Sunday, March 2, 2014

பூலோக வைகுண்டம் அரங்கன் துயிலும் ஸ்ரீரங்கம் - தமிழ் அவுஸ்திரேலியன்

பூலோக வைகுண்டம் அரங்கன் துயிலும் ஸ்ரீரங்கம்
சந்திரிகா
பெருமாள் தனது அற்புத தரிசனம் தரும் நூற்றெட்டு திருத்தலங்களில்   நின்றும் இருண்டும் கிடந்தும் காட்சி தருகிறார்.  கிடந்த திருக்கோலத்தில் காட்சி தரும் முப்பது திருத்தலங்களில்

மட்டுமே திருமால்  சயன நாதனாகக் காட்சி அளிக்கிறான். அனந்த சயனம் , புஜங்க  சயனம், யோக சயனம், தல் சயனம் பல சயனங்கள் இவையாகும்.
இவற்றில்  பூலோக வைகுண்டம் எனப் பெருமை கொண்டது திருவரங்கன் திருத்தலமாகும்.
                'நீலமேகம் நெடும் பொற்குன்றத்துப்
                பால் விரிந்தகலாது படிந்தது போல
                ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
                பாயற்பள்ளி பலர் தொழுதேத்த
                விரிதிரைக் காவிரி வியன் பெருந் துருத்தித்
                திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்'
என்று சிலப்பதிகாரக் காடுகாண் காதை குறிப்பிடும் வண்ணம் கீர்த்தி பெற்ற மூர்த்தி  திருவரங்கன்.

பிரமன் கொடுத்ததும் விபீஷணன் பெற்றதும்
                பிரமன் தன்னுடைய கடுந்தவப் பலனாக பெற்ற திருவரங்க விமானத்தை ஆரிய குல மன்னனான இஷ்வாகுவிடம் அளித்தான். அயோத்தி மன்னர்களின் 'குலதன'மாகக் கருதப்பட்டு வந்த இது இராமர் காலத்தில் லங்கர் தகனத்தின் பின் நட்பின் சின்னமாக விபீஷணனுக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் சந்தியா கால பூஜையை செய்யும் பொருட்டு அரங்கன் கருவறையும் விமானமும் கொண்ட பொற் தகடால் ஆன விமானத்தை கீழே வைத்து வழிபாடு செய்தான். மீண்டும் அதை எடுக்க முற்பட்ட போது அசையாது நின்றது விமானம். அரங்கன் தான் அங்கிருந்தவாறே தென்திசை தரிசனம் தருவதாக திருவாய் மலர்ந்தருளினான்.
இதனை,
                'அம்புயத்தோன் அயோத்தி மன்னற்களித்த
                கோயில் தோலாததனி தனி வீரன் தொழுத கோயில்
                துணையான வீடணற்குத் துணையாம் கோயில்என்று ஸ்ரீ தேசிகப் பிரபந்தம் கூறுகிறது.
                கங்கையும், காவிரியும் நம்மில் யார் பெரியவர் என்று போரிடத் தொடங்கினர். திருமாலிடம் முறையிட்ட இவர்களில் கங்கை இறைவன் திருவடிகளைத் தொட்டு தன் உற்பத்தியை உறுதிப்படுத்த பெருமாள் க்கையின் சார்பாக தீர்ப்பு வழங்கினார். தோல்வியுற்ற காவிரி தானும் சிறப்புப் பெற வேண்டுமென்று நினைத்து கடும் தவம் புரிந்த போது திருமால் தான் சயனித்த திருக்கோலத்தில் திருவரங்கத்தில் அமரும் போது காவிரி மாலையாகச் சுற்றும் பேறு பெறுவாள் என்ற வரத்தை அருளினார்.
                வைணவத் தலங்கள்  நூற்றி எட்டினுள் 'கோயில்' என்ற சிறப்புச் சொல்லுக்குரியதாக இருப்பது திருவரங்கம். 'ஸ்வயம் வியக்தம்' எனும்வாறு தான் தோன்றியதாக எம்பெருமாள் எழுந்தருளி இருப்பது எட்டுத் தலங்கள்.
திருவரங்கம், திருவேங்கடம், ஸ்ரீ முஷ்ணம், வானமாமலை, புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாசிரமம், சாளக்கிராமம் இவற்றுள் தென் திசையிலிருப்பது திருவரங்கம். காவிரியும் அதன் பிரிவான கொள்ளிடமும் மாலையிட்டு பெருமாள் தாள் பணிகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படுவதும் இத்தலமாகும்.
காலம்
                சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முற்பட்டதென இதன் காலம் கருதப்படுகிறது. சங்க காலத்திலும் இதன் சிறப்பு அகநானூறு வாயிலாக அறியக் கிடக்கிறது. சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரமும் இக்கோயில் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது.
                சோழ மன்னன் கிள்ளி இத் திருக்கோயிலை அமைத்ததாக கோயில் ஒழுகு கூறுகிறது. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலிருந்த ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவரும் அரங்கனைப் பாடியுள்ளனர்.
அனைத்தும் பெரியன
                இத்திருக்கோயில் உறை இறைவனை பெரிய பெருமாள் என்றும் தாயாரை பெரிய பிராட்டியர் என்றும், ஊரைப் பேரரங்கம் என்றும், உணவை பெரிய அவசரம் என்றும் வாத்தியம் பெரியமேளம் என்றும், பட்சணம் பெரிய பணியாரம் எனவும் கோயில் பெரிய கோயில் எனவும் அனைத்துமே பெரியதாக அழைக்கப்படுகின்றன.
அரங்கன் பெரிய பெருமாளானது
                அரவணைப் பள்ளியில் துயில் கொண்டுள்ள அரங்கன் ஸ்ரீரங்கநாதன், அழகிய மணவாளன், அழகிய நம்பி என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். இராமன் வழிபட்ட காரணத்தால் 'பெரிய பெருமாள்' என்றும் வணங்கப் பெறுகிறான்.
கோயில் பரப்பு
                சுமார் ஆறு மைல் மொத்த நீளமுள்ள மதில்களால் இக்கோயிலின் பரப்பு 156 ஏக்கர். ஏழு பிரகாரங்களையும் ஏழு மதில் சுற்றுக்களையும் கொண்டது. கருவறையைச் சுற்றியுள்ள இடத்துக்கு திருவிண்ணாழி என்று பெயர்.
                'மாடமாளிகை சூழ் தரு வீதியும்
                மன்னுசேர் திருவிக்கிரமன் வீதியும்
                ஆடல் மாறன் அகளங்கன் வீதியும்
                ஆவிநாடான் அமைந்துறை வீதியும்
                கூடல்வாழ் குலசேகரன் வீதியும் -
                குலவிராச மகேந்திரன் வீதியும்
                தேடரிய தர்மவர்மாவின் வீதியும் -
                தென்னரங்கன் திரு வாரணமே'
என்று இங்குள்ள பிரகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை ஏழு உலகங்களையும் குறிக்கின்றதாகக் கருதுகின்றனர். இங்குள்ள விமானம் பிரணவ மந்திரமாகவும், நமோ நாராயணாய என்ற ஏழு எழுத்துக்கள் ஏழு மதில்களாகவும் உள்ளன எனப்படுகின்றன. சப்த பிரகாரங்களின் மொத்த நீளம் சுமார் ஆறு மைல்.

மண்டபங்களும் சன்னதிகளும்
                இங்குள்ள மண்டபங்களும், சன்னதிகளும் தனித்துவம் வாய்ந்தவை. திருவந்திக்காப்பு மண்டபம், அரங்க விலாசம், வசந்த மண்டபம், இராமாயணம் அரங்கேறிய கம்பர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், காயத்திரி மண்டபம் போன்றவை சிறப்பானவை. சன்னதிகளில் இராமானுஜர் சன்னதி, உற்சவ ஆண்டாள், அமிர்தகலசக் கருடர், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் சன்னதிகள், துலுக்க நாச்சியார் சன்னதி ஆகியவை விசேடமானவை.

திருவிண்ணாழி
                திருவிண்ணாழியைச் சுற்றியுள்ள முப்புறச் சுவர்களில் சுமார் நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட நூற்றெட்டு பெருமாள் தலங்களும் வண்ண ஓவியங்களாக வரவேற்கின்றன.

ஆசியாவிலேயே பெரிய கோபுரம்  இங்குள்ள இராஜகோபுரம்
                அரங்கநாதன் தென்புறம் நோக்கியிருப்பதனால் கோயிலின் தலைவாசல் தெற்குப்புறம் அமைந்துள்ளது. அங்கு தெற்கு கோபுரத்தின் அடித்தளம் மட்டுமே இருந்தது.
இக்கருங்கல் கட்டிடப்பகுதியின் நீளம் 165 அடி அகலம் நூறு அடி இராஜ கோபுரத்தை கட்ட முயற்சி செய்த அச்சுதராயர் மன்னர் முடிக்காததை மகான் முடித்தார் என்று சொல்லும்படியாக அகோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் நெடுநாள் காத்திருந்த கோபுரத்தை முடித்து வைத்துள்ளார்.
பதின்மூன்று நிலைகளையும், இருநூற்றி முப்பத்தாறு அடி உயரமும் கொண்ட இக்கோபுரம் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் நானூறு ஆண்டு காலம் மொட்டைக் கோபுரமாக நின்றதை செப்பனிட்டு 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லி ஸ்ரீ ரங்கநாத பக்தர்கள் இன்று ராஜகோபுர தரிசனம் பெறக்கூடியதாக உள்ளது. இதற்கு ஒன்றரைக் கோடி ரூபாயும் எட்டு ஆண்டுகளும் செலவாகியுள்ளன. தவிர மூலவ‌ரி‌ன் ‌விமான‌ம் த‌ங்க‌க் கோபுர‌ம் ஆகு‌ம்.

தைலக்காப்பு
                கருவறையின் பதினைந்து அடி நீளம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள கன்னங்கரிய  வடிவினனான  ரங்கநாதப் பெருமாள் தைலக்காப்புக்குள்  உறங்குகிறார்.ஏன் என்றால் சுதையாலான சிலை என்ற படியால் அபிஷேகம் நடப்பதில்லை.

உற்சவங்கள்
                இங்கு நடைபெறும் உற்சவங்களில் பங்குனிப் பெருவிழா பிரமோத்சவமாகும். அதில் ஆறாம் நாள் உறையூர் வரும்  அரங்கன் சோழன் குலவல்லியான  நாச்சியாரை மணக்கிறார். ஒன்பதாம் நாள்  பெரிய பிராட்டியின் திரு நட்சத்திரமான பங்குனி உத்திர நன்னாள். அன்று அரங்கம்  திரும்பி  ஊடல் கொண்ட பிராட்டியை சந்திக்கிறார். நம்மாழ்வார்  தூது  சென்று  ஊடல் தீர்க்கிறார்.

இங்கு  நடைபெறும் பிற உற்சவங்களில்  வைகுண்ட ஏகாதசி மிகப் பிரசித்தி பெற்றது.சொர்க்க வாசல் என்ற விசேஷ வாசல் படி அன்று தான் திறக்கப் படுகிறது.அன்று பெருமாள் ரத்ன அங்கியில் காணப்படுகிறார்.அன்று 21, 800 முத்துக்கள் உள்ள முத்தங்கியும் அணிவிக்கப் படும்.

விஸ்வ ரூப தரிசனம்
அதிகாலையில் பக்தர்களுக்கு பெருமாள் அளிக்கும் முதல் தரிசனம் விஸ்வ ரூப தரிசனம்.திருக்கதவின் முன் நின்று சுப்ரபாதம்,பின் வீணாகானம், அத்னி பின் பசு, யானை, கண்ணாடி என அட்ட மங்கலங்கள், காட்டி மாதவன் கண்விழிப்பதாக ஐதீகம்.அத்ன பின் மீண்டும் திரையிடப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப் படும்.பின் பெருமான் திருமுகம் கழுவி, புத்தாடை அணிந்து அதன் பின் விஸ்வ ரூப தரிசனம் வழங்குவார்.

கருவரைக்குள் திருவரங்கன் திருமார்பில் லக்ஷ்மி மட்டுமே உறைகிறாள். ரங்கநாயகி தாயார், கமலவல்லித் தாயார், துலுக்க நாச்சியார் என்று அரங்கனுக்கு பல தேவியர் இருந்தாலும் அவர்கள் தனித்தனிச் சன்னிதிகளுக்குள் இருக்கிறார்கள்.

க‌ம்ப‌ர், ராமானுஜ‌ர்

க‌ம்ப‌ர் ராமாயண‌த்தை அர‌ங்கே‌ற்‌றிய ம‌ண்டப‌ம் இ‌‌த்தல‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ராமானுஜ‌ர் சுமா‌ர் 700 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, இ‌ந்த கோ‌யிலு‌க்கு வ‌ந்து பூஜை முறைகளை ஒழு‌ங்குபடு‌த்‌தி அமை‌த்து, இ‌ங்கேயே இரு‌ந்து‌ள்ளா‌ர். கோ‌யி‌ல் வளாக‌த்‌தி‌ல் தா‌ன் அவ‌ர் சமா‌தி அடை‌ந்து‌ள்ளா‌‌ர்.

பன்னிரு ஆழ்வார்
பன்னிரு ஆழ்வார்களில், பதினோரு ஆழ்வார்களால் பாடப் பெற்ற ஸ்தலம் ஸ்ரீரங்கம் “. மதுரகவி ஆழ்வார் மட்டும் அரங்கனைப் பாடவில்லை.

’குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டுஉடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே’ என்ற தொண்டரடிப் பொடி ஆழ்வார் வாக்கில் உருகி அரங்கனை  வணங்குவோம்.

No comments:

Post a Comment