Wednesday, December 18, 2013

சிவன் கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும்  சுருட்டப் பள்ளி

சந்திரிகா


பிரதோஷம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விரதம் தான் . இந்த விரதம் தோன்றக் காரணம் என்ன  தெரியுமா?

பிரதோஷ வரலாறு
தேவர்களும்,அசுரர்களும்மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக்கடைந்த போது தோன்றிய  அமிர்தம்  தேவர்களூக்கு வழங்கப் பட்டது தெரிந்ததே.அதில் எழுந்த விஷத்தினை பரம் பொருளான சிவன் தான் உண்டு கறை கண்டனானதும் தெரிந்ததே, திருக்கைலாயத்தில் சிவன் கோபத்தின் உச்சத்தில் செய்த சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. விஷ்ணு, பிரம்மா, பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன.

கடைசியில் சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டி வணங்குகிறார்.  சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லி கைலாயத்தில் நடனத்தை  நிறுத்தக் கோறுகிறார். சிவன், ‘நான் எங்கே போய் ஆடுவது?’ என்று கேட்க, ‘என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்’ என்று நந்தி சொல்கிறார்.

விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால்  நந்திக்கு உகந்தது பிரதோஷம். ‘திரயோதசி’ தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என இதைக் கொண்டாடுகின்றோம்.

சிவன் பதினோராம்  பிறையாகிய ஏகாதசியில்  விஷம் உண்டார். மறு நாள்,பன்னிரண்டாம்  பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். பதின்மூன்றாம்  பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள்சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

எல்லா சிவன் கோவில்களிலும்  மாதமிரு முறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக  பிரதோஷம் கொண்டாடப்படுகிறது,

அந்த பிரதோஷ காலத்தில் தான் இன்னொன்றும் நிகழ்ந்தது. உண்ட விஷம் தொண்டையில் நின்றதால் சிவனுக்கு மயக்கம் ஏற்பட்டது.அதனால் அவர் மயங்கி உமை அன்னை மடியில் விழுந்தார்.இப்படி  பள்ளிகொண்ட கோலாத்தில் சிவன் காட்சி தரும் ஒரே திருத்தலம் தான் சுருட்டப் பள்ளி.

பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இந்த அதிசயத்தைப் பார்த்து வணங்கத் தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்து விட்டார்கள். அவர்களிடம் நந்தி பகவான், மயக்கம் தெளிந்தபின் பரமேஸ்வரனை வழிபடலாம் என்று அறிவுறுத்தினார்.
தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் இந்த மாலைக் காலத்தில்-சந்தியா நேரத்தில் எழுந்தருளினார். ஆனந்த நடனம் ஆடினார்.பிரதோஷ வழிபாடு முதன் முதலாக இந்த கோவிலில்தான் தோன்றியது.சிவபெருமான், இந்த தலத்தில் நடத்திய ஆனந்த தாண்டவம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.  

சுவாமி பெயர் பள்ளி கொண்ட ஈஸ்வரன் , அம்பாள் சர்வ மங்களாம்பிகை. சுருட்டப்பள்ளி சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டு. அதுபோல இங்குள்ள பார்வதி அமுதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார் சிவன் கிடந்த திருக்கோலத்தில்  பார்வதி மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். பள்ளிகொண்டீஸ்வரர் சிலை அமைப்பு ஆறு அடி நீளத்தில் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில்தேவர்கள், ரிஷிகள் தரிசனம் தருகின்றனர்.

சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் சுருட்டப்பள்ளி உள்ளது.

ஆலய அமைப்பு: 
இத் திருக்கோயிலை விஜயநகரை ஆட்சி செய்த ஹரிஹர புக்கா என்ற அரசர் கட்டினார்

கிழக்கு நோக்கிய சிறிய கோபுரம். மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் ஆலய நுழைவு வாயில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்களும் இறைவனின் திருமந்திரமான ஐந்து எழுத்துக்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

உள்ளே நுழைந்ததும் எதிரில் முதன் முதலின் நாம் காண்பது அம்பிகையின் சன்னதி. இங்கு ஈஸ்வரனும், அம்பிகையும், ஒரே கோவிலில் தனித்தனியான சன்னதிகளில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். பள்ளிகொண்டீஸ்வரரின் சன்னதி தனித்த திருக்கோவிலாக அமைந்துள்ளது.

அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்களாக, திருஉருவங்களை காணலாம்.

திருக்கல்யாண  திருத்தலம்

அம்பிகை இறைவனுக்கு வலது புறத்தில் கோவில் கொண்டுள்ளது தனி சிறப்பு அநேக கோவில்கள் அம்பிகை இறைவனுக்கு இடது புறத்தில் கோவில் கொண்டுள்ளதை காணலாம். வலது புறத்தில் அம்மன் கோவில் கொண்டுள்ளதால் இத்தலத்தை திருக்கல்யாண ஷேத்திரம் என கூறுவர். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இதன் பொருள்.

அம்பிகையின் கருவறைக்குள் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கக்கூடிய, நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க கூடிய காமதேனுவும், கற்பக விருட்சமும் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கிறார்.

 தாம்பத்ய தட்சணாமூர்த்தி:

சிவபெருமானின் அறுபத்து  நான்கு  திருமேனி வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம்  முப்பத்ஹ்டி இரண்ட்டாவது வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவ குருவான பிருஹஸ்பதி தட்சிணாமூர்த்தியின் அம்சமாகத் திகழ்வதாக ஐதீகம் .ஆனால் இஙு தாம்பத்திய தட்சணாமூர்த்தி திருவுருவம் எங்கும் பார்க்க முடியாதபடி அமைந்துள்ளது விசேஷம்.

எல்லா ஆலயங்களிலும் இருப்பது போல இங்கு தட்சணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் சூழ கல்லால மரத்தினடியில் அமர்ந்து காட்சி தரவில்லை. அதற்கு மாறாக பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவியை அனைத்த வண்ணம்சின்முத்திரையுடனும், ஞான சக்தியுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகையின் பெயர் கௌரியாகும்.


கோயிலின் பிற சிறப்புகள்

1.இங்குள்ள அனைத்து தெய்வங்களூம் தம்பதி சமேதராக காட்சி தருகினறனர்.

2. இராமர் இங்கு லிங்க வழிபாடு செய்தார்.

3. வால்மீகி முனிவர் வழிபட்ட லிங்கம் வால்மீகேஸ்வரர் என்ற பெயரில் இருக்கிறது.

4. 1976 இல் காஞ்சிப் பெரியவர் இங்கு தங்கி இருந்து அற்புதம் செய்தார்.அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தை தோண்ட சொன்னார். அந்த இடத்தில் நிறைய கால்தடங்களுடன் ஒரு கல் கிடைத்தது. அந்தக் கல்லில் உள்ள கால் தட பதிவுகள், ராமபிரானின் குழந்தைகளான லவ-குசாவினுடையது என்று மகாபெரியவர் அருளினார். காசிக்கு செல்ல விரும்புபவர்கள் சுருட்டப்பள்ளிக்கு சென்று வழிபட்டாலே காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று காஞ்சி பெரியவர் கூறி உள்ளார்.


 5. பார்வதி இருபுறமும் சூரிய, சந்திரர்கள் நிற்க, விஷ்ணு, பிரம்மா, லட்சுமி, மார்க்கண்டேயர், அகஸ்தியர், வால்மீகி, இந்திரன், நாரதர், முருகர், விநாயகர் ஆகியோரும் இந்த கோவிலில் உள்ளனர். இத்தகைய அம்சத்தை வேறு எந்த சிவாலயங்களிலும் காண இயலாது.



Tuesday, December 10, 2013

மண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும் வாழ்வார் - தமிழ் முரசில் 8.12.13 இல் பிரசுரமானது

மண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும் வாழ்வார்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

சொந்த சகோதரர் சொத்தினைத் தின்றிடும்,
பந்து மித்திரர் பணப் பசி கொண்டிடும்,
வந்த புத்திரர் வரவினை கணக்கிடும்,
இந்த உலகிலும் ………………………

உரிமைக்காக ஊண் , உயிர் ஈந்த  
உன்னதத் தலைவர் மண்டேலாவுக்கு
இதோ ஒர் இரங்கற் பா!

ஒன்பது என்பது பெருக்கின் வர்க்கம்
பதினெட்டாம் ஆண்டு பதினெட்டாம் தேதி
ஆடியில் பிறந்த பெருக்கு - உம்மிடம்
இல்லை -  தான் எனும் செருக்கு

இன வெறி ஆதிக்கம் வைத்தது 
இருபத்து ஏழு ஆண்டு சிறை.
ஆனாலும் உலகு உம்மிடம்
கண்டதில்லை ஒரு கறை

ஆயுள் தண்டனை  மீண்ட  போது
உடல் எங்கும் கொண்டது சுருக்கம்
ஆனாலும்  நின் மனஉறுதி கண்டதோ  
உருக்கின் இறுக்கம்.

கால் நடை மேய்த்த நேரம் போக  
சண்டை கற்றது கரம்
காலம் கருதா ஞால நலனுக்காய்  
சட்டம் கற்றது சிரம்.


வெள்ளை சிறையில் தனிமை.
தனி ’மை’க் கொண்டு
இந்தக் கருமை எழுதிக்
கேட்டதோ உரிமை.
கேட்க மறுத்ததால்  மன்னிப்பு  கூட
மண்டியிட்டது மண்டேலாவிடம்

தென்ஆபிரிக்காவிற்கு  மட்டுமே அவர்  அதிபர்
உலகிற்கோ  அவர் என்றும் ஆசிரியர்
’அமைதிவழியே அறவழி’ என்றும்
’செயலே சிறந்த சொல்’லென்றும்
உலகம் அவரிடம் கற்றதும் பெற்றதும் பலப்பல.

சித்திரவதைகள்  விசித்திர வதைகளான போதும்
ரத்தம் சிந்தாமல் சமாதானத்தையே
புன்னகையாக சிந்திய பெருமகன்
சாபங்களை வரங்களாக மாற்றும்
சித்து வித்தகன்
அமைதியின் உருவே இன்று அமைதியானது


சுவாசத்தை காசம் உருக்கினாலும்
தேச நேசத்தில் நெல் அளவும் அருகவில்லை
மனிதம் காத்ததால் மகான் ஆனவர்
மனிதம் இன்று மருகி வருவதால்
மரித்தாயின் மடி தேடி மரித்தாரோ?
உலகுக்கோர் ஒளி தேடி ஒளிந்தாரோ?

”ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!”
சீத்தலைச் சாத்தனார் சொன்னது இது

”ஆற்றா மாக்கள் அரும் துயர் களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உரிமை  கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்! என்போம் ”

வாழ்வாங்கு வாழ்ந்த  நின் வெற்றுடல் நோக்கி !

மண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும் வாழ்வார்!!

Monday, December 2, 2013

மகான் ஆன மனிதன் - வீரத்துறவி விவேகானந்தரின் 150வது நினைவு ஆண்டு

வீரத்துறவி விவேகானந்தரின் 150வது  நினைவு  ஆண்டு
மகான் ஆன மனிதன்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
இளந்துறவி சுவாமி விவேகானந்தர் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையை முரசறைந்தவர். வீரத்துறவி, வேதாந்த சிங்கம், என்றெல்லாம் புகழப்பட்டவர்.

 ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சரின்  முன்னணி சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தவை. மனித சமத்துவம் என்பது  உலக சகோதரத்துவதில் இருந்து மட்டுமே கிட்டும்  உண்மையை அன்றே உலகுக்கு எடுத்துச் சொன்னவர். மதம்,  மாகாணம்,  ஜாதி, மொழி, இனம் போன்ற பல்வேறு வேற்றுமைகள் உலகில் சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பரந்த மனப்பான்மையை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் 1897 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ராமகிருஷ்ண சங்கத்தை நிறுவினார்.

ஒருவர் குருவாக அடையாளம் காணப்படுவது பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்று நிகழ்ந்திருப்பதனால் மட்டுமே.

அவரது பிறப்பு,  அவர் கூறும்  கருத்துக்கள், அக்கருத்துக்கள் மக்களிடையே ஏற்படுத்தி உள்ள  தாக்கம் ஆகியவையாகும்.
அதாவது
1.       அம் மகானின் பிறப்பு தெய்வீகப் பிறப்பாக இருத்தல்
2.       அவர் கூறும்  கருத்துக்கள் புதிய பரிமாணங்களில் இருத்தல்
3.       அக்கருத்துக்கள் சமுதாயத்தில் பிரங்ஞையையும் மாற்றத்தையும் தோற்றுவிப்பதாக இருத்தல்.

இவையே ஒருவரை மகானாக அடையாளம் காட்டும் அம்சங்களாகும்.
1.விவேகானந்தராக உலகம் புகழும் ’நரேந்திர நாத்  தத்தா ’  பிறப்பும் அப்படிப்பட்ட அடையாளங்கள்  கொண்ட ஒரு பிறப்பு ஆகும். ’நரேந்திரனாத்  தத்தா  1863 ஜனவரி 12ஆம் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் கல்கத்தாவில்  மகனாகப் பிறந்தார். தாயார் புவனேஸ்வரி அம்மாள் வாரணாசியில் கோயில் கொண்டுள்ள வீரேஸ்வரிடம் தவமியற்றி பெற்ற பிள்ளை..சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் நரேந்திரன் தெய்வீகப் பிறப்பு என்பதினை  ‘சப்தரிஷிகளில் ஒருவரே நரேந்திரனாக பிறந்துள்ளார்’ என்று கூறி உறுதிப் படுத்தி  இருக்கிறார்.. பல சமயங்களில்  தன்  மற்ற சீடர்களுக்கு தர மறுத்த தூய்மை இல்லாத உணவை நரேந்திரருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அளித்துள்ளார். ‘நரேந்திரன் கொழுந்து விட்டெரியும் தீ. அவனிடம் அசுத்தம் எதுவும் தங்க முடியாது. அனைத்தையும் அவன் எதிர்த்துவிடுவான்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  தூய்மையானவர் மட்டுமல்ல முழுமையானவர் என்று நரேந்திரனை அவர் குறிப்பிடுவார். இது நரேந்திரனின் பிறப்பின் தன்மையைக் காட்டுகின்றது.

2. சிகாகோ சர்வமத மகாசபையில் 1893 செப்டம்பர் 11-ஆம் நாள், அவர் ஆற்றிய சொற்பொழிவிற்கு பின்னர் நாடே அவருடைய மேன்மையை உணர்ந்து கொண்டாடியது. ‘எனதருமை அமெரிக்க சகோதரிகளே. சகோதரர்களே’ என்ற வார்த்தைகளால் தனது உரையை தொடக்கிய போது அதுவரை கூட்டத்தினை அன்னியப் படுத்திய ‘சீமான்களே, சீமாட்டிகளே’ என்ற அனைத்து பேச்சாளர்களின் வார்த்தைகளையும் மறந்து சுவாமிஜியை தமது சகோதரனாக உணரத் தொடங்கிய  தருணம் அது. அவர் புதிய  நோக்கோடு , புதிய கருத்துக்களினை உலகுக்கு அளித்து  புதிய பாதையை அமைத்துக் கொடுத்தார். அவரது உலகம் தழுவிய கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அந்தப் பேச்சு  அமைந்தது.
நரேந்திரன் என்ற சாதாரண மனிதன் சுவாமி விவேகானந்தனாக நிமிர்ந்ததும், மனித சமத்துவம் உலக சகோதரத்துவம், பெண் சமத்துவம், நாட்டின் விடுதலை , மற்றும் ஆன்மீகம், தத்துவம், எனப் பன்முகப் பரிமாணங்களையும் அடைய வழி கோலியதும் ,சர்வமத மகாசபையில் அவர் ஆற்றிய உரையே. இது அவரது கருத்துக்கள் புதிய பரிமாணங்களில் இருப்பதற்கு சான்றாகும்.

3.சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களின் வலிமையும் , கூர்மையும் உலகு உணர்ந்த ஒன்றாகும். அவை நூற்றாண்டுகள் தாண்டியும் மனித குலத்தில் நிலைத்து நிற்பது சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள பங்கினை மிகச் சிறப்பாக சொல்வதாகும்.
இன்றளவும் அவரது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவே உள்ளன.அவற்றில் சில மாதிரிகள்
இறைவன் ஒருவனே:
“இறைவன் ஒருவனே, எல்லா மதங்களும் அந்த இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்லும் வெவ்வேறு மார்க்கங்கள் மட்டுமே”
சர்வ மத ஒற்றுமை :
“ஒரு கிறிஸ்துவர் ஹிந்துவாகவோ. பௌத்தராகவோ மாற வேண்டாம்,  அதேபோல் ஒரு ஹிந்து அல்லது பௌத்தர் கிறிஸ்துவனாக மாற வேண்டாம்,  ஒவ்வொருவரும் மற்றவர்களிடமுள்ள நல்லவற்றை ஏற்றுக்கொண்டு, தனது சுய அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’.

பெண்கள் அந்தஸ்து  :

’எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி, சமூக அந்தஸ்து போன்றவற்றால் இணையாக நடத்தப்படுகிறார்களோ அந்த நாடு பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் எல்லா வளங்களிலும் சிறந்து விளங்கும்’’
கல்வி:

’மனிதனுக்குள் உள்ள முழுமையான பூரணத்துவம் வெளிப்படுத்துவதற்கே கல்வி. தகவல்களை திணிப்பதல்ல கல்வி’
சுய முன்னேற்றம்:
‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’
பெண்கள் சமமானவர்கள்

’எந்தச் சூழலிலும் பெண், பலவீனமானவள், பாவம், பரிதாபம்; தவறே செய்தாலும் பெண் என்பதால் விட்டு விடலாம் என்றெல்லாம் சலுகைகள் கிடைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.’

அறிவு:

நமது அறிவு எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனுமான அறிவிற்கும் அனுபவமே அடிப்படை. அனுமான அறிவில், நாம் சாதாரண அறிவிலிருந்து பொது அறிவிற்கோ பொது அறிவிலிருந்து விசேஷ அறிவிற்கோ செல்கிறோம்.
மனம்:

மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும்.
பிறர்க்கு உதவுங்கள்:

நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
உண்மை:

உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும்.
அறிவு:
எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
கல்வித்திட்டம் :

இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
சமுதாயக் கட்டுப்பாடு :

மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான்.
வெற்றி வாழ்வு:

நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.
நம்மை நேசித்தல்


தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.
அன்பு

அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.
கருணை

கருணையே இனிமையான சொர்க்கம். மக்கள் அனைவரும் கருணை நிறைந்தவர்களாக மாறினால் பூமியே சொர்க்கமாகி விடும்.