Google+ Followers

Sunday, May 18, 2014

அமெரிக்கப் படைத் தளம் ஆஸ்திரேலியாவில் வியாபிகின்றதா?அமெரிக்கப் படைத் தளம் ஆஸ்திரேலியாவில் வியாபிகின்றதா?
வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா  சுப்ரமண்யன்

ஆஸ்திரேலிய வான் படை பலத்தினை அதிகரிக்கும் முகமாக ஐம்பத்து எட்டு  F 35  ரக போர் விமானங்களுக்காக சுமார் 24 பில்லியன் டாலர்களை பிரதமர் டோனி அப்பொட் ஒதுக்கியுள்ளது பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தனது இந்த முதலீட்டை நியாயப்படுத்த டோனி அப்பொட் “ அடுத்த நிமிடம் நாம் இருக்கும் இடத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத சூழலில் நாம் இருக்கிறோம், எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று  நமது வான் படையை வலுவாக்கும் நோக்குடன் இந்த விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன’ என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

எதிர் கட்சி தலைவர் பில் ஷோர்ட்டன் ’நமது பாதுகாப்பு படைக்கு வளம் சேர்க்க நீண்ட கால தொலை நோக்கில் , இம் முதலீடு அவசியம் தான் என்று  நியாயப்படுத்தி  இருக்கிறார். ஆஸ்திரேலிய பாராளுமன்ற லிபரல் உறுப்பினர் டென்னிஸ் ஜென்சென் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரீன் கட்சியின் தலைவர் அடம் பேண்ட் ’ஆஸ்திரேலியாவில் பட்ஜட்டில் துண்டு விழும் கால கட்டத்தில் ஓய்வூதியம் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டுமேயொழிய உதவாக்கரை விமானங்கள் அல்ல’ என்று சீறியிருக்கிறார்.
இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவத்திற்காகவும் , ஊனமுற்றோர் , முதியோர் பராமரிப்பு போன்றவற்றுக்கு  ஒதுக்கப்படும்  நிதி  குறைக்கப் பட்டு வரும் இவ்வேளையில் இத்தகைய பாரிய பாதுகாப்பு செலவு விமரிசனங்களுக்கு உள்ளாகியுள்ளது.அதே சமயத்தில் மாறி வரும் உலக நடப்புக்கள் மற்றும் ஆஸ்த்திரேலியாவுக்கு  அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பொது மக்களின் விமர்சனங்கள் குறைவாகவே உள்ளன.

புதிதாக வருகின்ற இந்தப் போர் விமானங்கள்  அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகின்றன. 2020 இல் இவை படையில் சேர்க்கப்படும் இவற்றை பயன் படுத்த தேவைப்படும் முதலீடு 54 பில்லியன் டொலர்கள் ஆகும்.
எல்லாவற்றையும் மீறி F 35  ரக போர் விமானங்களின் வருகை ஒன்றை உறுதிப் படுத்தி  உள்ளது. இவை இனி வரும் போர்களில் அமெரிக்கவுடன் இணைந்து பணியாற்ற ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்கும் வசதிகளில் முதல் கட்டமாகும்.

அமெரிக்க தளம் ஆஸ்திரேலியாவில் இயங்குகிறது 2011 இல் சீன அரசு என்று குற்றம் சாட்டியது. பின் 2012 இல் வெளியுறவு அமைச்சர் பொப் கார் தனது அரசியல் கொள்கைகளில் முதலிடம் பிடிப்பவை , அமெரிக்கா தனது பிராந்தியத்தில் ஈடுபட்டிருத்தலும், ஆசியாவுடன் ஆஸ்த்திரேலியாவுக்கு உள்ள  உறவினை மேம்படுத்துவதும் ஆகும் என்றார். இது அமெரிக்காவுடனும்,  சீனாவுடனும் ஆஸ்த்திரேலியா நிலையான உறவைப் பேண அவர் காட்டிய ஆர்வத்தையே சுட்டிக் காட்டியது. ஆனாலும் அமெரிக்கவும் சீனாவும் வேறு தளங்களில் ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடையவை. அமெரிக்கா படைபலத்தையும்  சீனா பொருளாதார பலத்தையும் ஆஸ்திரேலியாவுடன் தொடர்பு படுத்திக் கொண்டன. இரண்டையுமே சமமாக னடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா இருக்கின்றது.

‘அவுஸ்மின்’ என்ற ஆஸ்திரெலிய அமெரிக்க அமைச்சர்கள்  கூட்டு  பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து , 2012 இல் அமெரிக்க ராணுவப் படை, தளவாடங்கள், தொழில் நுட்பம் அனைத்துமே ஆஸ்திரேலிய மண்ணில்  இடம் பிடித்துக் கொண்டன.குறிப்பாக மூன்று விடயங்கள் 1.வட மேற்கு கேப் – வான் ராடர் அதி நவீன  தொலை நோக்கி  2. (மைக்ரோ சாட்டிலைட்டு) நுண் செயற்கை கோள்களை கண்டு பிடிக்க கூடிய அமெரிக்க தொலை  நோக்கி 3. இரு நாடுகளும் பரஸ்பரம் செயற்கை கோள்களை பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட கூட்டு தொடர்பு வாசல் அனுமதி ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப் பட்டது .இதனால்  அவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களை ஆஸ்திரேலியா நேரடியாக பெற்றுக் கொள்ளும் வசதிகள் கிட்டின. ஆனால் இவை எல்லாம்  நடந்த கால கட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் அமெரிக்கப் படைத் தளம் இங்கு இல்லவே இல்லை என்று அடித்துக் கூறினார்.

இந்த கூட்டமைப்பு தொடர்பில் இருந்து நியூசிலாந்து விலக்கப்பட்டது.இதனால் நியூசிலாந்து நாட்டில் எந்த பாதுகாப்பு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே உண்மை. நியூசிலாந்து அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது அவசியமில்லை என்பது  பற்றி மிகத்தெளிவாக உள்ளது. தமது நாடு மிகச் சிறிய நாடு எனவும், தனியாக ஒரு படை பலம் தேவை இல்லை எனவும், எந்த நாட்டுடனும் தாம் இணக்கத்துடன் வாழவே விரும்புவதாகவும், தமது வளங்களை  பாதுகாப்புக்கு செலவிடுவதை விட தேசிய மேம்பாட்டுக்கு செல்விடுவதே உசிதமான கொள்கை  என்று  தனது நிலைபாட்டை வெளிப்படையாகவேத் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு நியூசிலாந்துக்கும் சேர்த்துதான் பலன் கிட்டும் என்று வாதிடலாம். ஆனால் நியூசிலாந்து தன் இறைமையை மகா ராணி எலிசெபெத் முதல் பராக்கா ஒபாமா வரை தெளிவு படுத்துவதில் தவறுவதில்லை. அதே சமயம் ஆஸ்திரேலியா அமெரிக்காவின்  அடியொற்றி நடக்கத் தவறுவதில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கிழக்கு திமோரில் தலையிட்டதனால் ஆஸ்திரேலியா இந்தனேசியாவை பகைத்துக் கொண்டது அதனால் ஒரு நிரந்தர அச்சம் அரசுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. பூகோள ரீதியில் இந்தனேசியா அமைந்துள்ள இடம் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதாக இல்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அரசு இந்தனேசியாவில் செய்த உளவு வேலை அம்பலமானதும், இந்தனேசியா தனது தூதரை திருப்பி அழைத்துக் கொண்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் தனக்கு இருந்த ஆட் கடத்தல், ராணுவ பயிற்சிகள், உளவுத்துறை ஆகிய அனைத்து உடன் படிக்கைகள் தொடர்பாகவும் மீள் பரிசீலனை செய்யப் போவதாகவும் இந்தனேசியா அறிவித்தது. இது தொடர்பான டோனி அப்பொட்டின் பேச்சு அத்தனை திருப்திகரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.கிழக்குத் திமோர் பிரச்சனைக்கு பின் ஒரளவு சுமுகமாக இருந்த இரு நாட்டு உறவு மறுபடியும் சிக்கலில் முடிந்தது.

பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா எதிர்நோக்கக் கூடிய ஒரே பிரச்சனை  இந்தனேசியா தான் என்பது அரசியல் விமர்சகர்ம=கலீன் கருத்தாகும்.

தவிர ஜப்பான் சீன உறவில் ஆள் இல்லாத ஏழு தீவுகள் தொடர்பாக விரிசல் விழுந்துள்ளது. அமெரிக்கா ஜப்பானை ஆதரிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கோ ஏற்றுமதி,இறக்குமதி,  சுரங்கம் , மற்றும் முதலீடுகள் போன்ற  பொருளாதாரக் காரணங்கள் சார்ந்து  சீனாவுடன் உறவு அத்தியாவசியமாகிறது.அதே சமயம் அமெரிக்க கொள்கையே ஆஸ்திரேலியாவின் கொள்கை என்ற தீவிர  நிலைப்பாட்டில் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த இக்கட்டுக்கள் தான் ஆஸ்திரேலியா தன் படை பலத்தைக் கூட்டுவதற்கு அடிப்படை காரணம் என்று  நம்பப் படுகிறது. அதன் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் படைபலப் பெருக்கல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.எதாவது ஒரு கால கட்டத்தில் தனக்கு சீனா அல்லது இந்தனேசியா தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தால் அதனைச் சமாளிக்க இப்போதே ஆஸ்த்திரேலியா தயார் ஆகின்றது.

தவிர, அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய  நிலைகொள்ளல் பலப்படுத்தப் படுகிறது.வியட்னாம் போரின் பின் 2011 ஆம் ஆண்டு தான் ஜுலியா கில்லர்ட் அரசின் கீழ் தான் அமெரிக்க கடற்படைக்கு இடம் கொடுக்கப்பட்டது.அமெரிக்கா கூட்டு என்பது ஆஸ்திரேலியாவுக்கு மனித உயிர்கள் மற்றும் சர்வதேச உறவுகளை விலையாகக் கொடுத்து கிடைக்கக் கூடிய ஒன்றே. அமெரிக்கா தனது அரசியல் ஆக்கிரமிப்பை ஈடுபடுத்தி அதன் மூலம் தனது பொருளாதாரத்தை பலப்படுத்த முயற்சிக்கும் ஒரு நடத்தையே பிராந்திய படை பலம் விரிவாக்கலாகும். அமெரிக்க சகாப்தம் என்பது நடைமுறையில் தோல்வியைத் தழுவி வருவது சர்வதேச அரங்கில் கண்கூடு. போர்கள் மக்களை சலிப்படையச் செய்துவிட்டன. தலைவர்கள், அரசியல் பம்மாத்துக்கள் பொய்த்து  விட்டன. பலப் பரீட்சைகள் களைப்படைய செய்து விட்டன.
இனி வரும் காலத்தில் ராணுவ கூட்டு முயற்சிகள் பலன் அளிக்காமல் போய் அமைதிக்கான கூட்டு முயற்சிகள் மட்டுமே வரவேற்கப்படும் காலம் வரும். அப்போது ஆயுத வியாபரங்கள் , அரசியல் நரித்தனங்கள்  நசிந்து போய் விடும். இந்த உண்மையை ஆஸ்திரேலியா உணராமல் போனது துர்பாக்கியமே. இன்று அமெரிக்க படையினரின் உள் நுழைவு பின் நாளில் ஆஸ்திரேலியா  கொடுக்க உள்ள பெரும் விலைக்கு வித்தாகும்.
(lawyer.chandrika@gmail.com)