Sunday, October 26, 2014

”முதல் மொழி தமிழ்” நூல் வெளியீடு

சிட்னி சங்கத் தமிழ் மாநாடும் – 
“முதல் மொழி தமிழ்” நூல் வெளியீடும்


சிட்னி சங்கத் தமிழ் மா நாடு மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இன் நிகழ்ச்சிக்கு சிட்னி கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்தது விழாவை ஒட்டி சங்கத் தமிழ் தொடர்பான மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
விழாவிற்கு சென்னையிலிருந்து தமிழர் அறிஞர்கள் மறைமலை இலக்குவனார், முனைவர் உலக நாயகி பழனி மற்றும் புது தில்லி  தமிழ் சங்கத் தலைவர் ராகவன் நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
உள்ளூர் வெளியூர் தமிழ் ஆர்வலர்களின் சிறப்பு பட்டி மன்றங்கள், நடனம் மற்றும்  இசை, கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சங்கத் தமிழ் தொடர்பான தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் தமிழ்  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் இடம் பெற்றது.
இவ் விழாவின்  நோக்கம் அடுத்த தலைமுறைக்கு தமிழை அறிமுகம் செய்வதே ஆகும்.இதன் சிறப்பாக “ முதல் மொழி தமிழ்” என்ற தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்ட நூல் ஒன்று வெளியிடப்பட்டது.எழுதியவர் சிட்னி வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் மற்றும் அவரது மகள் நிவாசினி சுப்ரமண்யன்.
நூலை அறிமுகம் செய்த சிட்னி தமிழ் கலை கலாச்சார மன்றத் தலைவர் , திரு. அனகன் பாபு, இனிவரும் நாட்களில் புலம் பெயர்ந்த தமிழ் இளைய தலைமுறையினர் தமிழ் பற்றிய அடிப்படை அறிவைப் பெறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்றதுடன் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த தாயும் மகளும் மூவாயிரம் வருடத்திற்கு முந்திய மொழியை அடுத்த தலைமுறைக்கு எளிமையாக அறிமுகப்படுத்த முயன்றிருப்பது நூலின் சிறப்பாகும் என்று பேசினார்.
சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இந் நூல் தமிழின் இரண்டு தலைமுறை இடைவெளியை நிரப்ப உழைத்த உழைப்பின் வெளிப்பாடு என்றார்.ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய தமிழ் பற்றிய ஒரு தகவல் பெட்டகம் என்றும் பாராட்டினார்.
நூலை சென்னை தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார் வெளியிட முதல் பிரதியை புது தில்லி தமிழ்ச்சங்கத் தலைவர் ராகவன் நாயுடு பெற்றுக் கொண்டார்.
நிறைவாக கலாநிதி சந்திரிகா சுப்ரமணயன் ஏற்புரை நிகழ்த்தும் போது ” ஒரு மாத காலத்துக்குள்  எங்கள்  வேலைகளுக்கு நடுவில் எழுதப்பட்ட மிகக் கடுமையான உழைப்பின் பிறப்பு இந்த நூல். அடுத்த தலைமுறைக்கு தமிழைப்பற்றி  ஆங்கிலத்தில் ஓர் இளையவர் சொல்வதே சிறப்பு என்று நினைத்த போது , நானே எழுதித் தருகிறேன் என்று  நிவாசினி  முன் வந்தாள். தகவல் சேகரிப்பு பணி எனதானது. I am Tamil என்று நான் பெயரைத் தேர்ந்தெடுத்த போது இல்லை “முதல் மொழி தமிழ் ” தான் நன்றாக இருக்கும் என்று ஒரு  நள்ளிரவில் பெயரைச் சூட்டினாள்.அட்டைப்படப் புகைப்படம் திருமயிலை கபாலீஸ்வரர் கோயில் அவள் எடுத்தது.
எழுதி முடித்த  போது அவள் சொன்னது , “ தமிழ் மிக  ஆர்வமூட்டுவதாக உள்ளது”. ஆம் இந்த நூலின் நோக்கமே ”தமிழ்   அடுத்த தலைமுறையினருக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும்” என்பதாகும்.


No comments:

Post a Comment