Google+ Followers

Monday, March 17, 2014

அனந்த சயன அழகுறையும் திருவனந்தபுரம்!

அனந்த சயன அழகுறையும் திருவனந்தபுரம்!

சந்திரிகா சுப்ரமண்யன்

                வனப்பு மிக்க தென்னை மரங்களும், வலிமைமிக்க புன்னை வனங்களும் தாலாட்டும் கேரளத்தின் நுரை பொங்கும் கடற்கரையின் அழகு நயத்தில் கண்மூடித் துயில்கிறான் மாதவன், அந்த மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் மயங்கி உறங்கிய அனந்த சயனத்தை குறித்து திருவனந்தபுரம் என்ற திருநாமம் அத்தலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
                கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் திருக்கோயில் அவ்வூர்க் கோட்டையில் அமைந்துள்ளது. கலைநயமும், சிற்ப, பாரம்பரிய, புராணப் பெருமைகளையும் பெற்றுள்ள இத்திருத்தலம் கேரள மக்களின் மத, கலாச்சார, சமூக வாழ்க்கையுடன் இறுகிய பிணைப்பையுடையது.
தங்கக் கலசங்கள்
                ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் எழிலுடன் எழுந்து நிற்கும் இக்கோயிலைச் சுற்றி கோட்டை மதில்கள் காவல் நிற்கின்றன. கருங்கல்லாலான கோயில் கோபுரம் தமிழகக் கோயில்களைப் பின்பற்றி கட்டப்பட்டது. நூறு அடிகள் உயரமான இக்கோபுரம் ஏழு நிலைகளையும், பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளையும் உடையது. உச்சியில் ஏழு தங்கக் கலசங்கள் ஆதவன் அணைப்பில் தகதகத்துக் கொண்டிருக்கின்றன. மூலவாசலின் கனத்த கதவுகள் பல அரிய கலைப் பொக்கிஷங்களைத் தாங்கி நிற்கின்றன. கோயிலினுள் சுமார் முந்நூறு தூண்களும், அத்தூண்களில் விளக்கு தாங்கிய பெண்மணிகளின் சிற்பமும் காணப்படுகின்றன.
கருவறைக் கடவுள்
                உள் கருவறை இரண்டு அடுக்குகளை உடையது. கேரள மாநிலத்துக்கே உள்ள சிறப்பான சிற்ப அலங்காரங்களைத் தாங்கி நிற்கின்றன. உள்ளே நாபியில் கமலத்தை தாங்கிய பத்மநாபன் பள்ளி கொண்டிருக்கிறான்.
                மையுண்ட விழிகள் மூடிக் கிடக்க, ஆதிசேஷனின் நிழலில், அழகு வதனத்தில் அடிக்கோடிடும் சிரிப்புடன், கையை அணையாகக் கொண்டு கண்மூடி சாய்ந்திருக்கும் வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, மாயனைமன்னு வடமதுரை மைந்தனை, மாதவனை, மண்ணு' புகழ் கேசவனை கேரள மக்கள் மட்டுமல்ல உலகத்து சைவ, வைணவர் வந்து வணங்குகின்றனர்.
                கருவறையை சுற்றிலும் உள்ள சன்னதிகளில் கிருஷ்ணர், சாஸ்தா, வியாசர், சிவன், ராமன், சீதை, லட்சுமணன், நரசிம்மன், அநுமான் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. கோயில் சுவர்களில் பல புராண உண்மைகள் படமாகத் தீட்டப்பட்டுள்ளன.
கோயிலின் காலம்
                பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் காலம் பற்றி கூறும் பல ஓலைச்சுவடிகள் உள்ளன. துளுபிராமண முனிவரான திவாகர முனிவரின் காலத்துடன் ஒத்துக் கூறப்பட்டுள்ளது. இன்னொரு சுவடி வில்வமங்களம் சுவாமியர் காலத்தியதாக நிற்கிறது. வைணவப் பெரியார் நம்மாழ்வாரின் படைப்புகள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இக்கோயில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன.
புதிய சிலை
                பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்த்தாண்டவர்ம மகாராஜா என்ற கேரள மன்னரின் காலத்தில் இதன் சீரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது தான் முன்பிருந்த ஸ்ரீ அனந்த பத்மநாதர் சிலை அகற்றப்பட்டு தற்போதுள்ள சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சிறப்பான ஒரு கருவி மூலம் மேற்கொள்ளப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன.
சிற்பச் சிறப்பு
                திராவிட, கேரள சிற்பக்கலை முறைகளை இணைத்து படைக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மலையாள, சமஸ்கிருத கல்வெட்டுகள் 1729 முதல் திருத்தியமைக்கப்பட்டு வந்துள்ளதை உணர்த்தி நிற்கின்றன. விளக்கு மாடத்தின் ஒருபகுதி 1934 இல் தீக்கிரையாகி மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
                சீவலி மண்டபம், குலசேகர மண்டபம் என்ற மண்டபங்களைத் தவிர ஒட்டக்கால் மண்டபம் கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது.
ஸ்ரீபலிபுரம்
                இருபது சதுர அடிப் பரப்பும், அரையடி தடிமனுள்ள ஒற்றை பளிங்கு கல்லால் அமையப் பெற்றது இம் மண்டபம். அங்குள்ள சான்றுகள் ஸ்ரீபலிபுரம் என்ற பீட மண்டபத்தை உருவாக்க நாலாயிரம் சிற்பிகளும், ஆறாயிரம் சிற்றாள் மற்றும் நூறு யானைகள், சுமார் ஏழு மாதங்கள் பாடுபட்டள்ளனர் என்று செப்புகின்றன.
துவஜ ஸ்தம்பம்
                இங்குள்ள துவஜ ஸ்தம்பம் எண்பதடி உயரம் உடையது. இது பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது. உயர்ரக தேக்கு மரத்தில் கைதேர்ந்த வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தேக்கு மரம் சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நிலத்தில் படாமல் யானைகளைக் கொண்டு சுமந்து வரப்பட்டது எனப்படுகிறது.
தீர்த்தம்
                இங்குள்ள பத்ம தீர்த்தம் தவ தீர்த்தமாகும். இங்குள்ள இன்னொரு மண்பமான நமஸ்கார மண்டபத்தில் பல சித்திரக்கலைப் பொக்கிஷங்கள் உறைகின்றன.
ராஜ மரியாதை
                ஆண்டாண்டு காலமாக இராஜ பரம்பரையின் தொடர்புகளை பெற்றிருந்த இக்கோயிலில் 1750 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் அனைத்து உரிமைகளும் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ராஜ மார்த்தாண்டவர்மா தன் வாளை ஸ்ரீ பத்மநாத சுவாமி பாதங்களில் வைத்துப் பணிந்தார். அதன் பின்தான் மக்களை ஆளும் பிரதிநிதியாக பத்மநாத சுவாமியின் பாதங்களிலிருந்த வாளை ராஜ மரியாதையோடு எடுத்துச் சென்று ஆட்சியைத் தொடங்கினார். இந்த விசித்திரமான பணிக்காக மார்த்தாண்ட வர்மருக்கு பத்மநாததாசர் என்ற பெயர் வழங்கப்பட்டது. திருவாங்கூர் இந்திய அரசுடன் இணைந்தபின் இன்றும் இப்பழக்கம் வழக்கத்தில் உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
திருவிழா
                கொடியேற்றம், பள்ளிவேட்டை, ஆராட்டு என்று கேரள விழாக்களுடன் பத்துநாட் திருவிழா இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் நடக்கிறது. கருட வாகனத்தில் பெம்மான் உலாவும் அழகே அழகு. பெம்மான் சங்கு முகம் எனப்படும் கேரளக்கடல் நதிக்கன்னியுடன் கலக்கும் இடத்தில் நீராடும் காட்சியே காட்சி.
                இவை தவிர இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் பெறும் இலட்சதீப நிகழ்ச்சி, பெருமானின் திருநட்சத்திரமான திருவோணம் ஆகியவை தீபங்களால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்படும் நன்னாளாகும்.
                குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
                மெத்தென்று பஞ்ச சயனத்தின் மேலேறிக்
                கொத்த மலர் பூங்குழல் நப்பின்னை பொய்கை மேல்
                வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
                மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
                எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
                எத்தனை யேனும் பிரிவாற்ற கில்லாயால்
                தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்
என்று திருப்பாவை போற்றும் கார்மேனிச் செங்கண்ணன் கனிமுகமும் கமலப் பாதங்களுமே காத்தருளும்.