Monday, December 29, 2014

கம்பன் விழாவில் எனது தொடக்க உரை

தமிழ்க்கடவுள் முருகனுக்கு முதல் வணக்கம்
என் தாய் மடியாம் தமிழினிற்குத் தனிவணக்கம்

சண்ட மாருதமும் கொண்டல் முழக்கமும் கூட்டி வந்து
தமிழ் கொட்டிய கம்ப வாரிதி ஐயா அவர்களை வணங்குகின்றேன்  

வானர சேனையை வழிப்படுத்திய மாருதி போல
எங்கள் இளைஞர் படையை  இங்கு நெறிப்படுத்தி நிற்கும்
இளவல் ஜெயராமை வாழ்த்துகின்றேன்

கம்பன் புகழ் பாடி கன்னித் தமிழ் வளர்க்க வந்திருக்கும்
தமிழார்ந்த அனைவரரையும் வரவேற்கின்றேன்


சிரம் தாழ்த்தி கரம் கூப்பி என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு
இன் நிறைவு நாளில் தொடக்க உரையைத் தொடங்குகிறேன்

வானத்து சூரியன்
வழித்தோன்றல்
ராமனின்
கதை சொன்ன
கம்ப  நாடன்
தாள் தொழும்
நாள் இன்று.

அறுபதி னாயிரத்து மூன்று
மனைவியர்  
கூடியவனுக்குப்
பிறந்த
அவதார புருஷன்,

ஓர்  இல்      ஒரு சொல்     ஒரு வில்

என்று வாழ்ந்த
வாழ்க்கையை
இந்த உலகம்
வாழ்வதற்காக
எடுத்துச் சொன்ன
கவிதைக்காரன்
கம்ப நாடனைக் கொண்டாடும் நாள் இன்று.

காட்டிலே  ஈரேழாண்டு
கழித்தவன் காதையை - தன்
பாட்டிலே அறியச்செய்தான்
பாவலன் கம்ப ன்

அறத்தினால் அன்றி
புறத்து  ஒர்வழியும் இல்லை
புகழினைப்  பெறுதற்கு - என்பதைப்
புரியச் சொன்னான்
தேரெழுந்தூரினை
ஊர் வழுத்திடச் செய்த
உன்னதக் கவிஞன்

கவியினில்
சொல்லத் தக்கோன்
கம்பனன்றி - இப்
புவியினில் எவனும் இல்லை
என்ற புகழ் சேர்த்து
வள்ளல் சடையப்பன் வாழ்த்தும் நண்பன்.

கட்டுத்தறியில் கூட
கவி சொட்டும்  
வீட்டுடைக் கவிஞன்
இவனின்
பாட்டுடை த் தலைவனோ
அரவம் அணைந்த
அரி அவதாரமே.

சொந்தக் கதையல்ல
இவன் சொன்னது
வால்மீகி
சொன்ன கதை எனப் பலர்
சொல்லால்  இடித்தாலும்

எல்லாமே இல்லை
படித்ததை அறிவெனும்
பற்றுக் கோல் கொண்டு-
கவி வடித்தது எந்தன்
சிறப்பென நின்றான்.

யாப்பியல் மரபு சேர்த்து
யாழ் ஒலி சந்தம் சேர்த்து
மூப்பிலாக் காவியத்தை
மூவுலகறியத் தந்தான்

சொல்வண்ணம்
மொழி வண்ணம்
இயல் , இசை,நாடக வண்ணம்
சந்த வண்ணம் -சிந்து வண்ணம்
உண்மை, தத்துவம்,சத்தியம்   -  உரைத்த வண்ணம்,

உளவியல் நிலவியல்  புவியியல், அறிவியல்  புதைத்த வண்ணம்

கவி வண்ணம்,
அங்கு  கண்டோம்
கம்பனின்  கை வண்ணம்
எங்கும்  கண்டோம்

அரங்கண் உறங்கும்
அரங்கில் அரங்கேற்றிய
அற்புதக் காவியம்

ஆறு காண்டங்கள்

ஆற்றுப் படலம் முதல்
விடை கொடுத்தப் படலம் வரை
நூற்று பதினாறு  படலங்கள்

பத்தாயிரத்து ஐநூற்று முப்பத்து  நான்கு
பாடல்கள்
தொண்ணூற்று ஆறு வகை ஓசைகளுடன்
இராமாவதாரம் உருவானது
எப்படி? எப்படி??
நாளொன்றுக்கு
எத்தனைப் பாடல்கள் எழுதியிருப்பான்?
சிந்திப்போம்….  மெய் சிலிர்ப்போம் ….

பாற்கடல் தெய்வத்தைத் - தன்
பாக்கடலில் நீராட்டிய
கவி மாக்கடலின்
கால்  பணியும்
இவ்வேளையில்
கம்பனைத்
தமிழால்
வாழ்த்தவும்
வணங்கவும்
வந்திருக்கும் அனைவரையும்

வணங்குகிறேன்
வரவேற்கின்றேன்

இனி அரங்கு உங்கள் வசம்

நீங்களோ கம்பன் வசம்

No comments:

Post a Comment