Wednesday, December 25, 2013

நாதஸ்வரம்

நாதஸ்வரம்



                நாதஸ்வரம் - நாயணம், நாகஸ்வரம் எனவும் அழைக்கப்படும். தென்னிந்தியாவுக்கு சொந்தமான இக்கருவி வட இந்தியாவில் ஷெனாய் என்று அவதாரம் எடுத்துள்ளது. நாதஸ்வரம்-மங்கல வாத்தியம் ஆகும். அதாவது மங்கல விசேடங்களின் போது வாசிக்கப்படுவதாகும். அனைத்து இசைக்கருவிகளிலும் உயர்ந்ததாகப் போற்றப்படுவது. பெரிய மேளம் என்றும் ராஜவாத்யம் என்றும் அழைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் வாங்கியம் எனப்படும் இசைக் கருவி நாதஸ்வரதை ஒத்தது.

                கோவில் வழிபாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள வாத்தியம். மரமும் காற்றும் சேர்ந்து தரும் நாத இன்பமே நாதஸ்வர இசையாகும். துளைக்கருவி வகையினதான இவ்வாத்தியம் பற்றிய குறிப்புகள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூலில் காணப்படுகின்றன. இளங்கோவடிகள் இயற்றிய சிலம்பில் நாதஸ்வரம் பற்றிய குறிப்புகள் அரங்கேற்ற காதையில்வங்கியம்எனக் குறிப்பிடப்படுவதாக உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகிறார். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்கிராஜ புராணத்திலும் நாதஸ்வரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

                சில தேவாரங்களில்பண்ணார்ந்த முழவுஎன்று வருகிறது. பண் என்றால் இசை, முழவு என்றால் நாதஸ்வரத்தையே குறிக்கும். அருணகிரி நாதரின் திருப்புகழில் சில இடங்களில் தவில் வாத்யம் பற்றிச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். இன்றும், என்றும் ஸ்வாமிக்குக் கோவில்களில் பூஜையின்போதும் சுவாமி புறப்பாட்டின்போதும் இறைவனோடு ஒன்றிய வாத்யம் நாதஸ்வரமும் தவிலும்தான்.

                சங்கிலிருந்தே ஓசைகளை நம் முன்னோர் உருவாக்கி மகிழ்ந்தனர். பின்னர் மாடு மற்றும் எருதுகளின் கொம்புகளிலிருந்து இசைக்கருவிகளைச் செய்தனர். அதன் பின் மூங்கில் மற்றும் உலோகம் பயன்பட்டன.

                அனேகமாக எபனியில் தான் நாதஸ்வரம் உருவாக்கப்படுகிறது. என்றாலும் மூங்கில், சந்தனம், செம்பு-பித்தளை, பொன், வெள்ளி, செருங்காலி, கருங்காலி, யானைத்தந்தம் போன்றவற்றிலும் நாதஸ்வரம் உருவாக்கப்பட்டுள்ளது.


                இத்தனை பெருமைகள் நிறைந்த நாதஸ்வரம் பெரிய அங்கீகாரம் இல்லாமலேயே பல ஆண்டுகள் இருந்தது. காரிக்குருசி அருணாச்சலம் பிள்ளை மற்றும் டி என் ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரின் வரவுக்குப் பின்னரே நாதஸ்வரம் பிரபலமானது.
                நாதஸ்வரம் தெய்வ வாத்தியமாகும். அடி பாகமான வட்டம் சூரிய தேவனாகும். மேலே உள்ள துளை சக்தி, உள் துளைகள் விஷ்ணு, உடல் பாகம் பிரமன், ஏழு துளைகள் சப்த மாதக்கள், தோன்றும் இசை சிவன். ஸப்த ஸ்வரங்களுக்கு 7 துவாரங்களும் அடிப்பாகத்தில், சிவபெருமானின் 5 முகங்களைக் குறிக்கும்வண்ணம் 5 துவாரங்களும் இடப்பட்டிருக்கும் எனவும் ஒரு கருத்து உள்ளது.
                தற்போதைய கருவி முன்பிருந்ததை விட நீளமானது. முன்னைய கருவிகள் தற்போதைய திமிரி நாதஸ்வரத்தை ஒத்தன. பொன்னுச்சாமிப்பிள்ளை அவர்களே முதலில் நீளத்தை மாற்றியதுடன் சத்த தொனியையும் மாற்றினார். உலோகத்தை விட மரத்தாலான நாதஸ்வரத்தில் நல்ல ஒலி கிடைத்தது. தற்போதைய நாதஸ்வரத்தின் அளவு 34.5 அங்குலமாகும். 2 கட்டை தாளம் கொண்டது.

                கோவில்களில் நாதஸ்வரத்தை காலம் காலமாக வாசித்து வருகிறார்கள். வாசிக்கப்படும் ராகங்களை வைத்தே நேரத்தை ஊரில் உள்ளவர்கள் சொல்லி விடுவார்கள். பூஜை தொடங்கும் போது முதல் முடியும் வரை பல்வேறு பொருத்தமான ராகங்களை வாசிப்பார்கள். திருவனந்தல் எனப்படும் பள்ளியெழுச்சியின் போது பூபாளம், மௌலி, மலயமாருதம் போன்ற ராகங்களும், காலை 7 மணி பூஜையின் போது ஆவேரி, தன்யாசி, சாவேரி போன்ற ராகங்களும், மத்தியான வேளையில் முகாரி, பூர்ணசந்திரிகா, மந்தரி போன்ற ராகங்களும், மாலை பூஜையின் போது ஷங்கராபரணம், பைரவி, காம்பொஜி ராகங்களும், பள்ளியறை பூஜையின் போது ஆனந்த பைரவி, நீலாம்பரி ராகங்களும் வாசிக்கப்படும்.

                ஸ்வாமி புறப்பாடு நேரத்தில் மல்லாரி ராகமும், பஞ்ச நடை, ராகம், தானம், பல்லவி வாசிக்கப்படும். மல்லாரி என்பது நாதஸ்வரமும் தவிலும் இணைந்து கம்பீர நாட்டையில் இசைக்கப்படுவதாகும். கம்பீர நாட்டை தவிர பஞ்ச ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, மற்றும் ஸ்ரீராகம் விலாவரியாக ஆலாபனை செய்யப்படும். தோடியும் வாசிக்கப்படும். திருமஞ்சனம் எனப்படும் நீராட்டலில் தீர்த்த மல்லாரி, நெய்வேத்தியம் எனப்படும் உணவூட்டலின் போது தளிகை மல்லாரி, பூரண கும்ப மரியாதையின்போது கும்ப மல்லாரி, தேரெழுந்து வரும் போது தேர் மல்லாரி, ஸ்வாமி புறப்பாடு நேரத்தில் புறப்பாட்டு மல்லாரி என ஐவகை மல்லாரிகள் உள்ளன.

                ரக்தி மேளம் எனும் ரக்தி ராகங்களை வாசிப்பது நாதஸ்வர பாரம்பரியத்தில் பிரபல்யமானது. வேறுவேறு தாளங்களில் கல்யாணி, காம்போதி, தோடி, பைரவி போன்ற ராகங்களை விரிவாக ஆலாபனை செய்வது, கடந்த காலத்தில் ரக்தி மேளம் மணிக்கணக்காகவும், நாட் கணக்காகவும், வாசிக்கப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன.

                நாதஸ்வரத்துக்கு இனிமை கூட்டுவது கலைஞனின் மூச்சுக் காற்றாகும். உதடுகளும், விரல்களும், மூச்சுக் கட்டுப்பாடும் சேர்ந்து இசை கூடும்.


குடந்தை ஆதி கும்பேஸ்வர் ஆலயத்தில் ஆதி கருங்கல் நாதஸ்வரம் ஒன்று உள்ளது. கருங்கல் நாதஸ்வரம் ஆழ்வார் திருநகரி மற்றும் திருவாறு ஆகைய இடங்களிலும் உள்ளன.  

No comments:

Post a Comment