Google+ Followers

Monday, March 17, 2014

இந்தியாவின் ‘காதல் கோயில்’ (கோட்டை)

இந்தியாவின் ‘காதல் கோயில்’ (கோட்டை)
’கஜுராஹோ’
ஆருத்ரா
இந்தியாவின் ‘காதல் கோயில்’ (கோட்டை) எங்கிருக்கிறது  தெரியுமா? இந்தியாவில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ‘பண்டேல்கந்த்’ என்ற கிராமத்தில்  கஜுராஹோ கோயில் அமைந்துள்ளது. ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த சண்டெல்லா அரசர்களே இவற்றை உருவாக்கியவர்கள். இக்கோவில்கள் சிற்றின்பம் சார்ந்த சிற்பங்களளைக் கொண்டு இருப்பதால் காமசூத்திரா கோவில்கள் என்றும்  இக்கோவில்கள்  அழைக்கப்படுகின்றன.
‘கஜூரா’ என்றால் அதற்குப் பேரீச்சம்பழம்  என்று  அர்த்தமாகும்.இந்தக் கோவில்களைக் கட்டிய காலம்   950 ஆம் ஆண்டு மற்றும் 1150 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் எனப்படுகிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக இந்த நினைவுச்சின்னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் மேலும் ஜெகதாம்பி தேவி ஆகிய தெய்வங்களுக்கு  இங்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பின் எப்படி ‘காதல் கோயில்’ என்று நீங்கள் கேட்கும் அவசரம் புரிகிறது. காதலுக்கு முக்கிய தேவை பொறுமை.கோவிலின் உள்ளே பேரின்பத்துக்கும் கோவிலின் வெளியே சிற்றின்பத்துக்கும் முக்கியத்துவம் அளித்து இக் கோயில் கட்டப் பட்டுள்ளது. இறைவனை அணுக ஒருவன் தன்  உடல் இச்சைகளையும், சிற்றின்ப   விருப்பங்களையும் கோவிலுக்கு வெளியே விட்டு வரவேண்டும் அப்போதே பேரின்பம் கிட்டும் என உருவப்படுத்திக் காட்டுகிறது.

இங்குள்ள சிற்பங்கள்  ஜைன , பிரமண்ய முறைகளின் படி அமைந்துள்ளன.கோயில் அமைப்பு கைலாய மலையை ஒத்த அடுக்குக்களின் அமைப்பை ஒத்தது.
பண்டைக் காலத்தில் ஆண்கள் தமது இளம் பிராயத்தில் பிரம்மசார்யம் காப்பது மரபாக இருந்தது. ஆசிரமங்களில் தங்கி முனிவர்களைக் குருவாக கொண்டு,  பிரம்மசரியம் புலன்களை அடக்கி கல்வியே நெறியாக இருத்தல் , கிருஹஸ்தம் இல்லறத்தில் நல்லறம் காண்பது , வானப்பிரஸ்தம் மனைவியுடன் காட்டில் வாழ்வது, முக்தி அபீஷ்டம் அடுத்த பிறவி எடுக்காமல் முத்தி எடுப்பதற்கு  இருக்க வேண்டிய கடமைகளை  ஆற்றுவது ஆகிய  நான்கு நல் நெறிகள் பிராமணர் மரபாக இருந்தது.
இக் கோயிலின்  வெளிப்புறத்தில்  காணப்படும் சிற்றின்ப சிற்பங்கள் பிரம்மசார்யம் காத்தவர்கள் தங்களை உலகியல் வாழ்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளவும், குடும்பத்தலைவர்களாகவும்,  நல்ல கணவனாக உருவாகவும் கற்றுக் கொள்வதற்காகவே  இந்தச் சிற்பங்களை உருவாக்கினார்கள் என்றே கொள்ள வேண்டும்.
வெறும் பாலியல் சம்பந்தப்பட்ட சிலைகள் மட்டுமே இருக்கும் என்று எண்ணினால் அது மிகவும் தவறு. அங்கே உள்ள இருபத்தி இரண்டு  கோயில்களில் நான்கு அல்லது ஐந்து கோயில்களில் மட்டுமே பாலியல் சம்பந்தமான சிற்பங்கள் இருக்கும். ஏனைய  கோயில்களில் ஆன்மிகம் சம்பந்தமான சிலைகளே உள்ளன என்பதே உண்மை.
இச் சிற்பங்கள்  சித்தரிக்கும் உலகியல் இன்பங்களைக் கவனிப்பதன் மூலம்  உடல் சார்ந்த துய்ப்பிற்குத் தேவையான கல்வியை கற்றுக்`கொடுக்க முனைப்பதே இந்த சிற்பங்களின் நோக்கமாகக் கொள்ள வேண்டும். பாலியல் கல்வியின் பயன் பாட்டிற்கே இந்த சிற்பங்கள் கருவிகளாக இருந்திருக்க வேண்டும்.

யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கஜுராஹோ என்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஏறத்தாழ பதின் மூன்றாம்  நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோயில் . பத்தொன்பதாவது  நூற்றாண்டில் கஜுராஹோவில் எண்பதிற்கும்  மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இப்போது மிச்சமிருப்பவை சுமார் இருபது  கோயில்கள் மட்டுமே. ஆனாலும் இருபதாம்  நூற்றாண்டினை எட்டும் வரை யாருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிய செய்திகளோ சிறப்புகளோ தெரிந்திருக்கவில்லை. இதற்கு காரணம் பல படையெடுப்புகள் இந்தியாவை ஆக்கிரமித்தன. குறிப்பாக பிரிட்டிஷ் ராச்சியம் இங்குள்ள கலைசெல்வங்கள் அனைத்தையும் கொண்டு போய் விடக் கூடாது என்பதில் இங்குள்ள மக்கள் குறியாக இருந்திருக்கின்றனர்.அதனால் தான் இந்த கோயில்கள் இருக்கும் இடத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட காலம் வரை காடு வளர்த்து , இக்கலைச் செல்வங்களை மறைத்து வைத்திருந்தனர்.
இந்தக் காமச்சிற்பங்களுக்கு  பலர் பலவித அர்த்தங்களை சொல்கின்றனர். சிலர் இவற்றை, பழங்குடிக்கடவுள்களின் இனப்பெருக்கச் சடங்குகள் என்று கூறுகிறார்கள். வேறு சிலர், மறைந்திருக்கும் ஆன்மீக படிமப்பொருள்களை சூட்சுமமாக அறிவிப்பதாகப் பார்க்கிறார்கள்.

இங்குள்ள சிற்பங்கள் தாந்திரிக முறையில் ஈடுபடும் பாலியல் (Tantric Sex ) முறைகளையும் வழக்கங்களையும்  குறிப்பிடும் விதத்தில் அமைந்துள்ளன.
தாந்த்ரீக அண்டம் (Tantric Cosmos) ஆண் பெண் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆண் உருவமும் ஆற்றலும் கொண்டது.பெண் சக்தி கொண்டது.இரண்டும் இணையும் போதே அண்ட சராசரம் இயங்கும் என்பதே இந்து மற்றும் தாந்த்ரீக தத்துவமாகும். ஒன்றில்லாது மற்றொன்று இயங்காது.

'ஆக்ஸ்ஃபோர்ட் பாரம்பரிய வரிசையில் அடங்கும்  நூல் வரிசையில்  இடம் பெற்றுள்ள , ’தேவங்கன தேசாய்’ எழுதியுள்ள  , ‘கஜுராஹோ’  என்ற நூல்  காமம் சார்ந்த இந்தியக் கலைகளின் வேறு பல முகங்களை ஆராய முட்படுகின்ற நூல் ஆகும். தேசாய் சிக்கலும், பரந்ததுமான காமம் என்ற  பொருளைப் பற்றி, அதன் பல முகங்களையும், தன் ஆழ்ந்த  புரிதல்களையும் கொண்டு ஆராய்வதற்கு முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளார். அதே நேரத்தில் காமம் என்ற பண்டைத்தொழிலை கொச்சைப்படுத்தாமலும், அதன் அழகியலையும் , ரசனையையும் மேம்பட்டு சிலாகித்தும்,   கலை வளத்தினை போற்றி இருப்பதையும் பாராட்ட வேண்டும்.

காமம், ஆன்மீகத்தின் பெளதீக வெளிப்பாடு என்பது தேசாயின் இந் நூல் கூறும் கருத்தாகும்.
’மனித உடல், ஆண், பெண் என்பது துவைதத்தின்  (இரட்டை நிலை)உச்சநிலை. இந்தத் துவைதம் பெளதீகமான நிலையில் மீண்டும் இணைவது ஆரம்ப அத்வைத (ஒருமை) ஒருண்மையான பேரானந்தத்துக்கு திரும்பிச்செல்ல வழிவகுக்கிறது. ஆகவே காமம், ஆன்மீகத்தின் பெளதீக வெளிப்பாடு ' என முடிக்கிறார்.

என்ன மத்தியப் பிரதேசம் செல்லத் தயார் ஆகிறீர்களா?