Tuesday, December 9, 2014

மோதியின் வெற்றி இலங்கைத் தமிழர்களுக்கு வரமா? சாபமா??

மோதியின் வெற்றி   இலங்கைத்  தமிழர்களுக்கு  வரமா?  சாபமா??
வழக்குரைஞர் கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன்

நரேந்திர மோதிஅலை மோதி மோதி எப்படி அலை கடற்பாறைகளைக் கரைக்குமோ அப்படி காங்கிரஸ் கல்லை கரைத்து  இடம் தெரியாமல் உருக்குலைத்த இந்திய அரசியல் அலை. இவரது தலைமைத்துவம் அண்டை நாடுகளுக்கு குறிப்பாக இலங்கைக்கு வரமா? சாபமா?
இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு என்று நாம் புலம்பித் தள்ளலாம். ஆனால் அது வெறும் அரசியல் சித்து விளையாட்டு என்பது எண்பதுகளில் கூட தெரியாமல் இந்தியாவை எதிர்பார்த்து ஏமாந்த பின்னும் , புரியாமல் இருந்தால் எப்படி? இந்திய மக்கள் இலங்கைத்தமிழர்களை தொப்புள் கொடி உறவு என்றே பார்க்கிறார்கள். ஆனால் இந்திய  அரசியல்வாதிகளுக்கு இலாப நட்டக் கணக்குகளில் இலங்கைப் பிரச்சனையும் அடக்கம்.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் இலங்கை அரசுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் இலங்கை அரசும், தமிழர்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்ள வேண்டும்  என்று தமிழ் மக்களும் எதிர்ப்பார்க்கிறனர்.ஆனால் மோதி மோதிக்கு சாதகமாகவே நடந்துக் கொள்வார் என்றே அரசியல் விமர்சகர்கள் கணிப்பாகும். உள்ளூர் மற்றும் சர்வதேச அம்சங்களைக் கொண்டே இலங்கை விவகாரம் தொடர்பாக மோதி முன்னெடுக்கும் முடிவுகள் அமையும் என்பதே உண்மை.

மோதியின் நிலை இப்போது சாதாரண அரசியல் வாதி என்ற நிலையினைத் தாண்டி, குஜராத் முதல்வர் என்ற நிலையில் ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களின் பிரதி நிதி என்ற நிலைமை மாறி முழு இந்தியாவின் தலைமை அடயாளம் என்ற பிரதி நிதிதுவப் படுத்தும் நிலையில் நிற்கிறார். 1971 இல் இந்திரா காந்தி அம்மையார் தனிப்பெரும்பான்மையுடன் (352 இடங்கள்) வென்றதற்குப்  பிறகு மோதியின் வெற்றி தான்  அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.பிரதமர் பொறுப்பை  ஏற்கும் அவரிடம், ‘அரசியல்வாதி' என்ற  குண நலன்  மறைந்துராஜதந்திரி' என்ற குண நலன்  வெளிப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஆறு மாத காலத்துக்குள் அவர் கண்ட வெற்றி வேறு விதமாக முடிந்து போகும் அபாயம் ஏற்படும்.
மோதியின்  இந்த இமாலய வெற்றி  வேறு கட்சிகளின் கூட்டணி நெருக்கடிகளுக்கு அவசியம் இல்லாத சூழலை உருவாக்கி உள்ளதுஜெயலலிதாவின் தயவு மோதிக்கு தேவை இல்லாமை மற்றும்  ஜெயலலிதாவின் கெடு பிடிகள் , முகத்திருப்பல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய  அவசியமின்மையை மோதிக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு ... இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இணக்கப்பாடு கிடையாதுகருணாநிதி கூறியிருக்கிறார். இந்த கூற்று வெறும் அரசியல் வாய் வீச்சு என்பது அனைவரும் அறிந்ததே.
இலங்கை இந்திய விவகாரங்கள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கச்சத்தீவு காலம் தொட்டே இரு நாடுகளும் உரசுவதும், பின் கொள்கை சமரசங்களும், தலைமை உறவுகளும்இரு தரப்பு விரிசல்களும் மாறி மாறி அரங்கேறிய காட்சிகளே.எண்பதுகளில் இனப்பிரச்சினையின் பின் இந்திரா காந்தியின்  அரசு இலங்கைப் பிரச்சனையை  பிராந்திய  BIG BROTHER’, ஆதிக்கத்திற்கான வித்தாக ஏற்றுக் கொண்டது.கச்சத்தீவு கை விட்டுப்போனாலும் இலங்கை இனப் பிரச்சினை தன் கையை விட்டுப் போக வாய்ப்பில்லை என்பதில் தொடங்கியது போராளிகளுக்கு உதவும் முனைப்பு.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதே இதன் அடிப்படை. அதன் பின் வந்த அரசுகளுக்கும் இதுவே பிள்ளையார்  சுழி போட்டது.அதன் பின் இந்திய தலையீடு இன்றி இலங்கை விவகாரம் தனித்து இயங்க முடியாதது தவிர்க்க முடியாது யதார்த்தமானது.

மக்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.இந்திய  தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்தக் கொள்கையும் ஒரு கால கட்டத்திலும்  எந்தக் காரணங்களுக்காகவும் அது தொடர்பான வெளி விவகாரக் கொள்கையை மாற்றி அமைக்காது. இந்தியாவில்அரசு மாறலாம், அரசியல் மாறலாம், வெளி நாட்டு உறவுகள் மாறலாம். ஆனால் அது இந்திய  தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளளைவிக்குமானால் முதல் கவனிப்பு இந்தியாவின் பாதுகாப்பு குறித்தே இருக்கும்.அதற்கு நிறைய ராஜ தந்திரம் தேவை. நரேந்திர மோதி  அரசாங்கம் ராஜதந்திர அடிப்படையில் செயல் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. வைக்கோக்களூம் , சீமான்களும், திருமாவளவன்களும் ஊது கோல்களாக இருக்க முடியுமே தவிர தேசிய அளவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விட முடியாது.

இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  நிலைப்பாடு   இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் கையிலேயே தங்கியுள்ளது என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.இது முற்றிலும் உண்மையாகும். தேசியபாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் படுபவரே இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  நிலைப்பாட்டினை நிர்ணயிப்பதில் மோதியின் தேசியபாதுகாப்பு ஆலோசகராக செயல் படுவார். காங்கிரஸ் ஆட்சியில் இந்தப் பதவியில் இருந்த இருந்த சிவ்சங்கர் மேனன், 1987 இலங்கை இந்திய  ஒப்பந்தத்தின் பின்காலப்பகுதியில் அரசியல் செயலராக இருந்த டாக்டர் எஸ் ஜெய்சங்கர், அல்லது இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராக 1984 ஆம் ஆண்டு முதல் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் காலப் பகுதி வரை இருந்த ஹர்தீப் பூரி இந்த பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிட்டக் கூடிய சந்தர்ப்பத்தில் இருக்கிறார்கள். இதில் பூரி இலங்கை தொடர்பான  ஆழமான அறிவு கொண்டவர்.

மோதியை பொறுத்தவரை குஜராத்தின் முதல்வராக இருக்கும் போதே பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளோடு இணக்கமான  உறவு கொண்டாடினார். இலங்கையுடனும் அவ்வாறானதொரு இணக்கமான  உறவையே கொள்வார் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். அப்படி இருக்க வேண்டியது அவரது பதவி உருவாக்கி இருக்கும் ஒரு சூழ்னிலையாகும். அந்த அடிப்படையில் அவர் தனது பதவி ஏற்கும் விழாவிற்கு இலங்கைக்கு அழைப்பிதல் அனுப்புதல் நியாயமானதே ஆகும். இன்னும் இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  நிலைப் பாடே தெரியாத சூழ்நிலையில் இலங்கை அதிபரின் இந்திய வரவு குறித்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பதுசும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பதாகும்.
ஒரு சந்திப்பு நிகழும் வரை எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.இந்திய பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துக் கொண்டால், மக்களின் எதிர்பார்ப்பு இவைதாம்:
இரு தரப்பு அரசும் தமது நட்பு மற்றும் ராஜ தந்திர வட்டத்தினை விசாலப் படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு  நட்பு ரீதியான அழுத்தங்களைத் தரலாம்.
மோதியின் புதிய அரசாங்கம் , பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள 13வது சட்டத்திருத்தத்திற்கு வழி செய்து  மாகாண சபைகளுக்கு காணி, மற்றும் காவல்துறை  இன்ன பிற அதிகாரங்களை வழங்குவதில்  தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து தனது ராஜ தந்திரத்தை பயன் படுத்த வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியின் போது புலிகளுக்கு எதிரான கொள்கை கடைப்பிடிக்கப் பட்டது. சோனியாவின் ஆதிக்கத்தால் , ராஜிவ் காந்தி கொலை தொடர்பான ’பழிவாங்கல்’ கூடுதலான கொள்கையானது. பழையன கழிதலும் , புதியன புகுதலும் என்ற வகையில் இலங்கைத் தமிழர் தொடர்பான இந்திய அணுகு முறையில் கொள்கை மாற்றம் ஒன்றின் தேவை அவசியமானதும், அவசரமானதும்.
மோதிக்கு இலங்கை அரசுடன் நல்லுறவு இருக்க வேண்டியது போலவே தமிழ் மக்களின் நலனும் முக்கியமானது  என்பது  புரிய வேண்டும்.அல்லது அது உணர்த்தப்பட வேண்டும். இது வெறும் புறக்கணிப்பு , கூக்குரல், ஆர்ப்பாட்டம், அரசியல் சாகசம் போன்றவற்றாலும், இந்திய , இலங்கைத் தமிழ்  அரசியல் வாதிகளின் மேடைப் பேச்சுக்களினாலும் மட்டுமே சாதிக்க முடியாது. ஆண்டவனே அரசாண்டாலும் அயராமல், அசராமல், அலட்சியம் செய்வது என்பதே நோக்கமாகக் கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா  தமிழ் மக்களின் நலன் குறித்து தமிழக அரசு சார்ந்து, மோதிக்கு புரிய வைப்பார் என்று எதிர்பார்த்தால் அக் கருத்தை மாற்றிக் கொண்டேயாக வேண்டும். இதை வைத்து  அவர் அரசியல் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை.அதனால் தமிழ்மக்கள் குரலாக , எந்தவித சுய நலமும் இன்றி , இலாபம் கருதாது மோதியுடன் நல்லுறவு ஏற்படுத்தி செயல் பட  ஒரு செயல் குழுவோ அல்லது ஒரு சாணக்கியன் தமிழ் மக்கள் தரப்பில் தேவை.
மோதி அரசு தனக்குப் பெரும்பான்மை கிட்டியதால் எதிர்த்துக் கேட்க கூடிய வலுவான எதிர் கட்சி ஒன்று  இல்லை என்ற காரணத்தினால் மோதி அரசுடன் மோத எவருமில்லை என்ற அலட்சியப் போக்கு தவிர்க்கப் படவேண்டும்.
மோதிக்கு இந்து மதம் போல மகிந்தருக்கு பௌத்த மதம் – அதனால் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற கன்ணோட்டம் பொய்யாக்கப்பட வேண்டும், அதற்கு மோதியின் பழைய அரசியல் நிலைப்பாடு  மன நிலை மாறி,  தான் உலகின் மிக பெரிய ஜன நாயக நாடான இந்தியாவின் பிரதமர், அண்டை நாட்டுப் பிரச்சனைகள் தொடர்பான தமது நிலைப்பாடு பிராந்திய நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் என்ற பரந்த மனப்பான்மையுடன் ஒரு தீர்வுக்கு வழிகோலும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.
சீனா , பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இதுவரை மாநில அளவில் நல்ல உறவைப் பேணி வந்திருக்கும் மோதி இனி தேசிய அளவில் அந்த உறவினைப் பேணுவதனால்  பிராந்திய நல்லிணக்கத்துக்கு முயற்சிப்பது சீன, இந்தியா , இலங்கை கூட்டு உறவில் சிலத் தெளிவுகளைக் காட்டி சுமுகத்தீர்வுகளைக் கொண்டு வரலாம்.

மேற்படி சொன்னவை எல்லாம் ஒரு மதிப்பீடு தான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசை விட இந்திய அரசியல்வாதிகள் சக்தி வாய்ந்தவர்கள் . அவர்கள் நிறம் மாறும் வேகத்தில் தான் இலங்கைப் பிரச்சனை தீர்வும்,  வரமாக அல்லது சாபமாக அமையும் என்று மறந்து விட வேண்டாம்.

No comments:

Post a Comment