Monday, December 29, 2014

உலக வரை படத்தில் ஒப்பந்தக் கூலிகளின் கால் தடம் இலங்கையில் மட்டுமே அவல வாழ்க்கை

உலக வரை  படத்தில் ஒப்பந்தக் கூலிகளின் கால் தடம்
இலங்கையில் மட்டுமே அவல வாழ்க்கை

அண்மையில் மொரிசியசு தீவில் ஒப்பந்தக் கூலிகளின் தடம் என்ற தலைப்பில் சர்வதேச மா நாடு ஒன்று நடந்தது . மூன்று நாட்கள் நடந்த இந்த மா நாட்டுக்கு உலகெங்கிலும்  இருந்து வந்த பதினாறூக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்களூம் , கூலிப்பணீயில் ஈடுபட்டிருந்த தலைமுறைகளின் வாரிசுகளூம் கட்டுரைகளை சமர்பித்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த ஒப்பந்தக் கூலிகளின் புலம் பெயர்வின் பின் தற்போது அவர்களின் சமூக  நிலை குறித்து சுய விமர்சனமாக அந்தந்த நாட்டை ஆய்வாளர்கள் கட்டுரை சமர்ப்பித்தனர். கென்யா, பிஜி, மொரிஷியஸ், தென் ஆப்ரிக்கா, ரே யூனியன், செயிண்ட் லூசியா, சுரினாம்,கயானா, ஆஸ்திரேலியா,  இப்படி பங்கேற்ற நாடுகளின் வரிசை வியக்க வைத்தது. அங்கு சென்ற இந்தியர்கள் , அவ்ர்களின் நான்காவது தலைமுறை ,அந் நாட்டு மக்களாக சகல உரிமைகளுடனும், தமது முந்தைய பரம்பரையின் கூலிப் பணிகளின் சுமைகளை விலக்கி கல்வி, பொருளாதாரம், பதவிகள் அரசியல் என்று சம அந்தஸ்த்துடன் வாழ்கின்றனர். அதனால் தான் தமது முன்னோர்  கடந்து வந்த பாதையின் கற்களையும் முற்களையும் எடுத்துக் காட்டி தமது சாதனையின் சரித்திரத்தைச்  சொல்லிப் பெருமைப்பட அவர்களுக்கு வாய்ப்பு கிட்டியது.
180 ஆண்டு ஒப்பந்தக் கூலி முறை பற்றிய ஆய்வு மா நாட்டினை , மூன்று நாட்கள் மொரிஷியஸ் கல்வி மற்றும் கலை கலாச்சார அமைச்சு , அபர்வாசி காட் எனப்படும் , அந் நாளில் கூலி வேலைக்காக வந்தவர் தொடர்பான அமைப்புடன் இணைந்து போர்ட் லூயிசில் , மகாத்மா காந்தி கல்வி கழகத்தில் நடத்தியது.

பிரிட்டிஷ் அரசினரால் ,உலகம் முழுவதும் ஒரு காலத்தில் கூலித் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டு வேலை வாங்கிய புண்ணியம் பிரிட்டிஷ் அரசினருக்கே உரியதானாலும், அதன் பின் அவர்கள் தலை தூக்கியது வரலாற்று உண்மையாகும்.

ஆனால் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்து இலங்கை பொருளாதாரத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கும் தோட்டத்தொழிலாளார்கள் இன்னும் லயன் வீடுகளில் இருப்பதும் , மருத்துவம், சுகாதாரம்கல்வி , அடிப்படைத் தேவைகள் இன்ன பிற விடயங்களில் பின் தங்கியிருப்பதும் சமூகத் துயரமே.உலக அளவில் ஒப்பந்தக் கூலி தலைமுறையினரின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக இருந்தது.அதே சமயம் இலங்கையில் அந்த சமூகம் இருக்கும்  நிலை தலை குனிவை ஏற்படுத்தியது.
 
முதல் நாள் விழா இந்திய வெளி விவகார அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் உரையுடன்  தொடங்கியது.உலகம் பூராவும் உள்ளா ஒப்பந்தக் கூலி நாடுகளை பட்டியலிட்டவர் ஏனோ இலங்கையை மறந்து விட்டார்.சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தம் ஐம்பது வயதை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் கவனயீனம் கவலைக்குரியதாகும்.

தவிர இந்திய ஒப்பந்தக் கூலிப் பயணத்தில் இலங்கை மட்டுமே கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது.அவர்களுக்கென்றே தனி துணைத் தூதரகம் ஒன்றும் , நிதியங்கள் பலவும், பல நலத்திட்டங்களும் , காலம் காலமாக நின்ற நாடற்றோர் பிரச்சனைகளூம் இப்படியான ஒரு மா நாட்டில்  குறிப்பிடப் படாமை கவனத்தை ஈர்த்தது., அதுவும் பதுளை மண் சரிவும், லைன் வீடுகள் நிலைமையும் சமூக வலைத் தளங்களில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த மறதி கவனிக்கப் பட்டிருக்க வேண்டும்.

நல்ல வேளை இலங்கை மலையக மக்கள் தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரையும், எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் படைப்பான மலையகத் தமிழர் பற்றிய ஆவணமும் நிகழ்வில் இடம் பெற்றது மேற்படி குறையை நிவர்த்தி செய்தது.ஆவணம் பற்றி அறிமுகத்தை செல்வி ஜீவா சதாசிவம் நிகழ்த்தினார்.

கூட்டத்தில் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சபை ஒரு நிமிட மௌன அஞ்சலியை பதுளை மண் சரிவினால் காணாமல் போன , உயிரிழந்த மக்களூக்காக செலுத்தியது.யுனெஸ்கோவின் இன் நிகழ்வுக்கு பொறுப்பாளரான அதிகாரி இது குறித்து மேலதிகமாக கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment