Monday, December 29, 2014

போபால் விஷ வாயுக் கசிவு

இரவில் வந்த எமன்
போபால் விஷ வாயுக் கசிவு
வெள்ளி விழா கண்ட வழக்கு

வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் (சிட்னி)

இந்தியாவில் சாதாரண பொதுக்களின்  உயிரும், அவர்களுக்குக் கிடைக்க  வேண்டிய நீதியும் , பண பலம், படை பலம், அரசியல் பலம்  மற்றும் இதர கேவலங்களின் காலடிகளில் நசுக்கப்பட்டு மதிப்பிழந்து வருகின்றது என்பதற்கு போபால் விஷ வாயுக் கசிவு ஒரு உதாரணமாகும்.இந்த ஆண்டுடன் முப்பது வயதாகும் இந்த கோரச் சம்பவம் ஆயிரக்கணக்கான உயிர்களை அள்ளிப்பருகியிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில், போபால் நகரின் மத்தியில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு  பயங்கர சம்பவம் நிகழ்ந்தது.  அங்கு  அமைந்திருந்த,அமெரிக்க நிறுவனமான, யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து 40 டன் அளவிலான  விஷ வாயு கசிந்தது. போபால் நகரில் நடந்த  இந்த  விபத்து நடந்த உடன்  சுமார்  நாலாயிரம்  பேரின் உயிரை உடனடியாகப் பறித்தது போதாது என்று , கடந்த முப்பது  ஆண்டுகளில் விபத்தினால் மேலும்  சுமார்  இருபத்தைந்து  ஆயிரம் உயிரைக் காவு கொண்டது கொடுமையாகும். தவிர , அங்குள்ள  தொழிற்சாலைப் பகுதியில் உள்ள 350 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுப் பொருட்கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன் நிலத் தடி நீரும் மாசடைந்து வருகிறது.

போபால் நகரில் பூச்சி மருந்து தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான "யூனியன் கார்பைடு" என்ற தொழிற்சாலை இருந்தது. இந்த தொழிற்சாலையில் பூமிக்கு அடியில் “மிக்’ எனப்படும் " மீதைல் ஐசோ சயனைடு" என்ற வாயு சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த விஷ வாயுவாகும்.பூச்சி மருந்து தயாரிக்க பயன்படுவதாகும்.
டிசம்பர் மூன்றாம்  நள்ளிரவு 1 மணி அளவில் விஷ வாயு சேமிப்பு தொட்டியை மூடியுள்ள வால்வு, தொட்டிக்குள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உடைந்தது. இதனால், விஷ வாயு கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வெளியேறியது. சிறிது நேரத்திலேயே அங்கிருந்த அதிகாரிகள் இதனை கண்டுபிடித்தார்கள். 40 நிமிட நேரத்தில் கசிவு நிறுத்தப்பட்டது. என்றாலும், அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷ வாயு நகரத்திற்குள்ளும், நாற்பது  சதுர கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள்ளும் பரவியது. இரசாயனக் கூடத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் ஜயப்பிரகாஷ் நகர், காசி காம்ப், சோலா கென்சி, ரயில்வே காலனி ஆகியவற்றில் வாழ்ந்த மக்கள் யாவரும் விஷ வாயுவுக்குப் பலியாயினர்

ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மயக்கம் போட்டு விழுந்தார்கள். மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவையும் ஏற்பட்டன.இந்த விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளானவர்களில் சுமார் 300 பேர் அன்றைய தினமே பரிதாபமாக மரணம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களை பஸ், லாரி, டெம்போ, கார், ஸ்கூட்டர் என்று எது கிடைத்ததோ, அதில் ஏற்றி மருத்துவமனைகளுக்குக் கொண்டு போனார்கள்.

விஷ வாயுவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே சென்றது. ஐந்தே நாட்களில் சாவு எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்தது. 50 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வை இழந்தார்கள். மரணம் அடைந்தவர்களில் அதிகமாகனவர் குழந்தைகள்தான். இன்னமும் கூட இந்த் விபத்தின் தாக்கம்  போபாலின் 24 சதவீதக் கருக்களை, கருவிலேயே சிதைத்டுக் கொண்டிருப்பதுடன் ,  இன்னும் ஏராளமான கருக்கள் உடல் ஊனமுற்றுப் பிறப்பதற்கும் உபயம் செய்த தொழிற்சாலை "யூனியன் கார்பைடு" நிறுவனமாகும். இன்னமும் கூட மாதந்தோறும் பதினைந்து முதல்  இருபது பேர்  பேரைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது இந்த விபத்தின் சுவடுகள்.
இந்த விபத்து சுற்றியுள்ள அனைவருக்கும்  பாரிய  அழிவை ஏற்படுத்தியது.ஆனால் விஷ வாயு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரையும் இது பாதிக்கவில்லை. இதனால் தொழிலாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தொழிற்சாலைக்கும் சேதம் ஏற்படவில்லை என்பது அதிசயமே.

இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த மத்திய பிரதேசத்தின்  உயர் நீதிமன்ற நீதிபதி என்.கே.சிங் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. உடனேயே தொழிற்சாலை பொது  மேலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள்  ஐவர் கைது கவனயீனம், கொடூர நடவடிக்கை போன்ற பல குற்றங்களுக்காகக் கைது  செய்யப்பட்டனர்..   அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் லாரன் ஆண்டர்சன் என்பவர்தான் "யூனியன் கார்பைடு" தொழிற்சாலையின் நிர்வாகக் குழு தலைவராக இருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் போபால் நகருக்கு வந்து இறங்கியதுமே அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள். தவிர  யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் இந்திய நிர்வாக அதிகாரி கேசவ மகேந்திரா, மானேஜிங் டைரக்டர் வி.பி.கோகலே ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆனால் பண மற்றும் ஆள் பலம் காரணமாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளரான, வாரன் ஆண்டர்சன், 1984ல் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா வுக்கு  பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது  ம.பி.,யில் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் அரசு அவர் தப்பிச் செல்ல துணை நின்றது. .அதன்பின் வாரன் ஆண்டர்சன், இந்தியா பக்கம் வரவே இல்லை; கடந்த செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தும் போனார். பாதிக்கப்பட்டவர்களூக்கு எவ்வித இழப்பீடும் வழங்கவும் இல்லை. 'பிடி ஆணை' பல பிறப்பிக்கப் பட்ட பிறகும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அந்த நிறுவனத்தை, 'டவ்' என்றநிறுவனத்திற்கு ஆண்டர்சன் கை மாற்றி விட்டார். டவ்  நிறுவனம்  11.9 பில்லியன் டாலருக்கு வாங்கியது . ஆனால் பாதிக்கப்பட்டோருக்குக் கிடைத்தது வெறும் 90 மில்லியன் டாலர் மட்டுமே.மீதம் யூனியன் கார்பைடு கண்ட லாபம்.


பல ஆண்டுகள் விசாரணை நடந்து முடிந்த பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தொகை கிடைத்தது. எப்படித்  தெரியுமா? இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.குறிப்பாக அமெரிக்கத் தொழிலதிபர் லாரன் ஆண்டர்சன். குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் ஆர்.பி ராய்சவுத்ரி  இறந்து விட்டார்.

ஆண்டுகள் நடைபெற்று,  வெள்ளி விழா கண்ட இவ்வழக்கின் தீர்ப்பை கடந்த 03. 06 2010 அன்று நீதிபதி மோகன் திவாரி வழங்கினார்.குற்றவாளிகள் 8 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் , ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய்  அபராதமும், யூனியன் கார்பைடுக்கு ரூ. 5 லட்சம் அபராதமும்  விதிக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் குற்றவாளிகள் ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பணம் செலுத்தி ஜாமீனில் விடுவிக்கவும்  தீர்ப்பளித்தது.நீதியின் கரங்கள் சாமானியர்களை எட்டுவதற்கு ஒரு யுகம் தேவை ஆனால் விலைமதிப்பில்லா  உயிர்களூக்கு நட்ட ஈடு வழங்க சில ஆயிரங்கள் போதும் என்ற  முகத்தில்  அறையும் உண்மையை உணர்த்துவதாக இந்தத் தீர்ப்பு அமைந்தது. 


No comments:

Post a Comment