மண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும்
வாழ்வார்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
சொந்த சகோதரர்
சொத்தினைத் தின்றிடும்,
பந்து மித்திரர்
பணப் பசி கொண்டிடும்,
வந்த புத்திரர்
வரவினை கணக்கிடும்,
இந்த உலகிலும் ………………………
உரிமைக்காக ஊண் , உயிர்
ஈந்த
உன்னதத் தலைவர் மண்டேலாவுக்கு
இதோ ஒர் இரங்கற் பா!
ஒன்பது என்பது
பெருக்கின் வர்க்கம்
பதினெட்டாம் ஆண்டு
பதினெட்டாம் தேதி
ஆடியில் பிறந்த
பெருக்கு - உம்மிடம்
இல்லை - தான் எனும் செருக்கு
இன வெறி ஆதிக்கம்
வைத்தது
இருபத்து ஏழு ஆண்டு
சிறை.
ஆனாலும் உலகு உம்மிடம்
கண்டதில்லை ஒரு கறை
ஆயுள் தண்டனை மீண்ட போது
உடல் எங்கும் கொண்டது
சுருக்கம்
ஆனாலும் நின் மனஉறுதி கண்டதோ
உருக்கின் இறுக்கம்.
கால் நடை மேய்த்த
நேரம் போக
சண்டை கற்றது கரம்
காலம் கருதா ஞால நலனுக்காய்
சட்டம் கற்றது
சிரம்.
வெள்ளை சிறையில்
தனிமை.
தனி ’மை’க் கொண்டு
இந்தக் கருமை எழுதிக்
கேட்டதோ உரிமை.
கேட்க
மறுத்ததால் மன்னிப்பு கூட
மண்டியிட்டது
மண்டேலாவிடம்
தென்ஆபிரிக்காவிற்கு
மட்டுமே அவர் அதிபர்
உலகிற்கோ அவர் என்றும்
ஆசிரியர்
’அமைதிவழியே அறவழி’ என்றும்
’செயலே சிறந்த சொல்’லென்றும்
உலகம் அவரிடம் கற்றதும் பெற்றதும் பலப்பல.
சித்திரவதைகள்
விசித்திர வதைகளான போதும்
ரத்தம் சிந்தாமல் சமாதானத்தையே
புன்னகையாக சிந்திய பெருமகன்
சாபங்களை வரங்களாக மாற்றும்
சித்து வித்தகன்
அமைதியின்
உருவே இன்று அமைதியானது
சுவாசத்தை காசம் உருக்கினாலும்
தேச நேசத்தில் நெல் அளவும்
அருகவில்லை
மனிதம் காத்ததால்
மகான் ஆனவர்
மனிதம் இன்று மருகி
வருவதால்
மரித்தாயின் மடி
தேடி மரித்தாரோ?
உலகுக்கோர் ஒளி தேடி
ஒளிந்தாரோ?
”ஆற்றா மாக்கள்
அரும் பசி களைவோர்
மேற்றே உலகின்
மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து
வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர்,
உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட
உரவோய்!”
சீத்தலைச் சாத்தனார் சொன்னது இது
”ஆற்றா மாக்கள் அரும் துயர் களைவோர்
மேற்றே உலகின்
மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து
வாழ்வோர்க்கெல்லாம்
உரிமை கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட
உரவோய்! என்போம் ”
வாழ்வாங்கு வாழ்ந்த நின் வெற்றுடல் நோக்கி !
மண்ணுலகு வாழும் வரை
மண்டேலாவும் வாழ்வார்!!
வெள்ளை சிறையில் தனிமை.
ReplyDeleteதனி ’மை’க் கொண்டு
இந்தக் கருமை எழுதிக்
கேட்டதோ உரிமை..."
-என்ற வரிகள் அருமையான கவித்துவம் கொண்டவை. வாழ்க அமரார் மண்டேலா!
நன்றி
ReplyDelete