Google+ Followers

Saturday, November 16, 2013


தென்னகத் திருக்கோயில்கள்

பூவுலகக் கயிலை! புண்ணிய மயிலை!


                எங்கும் திருமேனி, எங்கும் சிவசக்தி என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்த பரம்பொருள், ஈசனும், வேண்டும் பொருள் ஒன்று உண்டு என்றால் அதை வாரி வழங்கும் தாய் அம்மையும் இணைந்து அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல. அவற்றுள்மயிலையே கயிலைகயிலையே மயிலைஎன்ற பெருமையுடன் அமைந்தது கபாலீச்சரம். சென்னை மயிலாப்பூரில் அடைந்துள்ள இப்பூலோகக் கயிலையின் புகழ்ச் சொல்லில் அடங்காதது.
                “கல்லாடை புனைந்தருளும் கபாலியை
                கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
என்று திருநாவுக்கரசர் இங்குறை இறைவனைப் பற்றி உள்ளம் கனிந்து பாடியுள்ளார்.
                “துறைகொண்ட செம்பவளம் இருள்சுற்றும்
சோதித் தொன் மயிலை
என்று சுந்தரர் இத் தலப்பெருமை குறித்து போற்றியுள்ளார்.
மயில் அவதாரம்
                “மாமயிலைஎன்று சம்பந்தர் சிறப்பிக்கும் இத்திருத்தலத்தில் இறைவனை, அம்மை மயிலுருவாக நின்று வழிபட்டாள் என்பது ஐதீகம். இறைவன் அம்மைக்கு ஞான உபதேசத்தை நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த மயில் கூட்டத்தைக் கண்ட அம்மையின் மனம் அதிலே இலயித்தது. கவனம் திசை திரும்பியதைக் கண்ட ஐயன் சினமுற்றுஎந்த மயிலைக் கண்டு மனம் பறி கொடுத்தனையோ அதுவாகவே ஆகக் கடவதுஎன்று சபித்தார். பின்னர் உமையின் நிலை கண்டு இரங்கி, அவளின் வேண்டுதலை ஏற்று, “மயிலாக அவதரித்து என் மனம் குளிர பூசித்தால் மீண்டும் என்னுடன் இணைவாய்என்று வரமருளினார். அம்மை வழிபட்ட தலமே மயிலாப்பூர் ஆயிற்று. இங்கு மூலவராகக் கபாலீசுவரரும், கற்பகாம்பாளும் எழுந்தருளி உள்ளனர்.
                தமிழ்க் கடவுள் முருகன், அம்மையைப் பூசித்து சக்தி வேல் பெற்ற தலமும் இதுவே. பிரம்மன் தான் கொண்ட அகந்தைக் காரணமாக வந்த பாவத்தைப் போக்க இறைவனைப் பூசித்து மீண்டும் படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலமும் இதுவே.
தலப் பெயர்கள்
                அசுரர்களால் தீண்டப்பட்ட நான்கு வேதங்களும் இங்கே இறைவனை வணங்கி நின்ற காரணத்தால் இத்தலத்திற்கு வேதபுரி என்ற பெயரும் வழங்கப்படுகிறது. தன் இழந்த கண்ணைப் பெறும் பொருட்டு சுக்கிரன் சிவனைப் பூசித்த தலமாதலால் இதை சுக்கிரபுரி என்றும் வழங்குகறிhர்கள். இராமபிரான் இலங்கையை அழித்துத் திரும்பியபோது இத்திருத்தலத்தில் தங்கி பிரேமாத்சவம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
எலும்பு பெண்ணானது
                சைவ நாயன்மார்கள் போற்றிப் பாடியுள்ள இத்தலத்திலேயே திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணுருவாக்கிய அற்புதத்தை நடத்திக் காட்டினார். திருமயிலையில் வாழ்ந்;து வந்த சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவை, இளம் வயதில் பாம்பு தீண்டியதால் இறந்து போனாள். துயரத்தால் அல்லலுற்ற பெற்றோர் அவளின் என்புச் சாம்பலை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து வந்தனர். இங்கு வந்த ஞானசம்பந்தரை சந்தித்து தம் துயரத்தைத் தெரிவித்து நின்றனர். சம்பந்தர் இறைவனை வேண்டிமட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைஎன்று தொடங்கி பதினொரு பாடல்களை பதிகமாக அருளினார். குடத்திலிருந்து பூம்பாவை உயிர் பெற்று எழுந்த அற்புதம் கண்டு உலகமே வியந்தது. ஆண்டு தோறும் இங்கு இந்நிகழ்ச்சி திருவிழாவில் ஓர் அங்கமாகக் கொண்டாடப்படுகிறது. சம்பந்தரும், பூம்பாவையும் எழுந்தருளியுள்ள தனிச் சன்னதியும் இங்குள்ளது.
மலர்ப் பாவாடை
                ஊழிக் காலத்தில் உயிர்களெல்லாம் அழிவை அடையும்போதும் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியான இறைவன் கபாலம் தாங்கி தனித்து நிற்கிறான். மீண்டும் உலகைப் படைத்து உயிர்களை உய்விக்ககபாலீசனாகநிற்கும் இறைவனே கபாலீசன், வேண்டியோர்க்கு வேண்டியதை வாரி வழங்கும் மண்ணுலகத்து கற்பகமாய் தாய் கற்பகாம்பாள் உடனுறைகிறாள். அம்மையின் அலங்காரங்களுள் பிரசித்தி பெற்றது மலர்ப்பாவாடை.
துர்க்கை
                இறைவன் இங்கு வழக்கத்திற்கு மாறாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் சிவலிங்கம் கிழக்கு நோக்கியிருப்பதே வழக்கம். இங்குள்ள இந்த மாறுதலால் துர்க்கை சிவனின் வலப்பாகத்திலும், தட்சணாமூர்த்தி இடப்பாகத்திலும் அமைந்திருக்கின்றனர். துர்க்கை விஷ்ணுவின் அம்சமான விஷ்ணு துர்க்கை என்பது இன்னொரு சிறப்பாகும். இதனால் இங்கு துர்க்கை வழிபாடு மிகச்சிறப்பான அம்சமாகும்.
அமைப்பு
                இத்திருக்கோயிலின் கிழக்கில் ராஜகோபுர தரிசனம் 120 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் விக்கினம் நீக்கி விமோசனம் தரும் பிள்ளையார் தூக்கிய காலுடன் நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சன்னதிக்கு நேர் எதிராக அண்மையில் நிறுவப்பட்ட அருணகிரிநாதர் சன்னதி அமைந்து;ளளது. தெற்கிலே திருமயிலையில் அவதரித்த வாயிலார் நாயனார் சன்னதி இருக்கிறது. தலவிருட்சமான புன்னை மரம் வடக்கில் பரந்து வளர்ந்து நிழல் தருகின்றது. அதன் கீழ் புன்னை வன நாதர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். புன்னைவன நாதரைப் பூசிக்கும் அம்மை மயில் உருவில் திருக்கோலம் கொண்டு அமர்ந்திருக்கிறாள். ஆண்டு தோறும் மயிலையில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் மயில் பூஜை ஒரு முக்கிய அம்சமாகும். கோயிலின் மேற்கே வெளிப்புறத்தில் கபாலி தீர்த்தமெனப்படும் திருக்குளம் உள்ளது. நடுவில் நீராழி மண்டபம் அமையப் பெற்ற இக்குளத்தில் நடக்கும் தெப்பத் திருவிழாவைக் காணக் கண் கோடி வேண்டும்.
வரலாறு
                இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளை இயற்றிய வள்ளுவர் பிறந்த தலமும் மயிலையே என்பது சிறப்பாகும். கிரேக்க நாட்டைச் சேர்ந்த தாலமி (கி.பி. 90-168) என்ற அறிஞர்மயிலார்ப்பாஎன்று தன் ஆய்வு நூலில் இவ்வூரைக் குறிப்பிட்டிருக்கிறார். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார்தேனமர் சோலை மாடமயிலைத் திருவல்லிக்கேணிஎன்ற தன் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும், சம்பந்தரும் தம் பாடல்களில் இத்தலத்தைப் போற்றியுள்ளனர்.
                தற்போதுள்ள கோயில் முன்னூறு வருடப் பழைமை உடையது. இதற்கு முன்பு இருந்த கோயில் கி.பி. 1566இல் போர்த்துக்கீசரின் கையில் அகப்பட்டு அழிந்தது என்றும் சரித்திர வல்லுநர்கள் சான்றுரைக்கின்றனர். இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இக்கோயில் சுவரிலும், சாந்தோம் கதீட்சலிலும் இன்றும் காணப்படுகின்றன.
திருவிழா
                மாதத்திற்கு இருமுறை வருகின்ற பிரதோஷ நாள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருத்தலம் மாதந்தோறும் திருவிழாக்கோலம் பூண்டாலும் கூட, பங்குனிப் பெருவிழாவான வருடாந்திர விழா மிகச் சிறப்பானது. இதில் மூன்றாம் நாள் விழாவில் அதிகார நந்தியும், ஐந்தாம் நாளில் வெள்ளி விடையூர்தி விழாவும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும், எட்டாம் நாள் அறுபத்தி மூவர் திருக்காட்சியும், ஒன்பதாம் நாள் பிச்சாண்டி கோலமும் மிகச் சிறப்பான அருட்காட்சிகளாகும். அறுபத்து மூவர் விழாவன்று அண்டமே அதிரும்படியாக மக்கள் கூட்டம் அலைமோதும் அழகே அழகு.
                திருமயிலையுடன் இணைந்து ஏழு சிவன் கோயில்கள் சுற்றிலும் அமைந்திருக்கின்றன. தவிர இதே நிர்வாகத்தின் கீழ் அருள்மிகு கோலவிழி அம்மன் கோயில் இயங்குகிறது.
                கடற்கரை அருகில் உள்ள கோயிலானபடியால் இங்கு நடைபெறும் உற்சவங்கள் ஆகம விதிப்படி பௌர்ணமி திதியில் நடைபெறுகின்றன. இதனால் ஏனைய கோயில்களில் நடக்கும் நட்சத்திர முறைப்படியான திருவிழாக்களில் இருந்து வேறுபடுகின்றன.

                நினைத்ததை அருளும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு சுற்றுலாத் துறையினரால் அங்கீகரிக்கப்பட்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளையும் கவர்ந்திழுக்கின்றது என்பதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.