Sunday, March 2, 2014

தலையங்கம் செப்டெம்பெர் 2013

இலங்கைப் பிரச்சனையை வைத்தே இந்திய   தேர்தல்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக தமிழக தேர்தல்களில் இலங்கைப் பிரச்சனை தொடர்பான தேர்தல் கொள்கைகள் முக்கிய பங்கு வகித்தன.தேர்தல்கள் முடிந்த பின்னர் இந்தக் கொள்கைகள் அனைத்துக் கட்சிகளினாலும் உடைப்பில் போடப்படும் என்பது சரித்திரச் சான்றாகும். “நாயை எங்கே அடித்தாலும் அது காலைத் தூக்கும்என்பது போல இந்திய அரசியலில் எது என்றாலும் உடனே இலங்கைப் பிரச்சனை பெரிதாகத் தூக்கிப் பிடிக்கப்படும். அது போலவே  ஆஸ்திரேலிய அரசியலை அகதிகள் பிரச்சனை ஆட்டி படைக்கின்றது என்றால் மிகையாகாது.
லேபர் கட்சியின் கெவின் ரட் அறிமுகம் செய்துள்ள அகதிகள் தொடர்பான ப்புவா நியு கினி  முகாம் கொள்கைகள் கடும்விமர்னத்துக்கு உள்ளாகி உள்ளன.இது தேர்தல் தொடர்பாக நகர்த்தப் படும் ஓர்  அரசியல் காய் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் ,லிபரல் கட்சி தனது தேர்தல் கொள்கையில் இனி வரும் அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப் படுமெனவும், இதுவரை படகுகள் மூலம் வந்துள்ள அகதிகளுக்கும் இதே  கதிதான்  எனவும் தெரிவித்துள்ளது. ‘நமது நாட்டிற்குள் யார் வருவது என்பதை நாமே தீர்மானிப்போம்’ என்று டோனி அப்பட் , முன்பு ஜோன் ஹாவர்ட் சொன்னதைத்தான் இப்போது  பின் மொழிந்துள்ளார்.தவிர இங்கிலாந்தினை பின் பற்றி அகதி மீளாய்வு முறை அகற்றப் படும் எனவும் ஒரே அலுவலர் புகலிட நிர்ணயம் செய்த பின் மூன்று மாத காலத்துக்குள் கோப்பு மூடப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவையெல்லாம், ஆஸ்திரேலியா ஐக்கிய நாடுகளின் அகதி மாநாட்டு ஒப்பந்தத்தின் கையொப்பதாரியாக  ஒரு பொம்மை போல செயல்பாட்டு தன் கடமையை செய்ய தவறவில்லை என்பது போல ஒரு மாயை செயல்பாட்டு நடவடிக்கையே என்று தோன்றுகிறது.
ஆட் கடத்தல் நடப்பது உண்மை என்றாலும் கூட அப்பாவி அகதிகள் பாதிக்கப்படுவது வருத்தத்துக்குரியது. எந்தக் கட்சி வந்தாலும் அகதிகள் கொள்கை கையிலெடுக்கப்பட்டு தமது நிலையை தக்க வைத்துக் கொள்ளும் ஒரே நோக்கில் ஆஸ்திரேலியா சர்வதேச பொறுப்புக்களை காலில்போட்டு மிதிப்பது  கண்டிக்கத்தக்கது. குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு சர்வதேச உடன்படிக்கையின் தார்மீக பொறுப்புகளை சுமக்கும் கையொப்பதாரி , கடமைகளை மறந்து , மறுத்து நடந்து கொள்வது சர்வதேச அளவில் நகைப்பிற்கிடமாகவே உள்ளது.
இது அரசியல்வாதிகளுக்கு சாதரணமாக இருக்கலாம்.அரசாங்கத்துக்கு அழகல்ல. அகதிகள் தொடர்பான தெளிவான மனிதாபிமானத்துடன் கூடிய ஓரே கொள்கை உருவாகும் வரை இந் நிலை மாறாது.






No comments:

Post a Comment