே தலைக் காட்டத்தவறுவதில்லை.. நிறைய தமிழ் சார்புடைய தெலுங்கு சொற்களை கொண்டன. கேட்போருக்கு இலகுவில்  புரியும். அன்னமாச்சர்யாவிற்கு  பத கவிதை பிதா மஹர் என்ற பட்டமும் உள்ளது.
அன்னம்ய்யாவின் மூதாதையரில் மூன்று தலைமுறைக்கு முந்திய  நாராயணய்யா படிப்பில் மிக குறைந்த நிஅலலியில் இருந்த போது, அந்த்ககால வழக்கப்படி மிக கடினமானத் தண்டனை, அவமானம் என்று சித்திரவதைகள் இருக்கும். அவற்றில் இருந்து தப்பிக்க மரணமே முடிவென்று நாராயணய்யா அவரது கிராமமான சிந்தாலம்மா கோவில் பாம்பு புற்றுக்குள் கையை விட்டு இறக்க முற்பட்டார். அப்போது கிராமத்து அம்மன் தோன்றி தடுத்து ’உனது பரம்பரையில் மூன்றாவது தலை முறையில் ஹரியின் அம்சத்துடன் தோன்றுவான் . எனவே நீ  வாழ வேண்டும் ‘ என ஆணையிட்டதாக அன்னமைய்யா சரிதம் கூறுகிறது.
அப்படி மூன்றாவது தலை முறையில் பிறந்த சிறுவன் அன்னமய்யா ஒரு நாள் புல் வெட்ட சென்றபோது அங்கு திருப்பதிக்கு சென்று கொண்டு இருந்த ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தான்.அவனை அறியாமலேயே அவன் அவர்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.அவர்கள் வெங்கடேசப் பெருமாளின் மகிமையைப் பாடி கொண்டு நடந்தனர்.இவனும் அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது காலில் இருந்த செருப்புடன் மலை ஏறத் தொடங்கினான்.மலை மேல் செருப்புடன் செல்வது கூடாது என்று தெரியாமலேயே நடந்தான்.அப்போது ஒரு மூதாட்டி  தோன்றி செருப்பைக் கழற்றி விட்டு செல்லும் படி கூறினாள்.அம்மூதாட்டி வேறு யாரும் இல்லை.அலமேலு மங்கைத் தாயார் தான்.அலமேலு மங்கை அன்னமய்யாவுக்கு பெருமாளின் திவ்யப் பிரசாதத்தையும் அளித்தார்.அதன் பின் அம்மை மறைந்தார்.அந்தக் கணத்தில் தனது முதல் சதகத்தைப் பாடினார் அன்னமய்யா.தனது தெய்வத்தை காண பக்தன் ஏங்கும் விதமாக அப் பாடல் அமைந்தது.
பின் திருமலைக்கு சென்று திவ்யதரிசனம் பெற்றார்.பல காலம் திருமலையில் தங்கி பல பாடல்களைப் பாடினார்.பின் சொந்த ஊரான கடப்பா , தாபாக்கம் சென்று திருமணம் செய்து இல்வாழ்க்கையில் ஈடு பட்டார்.திம்மக்கா, அக்காலம்மா ஆகிய இருவரை மணந்தார்.

இல்லறத்தில் ஈடு பட்டிருந்த காலத்தில் சிருங்கார ரசம் மிகுந்த பல பாடல்களை  பெருமாளையும் தன்னையும்  நாயக நாயகி பாவனையில் அமர்த்திப் பாடியிருக்கிறார்.சாதி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மிக சில தெய்வீக மார்க்கத்தில்  ஈடு பாடு கொண்டவர்களில் அன்னமய்யாவும் ஒருவர். இவரது படைப்புக்களில் நூறு பாடல்கள் கொண்ட சதகங்களும் அடங்கும்.சிருங்கார மஞ்சரி, வெங்கடேச மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம்  ஆகியவை குறிப்பிடத்தக்கன.இவரது ராமாயணம் (துவிபாதா) இரட்டை வரிகளில் (திருக்குறள் போல) எழுதப்பட்டுள்ளதாகும்.