Wednesday, December 18, 2013

சிவன் கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும்  சுருட்டப் பள்ளி

சந்திரிகா


பிரதோஷம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விரதம் தான் . இந்த விரதம் தோன்றக் காரணம் என்ன  தெரியுமா?

பிரதோஷ வரலாறு
தேவர்களும்,அசுரர்களும்மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக்கடைந்த போது தோன்றிய  அமிர்தம்  தேவர்களூக்கு வழங்கப் பட்டது தெரிந்ததே.அதில் எழுந்த விஷத்தினை பரம் பொருளான சிவன் தான் உண்டு கறை கண்டனானதும் தெரிந்ததே, திருக்கைலாயத்தில் சிவன் கோபத்தின் உச்சத்தில் செய்த சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. விஷ்ணு, பிரம்மா, பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன.

கடைசியில் சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டி வணங்குகிறார்சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லி கைலாயத்தில் நடனத்தை  நிறுத்தக் கோறுகிறார். சிவன், ‘நான் எங்கே போய் ஆடுவது?’ என்று கேட்க, ‘என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்என்று நந்தி சொல்கிறார்.

விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால்  நந்திக்கு உகந்தது பிரதோஷம். ‘திரயோதசிதினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என இதைக் கொண்டாடுகின்றோம்.

சிவன் பதினோராம்  பிறையாகிய ஏகாதசியில்  விஷம் உண்டார். மறு நாள்,பன்னிரண்டாம்  பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். பதின்மூன்றாம்  பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள்சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

எல்லா சிவன் கோவில்களிலும்  மாதமிரு முறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக  பிரதோஷம் கொண்டாடப்படுகிறது,

அந்த பிரதோஷ காலத்தில் தான் இன்னொன்றும் நிகழ்ந்தது. உண்ட விஷம் தொண்டையில் நின்றதால் சிவனுக்கு மயக்கம் ஏற்பட்டது.அதனால் அவர் மயங்கி உமை அன்னை மடியில் விழுந்தார்.இப்படி  பள்ளிகொண்ட கோலாத்தில் சிவன் காட்சி தரும் ஒரே திருத்தலம் தான் சுருட்டப் பள்ளி.

பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இந்த அதிசயத்தைப் பார்த்து வணங்கத் தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்து விட்டார்கள். அவர்களிடம் நந்தி பகவான், மயக்கம் தெளிந்தபின் பரமேஸ்வரனை வழிபடலாம் என்று அறிவுறுத்தினார்.
தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் இந்த மாலைக் காலத்தில்-சந்தியா நேரத்தில் எழுந்தருளினார். ஆனந்த நடனம் ஆடினார்.பிரதோஷ வழிபாடு முதன் முதலாக இந்த கோவிலில்தான் தோன்றியது.சிவபெருமான், இந்த தலத்தில் நடத்திய ஆனந்த தாண்டவம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.  

சுவாமி பெயர் பள்ளி கொண்ட ஈஸ்வரன் , அம்பாள் சர்வ மங்களாம்பிகை. சுருட்டப்பள்ளி சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டு. அதுபோல இங்குள்ள பார்வதி அமுதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார் சிவன் கிடந்த திருக்கோலத்தில்  பார்வதி மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். பள்ளிகொண்டீஸ்வரர் சிலை அமைப்பு ஆறு அடி நீளத்தில் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில்தேவர்கள், ரிஷிகள் தரிசனம் தருகின்றனர்.

சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் சுருட்டப்பள்ளி உள்ளது.

ஆலய அமைப்பு: 
இத் திருக்கோயிலை விஜயநகரை ஆட்சி செய்த ஹரிஹர புக்கா என்ற அரசர் கட்டினார்

கிழக்கு நோக்கிய சிறிய கோபுரம். மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் ஆலய நுழைவு வாயில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்களும் இறைவனின் திருமந்திரமான ஐந்து எழுத்துக்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

உள்ளே நுழைந்ததும் எதிரில் முதன் முதலின் நாம் காண்பது அம்பிகையின் சன்னதி. இங்கு ஈஸ்வரனும், அம்பிகையும், ஒரே கோவிலில் தனித்தனியான சன்னதிகளில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். பள்ளிகொண்டீஸ்வரரின் சன்னதி தனித்த திருக்கோவிலாக அமைந்துள்ளது.

அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்களாக, திருஉருவங்களை காணலாம்.

திருக்கல்யாண  திருத்தலம்

அம்பிகை இறைவனுக்கு வலது புறத்தில் கோவில் கொண்டுள்ளது தனி சிறப்பு அநேக கோவில்கள் அம்பிகை இறைவனுக்கு இடது புறத்தில் கோவில் கொண்டுள்ளதை காணலாம். வலது புறத்தில் அம்மன் கோவில் கொண்டுள்ளதால் இத்தலத்தை திருக்கல்யாண ஷேத்திரம் என கூறுவர். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இதன் பொருள்.

அம்பிகையின் கருவறைக்குள் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கக்கூடிய, நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க கூடிய காமதேனுவும், கற்பக விருட்சமும் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கிறார்.

 தாம்பத்ய தட்சணாமூர்த்தி:

சிவபெருமானின் அறுபத்து  நான்கு  திருமேனி வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம்  முப்பத்ஹ்டி இரண்ட்டாவது வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவ குருவான பிருஹஸ்பதி தட்சிணாமூர்த்தியின் அம்சமாகத் திகழ்வதாக ஐதீகம் .ஆனால் இஙு தாம்பத்திய தட்சணாமூர்த்தி திருவுருவம் எங்கும் பார்க்க முடியாதபடி அமைந்துள்ளது விசேஷம்.

எல்லா ஆலயங்களிலும் இருப்பது போல இங்கு தட்சணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் சூழ கல்லால மரத்தினடியில் அமர்ந்து காட்சி தரவில்லை. அதற்கு மாறாக பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவியை அனைத்த வண்ணம்சின்முத்திரையுடனும், ஞான சக்தியுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகையின் பெயர் கௌரியாகும்.


கோயிலின் பிற சிறப்புகள்

1.இங்குள்ள அனைத்து தெய்வங்களூம் தம்பதி சமேதராக காட்சி தருகினறனர்.

2. இராமர் இங்கு லிங்க வழிபாடு செய்தார்.

3. வால்மீகி முனிவர் வழிபட்ட லிங்கம் வால்மீகேஸ்வரர் என்ற பெயரில் இருக்கிறது.

4. 1976 இல் காஞ்சிப் பெரியவர் இங்கு தங்கி இருந்து அற்புதம் செய்தார்.அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தை தோண்ட சொன்னார். அந்த இடத்தில் நிறைய கால்தடங்களுடன் ஒரு கல் கிடைத்தது. அந்தக் கல்லில் உள்ள கால் தட பதிவுகள், ராமபிரானின் குழந்தைகளான லவ-குசாவினுடையது என்று மகாபெரியவர் அருளினார். காசிக்கு செல்ல விரும்புபவர்கள் சுருட்டப்பள்ளிக்கு சென்று வழிபட்டாலே காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று காஞ்சி பெரியவர் கூறி உள்ளார்.


 5. பார்வதி இருபுறமும் சூரிய, சந்திரர்கள் நிற்க, விஷ்ணு, பிரம்மா, லட்சுமி, மார்க்கண்டேயர், அகஸ்தியர், வால்மீகி, இந்திரன், நாரதர், முருகர், விநாயகர் ஆகியோரும் இந்த கோவிலில் உள்ளனர். இத்தகைய அம்சத்தை வேறு எந்த சிவாலயங்களிலும் காண இயலாது.



No comments:

Post a Comment