Sunday, May 18, 2014

விருத்தாச்சலம் திருக்கோவில்

சந்திரிகா சுப்ரமண்யன்

சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. . இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம் என்று புராணங்கள் கூறுகின்றன. உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக் காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் ஆன்ந்தத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.  இங்குள்ள அர்த்த மண்டபத்தில்  நான்கு வேதங்களே நான்கு தூண்களாக  அமைந்துள்ளன. முருகன் சிவனை பூஜித்த தலம் இது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்  ஆகியோரால் தேவாரம் பாடப் பெற்ற தலம்.
மூலவர் பெயர் விருத்தகிரீசுவரர்- முதியவர் –, முதுகுந்தர் என்றும் அழைக்கப்படுவார். அம்மன் பெயர் விருத்தாம்பிகை , பாலாம்பிகை - இளைய நாயகி.



"விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்'  என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை எனப் பபொருளுடையது.அக் காலத்தில் இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டதுசிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான்   தோன்றினார் என்றும், அதன் பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், இம் மலை திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
 
விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார்.இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.
இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் ஆற்றிலிட்ட  பொன்னை குளத்தில் எடுத்த அற்புதம் நடத்திய திருத்தலம்."மணி முத்தா நதியில் பொன்னை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்' என்று சொல்ல சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தலவரலாற்றுச் செய்தி. சாட்சி சொன்ன விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு இங்கு விளங்குகிறார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அதாவது தானாகவே  தோன்றியவர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத்தலம். இத்தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது. திருவண்ணாமலை போலவே ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.
பாலாம்பிகை :  ஒருமுறை திருவண்ணா மலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார்.   அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது. பசியை போக்க, இத்தல  பெரியநாயகியிடம் சோறு வேண்டி, "கிழத்தி' என்ற சொல் வரும்படி  ஒரு பாடல் பாடினார். இதைக்கேட்ட பெரியநாயகி கிழவி  வேடத்தில் அங்கு வந்து, ""கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும்?   இளமையுடன் இருந்தால் தான் நீ  கேட்டது கிடைக்கும்,''என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர்,"அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா''என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்த்தனால் அன்று முதல் "பாலாம்பிகா' என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.
இக்கோயிலில் எல்லாமே ஐந்து எண்ணில் தான் அமைந்துள்ளன. என்பதுவும் சிறப்பாகும்.
ஐந்து இங்குள்ள மூர்த்தங்கள் ஐந்து அவை , விநாயகர், முருகன், சிவன்,சக்தி,சண்டிகேஸ்வரர்.

இறைவனின் திருநாமம் ஐந்து  அவை :விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர்,  விருத்தகிரி.

ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர்,  முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.

இங்குள்ள இறைவனை தரிசனம் கண்டவர்  ஐவர், அவ்ர்கள் உரோமச முனிவர், விபசித்து   முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.

ஐந்து இங்குள்ள கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.

ஐந்து இங்குள்ள பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய  திருச்சுற்று,  வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று,பஞ்சவர்ண திருச்சுற்று.

ஐந்து இங்குள்ள கொடிமரம்: இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு  இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று  பெயர்.

ஐந்து இங்குள்ள உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.

ஐந்து இங்குள்ள வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம்,     நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.

ஐந்து இங்குள்ள வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.

ஐந்து இங்குள்ள தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர்,  பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.

இத்தலத்தின் ஐந்து பெயர்கள் : திருமுதுகுன்றம், விருத்தகாசி,  விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.
முக்திதலம் :  காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள  வழிபட்டால், காசியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே  இத்தலம் "விருத்தகாசி' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத்  தலைப்பால் விசிறி அவைகளின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சமடைவதற்காக "நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலபுராணம் கூறுகிறது.

இப்படி மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றினாலும் சிறப்புடையது விருத்தாச்சலம் கோவில்.
.




No comments:

Post a Comment