Google+ Followers

Tuesday, December 9, 2014

தமிழ் நாணயங்கள்

நாணயங்கள் மூலமே தமிழர் வரலாற்றை உலகறியும்
ஆருத்ரா

சென்னை திரு மயிலையில் உள்ள  சிவகாமி பெத்தாச்சி நிகழ்வரங்கில், நாணயவியலாளர் ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘செழியன்’ நாணயங்கள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

புத்தகத்தை தமிழ்நாடு தொல்லியல்துறை முன்னாள் இயக்குனர் இரா.நாகசாமி வெளியிட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.திருமலை பெற்றுக்கொண்டார். “ நாணயங்கள் மூலமே தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள முடியும்,'' என்பது டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி யின் நம்பிக்கை.

இரா. கிருஷ்ணமூர்த்தி தமிழக நாணயவியல் ஆராய்ச்சியில் முன்நிற்பவர். அதிலும் குறிப்பாகச் சங்க கால நாணயங்கள் நூலை வெளியிட்டவர். 1984இல் சங்க காலப் பாண்டிய நாணயமாகிய பெருவழுதி காசு கண்டுபிடிக்கப்பட்டது. 1986இல் சங்க காலச் சோழர் நாணயங்கள் பின்  சங்க காலச் சேரர் நாணயத்தைக் கண்டுபிடித்தார். கிருஷ்ணமூர்த்தி எழுத்துகள் இல்லாத சேரர் காசுகளை முதலில் கண்டுபிடித்தார். பின் இரா. நாகசாமி கொல்லிப்புறைக் காசைச் கண்டு பிடித்து வெளியிட்டார். பின் புகழ் பெற்ற மாக்கோதை காசைச் கண்டு பிடித்து 1990இல் இரா.  கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அவரே பின்னர் குட்டுவன் கோதை காசைக் கண்டுபிடித்து 1994இல் வெளியிட்டார்.

தொடர்ந்து, ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஏற்புரை ஏற்று பேசியபோது ,
’இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கொற்கைத் துறைமுகம் இருந்தது. உலகிலேயே சிறந்த முத்துகள் விளைந்த இடமாக இந்தப் பகுதி கருதப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள பாத்திரக் கடையொன்றில் பழைய நாணயங்களை நான் வாங்கினேன். பல ஆண்டுகளாக ஆற்று மணலில் புதையுண்டு கிடந்த நாணயமாக அது இருந்ததால், அதை சுத்தம் செய்ய முடியவில்லை. அந்த நாணயங்களை ஒரு குவளையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

”சங்க கால மதுரை பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் பின்புறத்தில், கோட்டு வடிவுடைய மீன் சின்னம் தான் இருக்கும். ஆனால், இந்த நாணயங்களின் பின்புறம் கிரீடம் அணிந்த மன்னர் தலை பொறிக்கப்பட்டுள்ளது. எனவே கொற்கையை ஆண்ட பாண்டியர்கள் சுய ஆட்சி புரிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.அசோகர் வெட்டிய கல்வெட்டுகளில் தன் பேரரசின் தெற்கு எல்லையாக, சோடா, பாடா, சதியபுதோ, கேதல புதோ, தாம்ப பம்னி என்று கூறி உள்ளார். மேலும், தாம்ப பம்னி என்ற பெயர் பாலி மொழியில் உள்ளதாகவும், அதை ‘தாம்ர பர்னி’ என்று தான் படிக்க வேண்டும் என்று எழுதி உள்ளார்.

அசோகர் காலம் கி.மு. 3–ம் நூற்றாண்டு ஆகும். அக்காலகட்டத்தில், செழிய, செழியன் நாணயங்களை வைத்து கொற்கையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள் சுயாட்சி புரிந்து இருப்பார்கள் என்று கருதுகிறேன். தற்போது, நாணயவியல் ஆராய்ச்சி தமிழக இளைஞர்களிடம் பரவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமி, சென்னை, செம்மொழி ஆராய்ச்சி மத்திய நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் க.ராமசாமி, ரீச் பவுண்டேசன் நிறுவனர் தி.சத்தியமூர்த்தி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, புலத்தலைவர் சுவடிப்புலம் கு.ராஜவேலு ஆகியோர் புத்தகம் குறித்து சிறப்புரையாற்றினர்.

நாணயம் பற்றி
- இக்காசுகளில் காணப்படும் செழியன் மற்றும் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் செழியன் என்ற இரு சொற்களும் ஒரே கால தமிழ் பிராமி போல் தெரிவதால் இவற்றின் காலத்தை கி. மு. இரண்டாம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கொள்கின்றனர்.
0.900 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 8 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
6.7 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 1.9 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வேந்தனின் தலை, தலைக்கவசம் அணிந்துள்ளார், கவசத்தின் பின்புறம் அலங்கார அணிகலன்கள், கூர்மையான நாசி, நீண்ட மீசை போன்றவை காசில் தெரிகின்றன. 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில் தலை அருகில் 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. பின்புறத்தில் யானை, நீண்ட சதுரத் தொட்டி, அதில் இரண்டு மீன்கள், சுவாசுதிக்காச் சின்னம் போன்றவை உள்ளன