Saturday, November 2, 2013

மறக்க முடியாத தீபாவளி

மறக்க முடியாத தீபாவளி
எண்பதுகளில் சென்னையில் இளம் கலை பட்டம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இளம் அரிமா சங்கத்தில் செயலாளர் ஆகவும் இருந்தேன்.
டிசம்பர் மாதம் லியோ சங்கம் போரூரில் நடத்தவிருந்த இலவச பல் சோதனை முகாமுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல் வைத்தியரை சந்தித்து  நாள் முன் பதிவு செய்யும் பொறுப்பு என்னிடம் விடப் பட்டிருந்தது.
மாலை மூன்று மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த அவரது பல் மருத்துவ மனையில் அவரை சந்திக்க சென்றேன்.என்னைக் கண்டவுடன் மிகவும் அன்போடு வரவேற்று அமரச் சொன்னர்.. அவருக்கு எதிரிலிருந்த  நாற்காலியில் உட்காரப் போன போது தடுத்தாண்டு பல் நோயாளிகளுக்குரிய நாற்காலியில் அமர வைத்தார்.
என்ன? ஏது?? என்று கேட்கும் முன் வாயை திறக்கச் சொன்னார்.” நான் யார் வந்தாலும் முதலில் அவர்கள் பல்லை சோதித்த பின்னர் தான் மறு கதை “ என்ற படியே பல்லை சோதிக்க தொடங்கினார். என்னைப் பேசவே விடவில்லை.வாயில் எதையோ திணித்துவிட்டார். சாய்ந்த நிலையில்  நாற்காலியில் இருந்த படியால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
என் பற்கள் ஒன்றும் ’செங் கோட்டை’ போல உறுதியானவையல்ல.அவற்றில் பல மர்மக் குகைகள் இருப்பது நானறிந்ததே.ஆனாலும் எதிர் பாராமல்  என் பல்லைப் பிடுங்க அந்த பல் மருத்துவர் எடுத்த முயற்சிகளைக் கண்டு கலங்கிவிட்டேன்.
ஏனென்றால் மறு நாள் தீபாவளி. ஏதாவது சொல்லி விட வேண்டும் என்று துடித்தேன். மனிதர் என்னைப் பேச விட்டால் தானே.கையை அசைத்தேன்.மனிதர் எதையும் கண்டு கொள்ளாமல் தன் முயற்சியே குறியாக இரண்டு பற்களை பிடுங்கிய பின் தான் என்னை நாற்காலியில் இருந்து எழுந்திருக்க விட்டார்.என் கண்ணில் வந்த கங்கை மறு நாள் கங்கா ஸ்நானம் செய்ய முடியாது என்பதை மீண்டும் நினைவூட்டியது.முக்கியமாக தலை குளிக்க முடியாவிட்டால் புத்தாடை அணிவது எப்படி ? அதை விடக் கொடியது அத்தனை இனிப்பு வகைகளையும் ஒரு கை பார்க்க  நான் போட்டிருந்த ஒராண்டு திட்டம் பாழானது என் நெஞ்சில் இடியாக வந்து பல் பிடுங்கிய வலியைத் தாண்டி வலித்தது.
நான் இருந்ததோ கபாலீஸ்வரர் கோயில் குருக்கள் வீடு.பூஜை , புனஸ்காரம், கங்கா ஸ்நானம்  , ஆசாரம் , அனுஷ்டானம் எல்லாம் அம்பேல்.. என் பல் பிடுங்கியது தெரிந்ததும் பரிதாபத்துக்குரிய உயிராக  சித்தரிக்கப் பட்டு நிறைய உதவிக் கரங்கள் நீண்டன.

ஆனாலும் தீபாவளி மிக்க வலியோடும், பட்டினியாகவும் எனக்கு சோகமாகவும் உங்களுக்கு சிரிப்பாகவும் எழுதக் கூடிய அளவில் அமைந்தது மறக்க முடியாத தீபாவளியாகும்.

No comments:

Post a Comment