Google+ Followers

Monday, December 29, 2014

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் 1964

ஒப்பந்தத்துக்கு வயது ஐம்பது
சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம்    1964
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
வழக்கறிஞர் சிட்னி

அப்போது பிரதமர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி மற்றும்   சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டார நாயக்கவும் ஒரு கடிதம் மூலம் செய்து கொண்ட இரண்டு பக்க ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம்  50 வயதினை இந்த ஆண்டு  எட்டுகிறது.
இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக  அடையாளம் காணப் பட்ட  காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சிறிமாவோ சாஸ்திரி   ஒப்பந்தம் உடன் பாடாகியது. இருவரும் பேசினார்கள். உடன் பட்டார்கள் ,கையெழுத்து இட்டார்கள். இரு பிரதமர்களாலும் , சிறிமாவோ சாஸ்திரி   ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டது., இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழரால் மறக்க முடியாதது இந்த ஒப்பந்தம்.

இந்த அவசர ஒப்பந்தம், இந்திய பாராளுமன்றத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.ஆச்சார்ய கிருபளானி இந்திய வம்சாவளினருக்கு எதிரான  நீதியற்ற செயல் என்று வர்ணித்தார். அப்போது தி மு க அமைச்சராக இருந்த கே மனோகரன் இந்த ஒப்பந்தம் உடண்டியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றார். அப்போது தி மு க தலைவராக இருந்த நாவலர் நெடுன்ஞ்செழியன் 1964 ஒக்டோபெர் 31 ஆம் தேதி சட்ட சபையில் பேசும் போது” இந்த ஒப்பந்தம் ஏமாற்றத்தையும், திருப்தியின்மையையும் தருவதோடு, ஒரு பெரும் சுமையையும் தமிழ் நாட்டுக்கு தந்திருப்பதாக குறிப்பிட்டார். அப்போது தமிழ் அரசு கழகத் தலைவாராக இருந்த  ம பொ சிவஞானம் இது மிகவும் அதிர்ச்சிக்குரியதாகவும், வலி தரும் ஒப்பந்தம் என்றதோடு இலங்கை அரசை சமாதனப்படுத்த  இந்திய அரசு இந்த ஒப்பந்தம் மூலம் கொடுத்துள்ளது மிகப் பெரிய விலை என்றும் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய குறைபாடு சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துக் கேட்கப் படவில்லை  அவர்களின் உணர்வுகளூக்கும் , தேவைகளூக்கும் மதிப்பளிக்கப்படவில்லை என   அரசியல் அவதானிகளால்  வர்ணிக்கபப்ட்டது.
இந்த ஒப்பந்தத்தின் குறைபாடுகள் பின் வருமாறு:
முதலாவதாக, இரு தரப்பு அரசு அதிகாரிகளூக்கும் எந்த வகையில் மக்களூக்கு குடியுரிமை அளிப்பது என்பதில் தெளிவின்மை.
இரண்டாவதாக,  0.525 மில்லியன்  மக்களை இந்தியா எற்றுக் கொள்ள முன்வந்த முடிவு  , ஆண்டுக்கு 35 ஆயிரம் பேரை இந்திய அரசுக்கு மேலதிக சுமையாக்கியது.
மூன்றாவதாக, பெரிய அளவு மக்களை  1,500,000 பேர் பற்றிய  தெளிவான ஒரு முடிவு எடுக்காமல் நட்டாற்றில் விட்டது.
நான்காவதாக, சட்டம் , கொள்கை, பரஸ்பர வாதங்கள் ஏதுமேயில்லாமல் இலங்கையில் அப்போது நிலவிய அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்திய வம்சாவளி மக்களிற்கு இந்தியா தன் தார்மீகக் கடமையினை செய்ய முன்வந்ததின் விளைவாகும்.
ஐந்தாவதாக , பணியிலிருந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு அவர்கள் இந்தியா செல்லும் வரை பணியை உறுதி செய்த இந்த ஒப்பந்தம் வேலை இல்லாமல் இருப்பவருக்கு எந்த உறுதியும் தராத படியால் இந்திய வம்சாவளி மக்களுக்கு நீண்ட கால வேலை இல்லாமையை இந்த ஒப்பந்தம் உருவாக்கி விட்டது.

ஆறாவதாக, பதினைந்து ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட ஒரு தலைமுறை கால கட்டம். எந்த நாட்டுக் குடியுரிமை என்று தீர்மானிக்கும் வரை அந்த மக்கள் குடியுரிமை நிலையின்மையால் அவதிப்படும்  சூழ்னிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஏழாவதாக இந்த ஒப்பந்த அமுலாக்கலில்  ஒரு தெளிவின்மை அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளைச் சிக்கலாக்கியது.அதனால் மிக்க கால தாமதம் , குழப்பம், யாரிடம் அனுமதி பெறுவது போன்ற அணுகுமுறைகளில் குழறுபடிகள் எல்லாம் 15 ஆண்டுகாலத்தை 17 ஆண்டுகளாக இழுத்தடித்தது. மக்களுக்கும் இழுபறியாக இருந்தது.

எட்டாவதாக , சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் இல்லாமை.
கடைசியாக அப்பாவி இந்திய வம்சாவளி மக்கள் வேரோடு பிடுங்கப்பட்டு இன்னொரு இடத்தில் எந்த முன்னேற்பாடும் இன்றி வீசப்பட்டனர்.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் தேதி, இலங்கை சுததந்திர  நாடானது. ஆனால் அனைத்து அரசியல் வாதிகளின் புண்ணியத்தில் பாவப்பட்ட , நாட்டின் பொருளாதாரத்தை நிமிர வைத்து தான் கூனிக் கொண்டு நின்ற  அப்பாவி மலையகத்தமிழ் மக்கள் இந்தியர் மட்டுமே என்று அவர்களது குடி உரிமை மறுக்கப்பட்டுவிட்டது அரசியல் விபத்தாகும்.அவ்ர்களது குடியேற்றம் சட்ட விரோதமானதாக அடையாளம் காணப்பட்டது. இலங்கை அரசு அவர்களை அலட்சியம் செய்தது. இது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேரு இதுகுறித்து முதல்   இலங்கை பிரதமர் ஜோன் கொத்தலாவலவிடம் பேசினார். தொடர்ந்து  1954 இல் நேரு  கொத்தலாவல ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்ததில் இந்தியாஇந்திய குடியுரிமை வேண்டுவோருக்கு இந்தியக் குடியுரிமை தர ஒத்துக்கொண்டது. அதே சமயம் இலங்கை குடியுரிமை பெறத் தகுதி இல்லாத அனைவருக்கும் தானாகவே இந்தியா குடியுரிமை தர வேண்டும் என்ற இலங்கையின் நிலைப்பாட்டினை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க  இலங்கை அரசு எந்த முயற்சியும்  மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. நேருவின் மறைவைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினரின் குடி உரிமைப் பிரச்சினை கிடப்பில் போடப்பட்டது. அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை குறியாக இருந்தது. தொடர்ந்து பிரதமரான  சாஸ்திரி காலத்தில் சீன இந்திய எல்லைப் பிரச்சனை போரில் முடிவடைந்தது. சிறிமா அப்போது இலங்கையின் பிரதமராகி இருந்தார். சீன அரசின் சில்மிஷங்களைக் காட்டி இந்தியாவின் தென் பகுதி பாதுக்காப்பை பகடையாக்கி புது ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திட தருணம் வாய்த்தது. இலங்கையின் வற்புறுத்தலை இந்திய அரசு ஏற்றது. அதற்கான கூட்டத்தில் தமிழக அமைச்சர் வி. ராமய்யா, அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங். ஆகியோர்  பங்கேற்றனர்.ஆனால் எவருமே வாய் திறக்கவில்லை.
அதன் விளைவாக 1964 அக்டோபர் 30 அன்று  சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன. இன்று போல் அன்றும் இந்திய அரசு இலங்கைத் தமிழர் தொடர்பாக  மௌனித்து இருந்தது வரலாற்றுத் துயரமே. இதன் படி, இலங்கையில் குடி உரிமையற்று, நாடற்றவர்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது என்று தீர்மானமானது. எஞ்சியுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது.1967 இல் தான் இது அமுலுக்கு வரும் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால், 1967 க்கு முன்னரே இந்த ஒப்பந்தத்தைக் காட்டி   சில  தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை இலங்கை அரசு இந்தியாவிற்கு அனுப்பியது தட்டிக்கேற்கப்படாத  கொடுமை.தமிழர்கள் பறி கொடுத்த பல உரிமைகள் 1964 இல் அரங்கேறின  என்பது அரசியல் அசிங்கம். சேது சமுத்திரத் திட்டம் மறக்கப்பட்டதும், கச்சதீவு தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக அரசியல் இலாபங்களுக்காக பலியாக்கப்பட்டதும் அவற்றில் முக்கியமானவை.

தொடர்ந்து கூட்டம் கூட்டமாகத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை கப்பலில் ஏற்றி தென்னக கரைகளில்  குப்பைகளைப் போல இறக்கி விட்டனர். பல ஆண்டுகளாக இலங்கையின் கலாச்சாரத்துடன் ஒன்றி வாழ்ந்த தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் இந்தியமண்ணில் அந்நியர் போல உணரத் தொடங்கினர். தேயிலைத் தோட்டத் தொழில் தேடி அலைந்தனர். இந்திய மண்ணில் வேர்களைத் தொலைத்த அவலம் அவர்களுடையதானது.அது மட்டும் அல்ல தொழில்,   பொருளாதாரம், கலாச்சாரம்பரமபரை உறவுகள், நம்பிக்கை ஆகியவையும் அவர்கள் தொலைத்தவற்றுள் அடங்கும்.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான ஒப்பந்தம் ஓர் ஒற்றைக் கடிதத்தில்  அடக்கப்பட்டது. மலையக மக்களின் வாழ்க்கையும் தான்.

சிறிமாவோ சாஸ்திரி   ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துக்கள்:

இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பான கடிதப் பரிமாற்றம்.

இந்தியப் பிரதமர் கடித  எண். 446/PMO/64
புது தில்லி
அக்டோபர் 30 1964

மேதகு பிரதமருக்கு

தங்கள் கடித எண்  CIT/ICP/62    கிடைக்கபெற்றேன் .கடந்த அக்டோபர் , 1964 ,  24 முதல்  30 வரை  தினங்களில் நமக்கிடையில் நடந்த  இந்திய வம்சாவளி மக்களின் நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நமது உரையாடல் சார்ந்து வந்த தங்கள் கடிதம் கண்டேன். அதன் அடிப்படையில் பின்வரும்  முக்கிய தலைப்புகளின் கீழ் இணக்கம் தெரிவிக்கிறேன்.

1.இந்த ஒப்பந்தத்தின்  நோக்கம் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக அங்கீகாரம் பெறாத , இந்திய வம்சாவளி அனைவரும் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகும்.
2. இந்த வகையில் அடங்குவரின் எண்ணிக்கை 1964 இல் 975,000 பேர். இது கள்ளத்தனமாக குடியேறிவர்களையும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர்களையும் உள்ளடக்காது.
3.இவர்கள் அனைவருக்கும் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக அங்கீகாரம் வழங்கப்படும். இவர்களுள் 3 லட்சம் பேருக்கு, இயற்கையாக அதிகரிக்கும் மக்கள் தொகை சேர்த்தும், இலங்கை ஏற்றுக் கொள்ளும். இந்தியா 525,000 பேரை இயற்கையாக அதிகரிக்கும் மக்கள் தொகை சேர்த்தும் இந்தியா , இந்திய குடிமக்களாக அங்கீகாரம் வழங்கும்.
4. எஞ்சியுள்ள 150,000 பேருக்கு, இரு தரப்பு அரசும் இணைந்து  தனியாக வேறு ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தீர்வு வழங்கும்.
5. இந்திய அரசு  இவர்களை 15 ஆண்டு  கால கட்டத்துக்குள்  பல கட்ட நிலைகளில் ஏற்றுக்கொள்ளும்.
6. மேற்படி பந்தி 3 மற்றும் 5 இன் படி இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரே கால அட்டவணையின் கீழ் குடியுரிமை வழங்கல் மற்றும் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நபர்களின் எண்ணிக்கை சம அளவில் இருக்குமாறு இரு நாடுகளும் பார்த்துக் கொள்ளும்.
7.இந்த வகையில் தாய் நாடு திரும்பும் மக்களின் வசதி வாய்ப்புக்களும், வேலை வாய்ப்புக்களும்  மற்ற மானிலங்களை ஒத்திருக்க இலங்கை அரசு ஒத்டுழைப்பை வழங்கும்.திரும்பிச் செல்லும் காலம் வரை , அவர்கள் பணி வயது எல்லை 55 எட்டும் வரை அவர்கள் வேலை நீகம் செய்யப் பட மாட்டர்கள்.
8. இலங்கை அரசின் பண மாற்றீட்டு வரம்பிற்கு உட்பட்டு அவர்கள் இறுதியாக நாடு திரும்பும் போது அவர்களின் பணியில் கிட்டும்  ஓய்வூதியம் , நலன் நிதி உட்பட அனைத்து சொத்துக்களையும் இந்தியாவுக்கு கொண்டு செல்ல இலங்கை தடை விதிக்காது. இந்த தொகை Rs. 4,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று இலங்கை நிர்ப்பந்திக்காது.         
9.உடனடியாக இரு பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு ஒன்று நாடு திரும்புவோர் பட்டியலையும் , மற்றது இலங்கை குடியுரிமைப் பெறுவோரையும் உள்ளடக்கும்.ஆனாலும் இதனைத்  தயாரிக்க எடுக்கும் காலம் நாடு திரும்புவோர் மற்றும் இலங்கை குடியுரிமைப் பெறும் முன்னதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.
10.இந்த ஒப்பந்தம் இந்த நாள் முதல் அமுலுக்கு வருவதுடன் இது தொடர்பாக சிறந்த  செயல்பாட்டு முறைகளைக் கொண்ட அரசு இயந்திரத்தினை உருவாக்க இரு தரப்பு அரசு அதிகாரிகளும் உடனடியாக சந்தித்து பேசுவார்கள்.
இந்த நாளில் இந்த ஒப்பந்தம்  இலங்கை இந்திய அரசுகளின் ஒப்பந்தமாக  அமுலுக்கு வருகிறது
எனது இந்தக் கடிதமும் உங்கள் பதிலும் ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்படும் என இத்தால் தெரிவிக்கின்றேன்
இரண்டு  பக்கத்துக்கு மிகாத முக்கிய அம்சங்களுடன் இந்தக் கடிதங்களே  இந்திய வம்சாவளியினரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக இருந்தது.

இந்தியத் தமிழர்களைக் கலந்தாலோசிக்காமல் , அவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுதப்பட்ட வரலாறறுச் சிறப்பு வாய்ந்த கடிதம் இது.