Sunday, January 19, 2014

பொங்கல் விழா படிக்க தமிழ் அவுஸ்திரேலியன்

பொங்கல் விழா
உழவர் திருநாள்
தை மாத முதல் நாளில்  பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் தமிழர் திருநாளாக போற்றப் படும் பெரு விழாவாகும்.. ’உழவுக்கும் தொழிற்கும் வந்தனை செய்வோம்’ பாரதி வாக்கிற்கு வடிவம் தரும் நாள் இது,

பொங்கல் என்றால் பொங்கி  வழிதல் என்ப பொருள் படும். பொங்கல்  நான்கு நாட்கள் கொண்டாடப் படும். அவை
·         போகி
·         பொங்கல்
·         மாட்டுப் பொங்கல்
·         காணும் பொங்கல்  ஆகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று , வயலில் கதிர்த்த பயிர்கள் அறுவடையைக் குறித்து அவற்றை விளைத்த உழவர்களைப் போற்றும்  முகமாக பொங்கல் உழவர் திரு நாளாகப் புகழுடையது ஆகும்.
அறுவடைக்கு காரணமான இயற்கைக்கும், அதற்காகப் பயன் பட்ட உழவு மாடுகள், வீட்டில் உள்ள பால் தரும் பசுக்கள்  மற்றும் கலப்பை போன்ற கருவிகள் அனைத்தையும் வணங்கும் திருநாள் பொங்கலாகும்.
’ஒளியின்றி இவ்வுலகு இல்லை’ என்பது அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உலகம் போற்றும் உண்மையாகும். அந்த ஒளியினை வழங்கிய சூரியனுக்கு நன்றி கூறும் தினம் பொங்கல்  தினமாகும்.  அன்று சூரியனுக்கு பொங்கல் படைத்து மகிழ்வர்.
சூரியனுக்குப் பொங்கல்
வயலில் விளைந்த அரிசியை புதுப்பானையில் இட்டு  கருப்பம் சாறு,  , பசுவின் மடி சுமந்த பால்,  நெய்,  மழையில் நிறைந்த நீர் , இப்படி இயற்கையின் கூறுகளை இணைத்து சுவையான பொங்கலைப் படைப்பர். வீட்டு முற்றத்தில் அழகான  கோலம் இட்டு அதன் நடுவில் புது மண் பானையை  வைப்பர். . புதிய பானைக்கு புதியமஞ்சளைக் காப்பாக அணிவர். பொங்கல் பொன்கி வரும் போது மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று கூறி சூரியனுக்கு முதல் படைப்பை தருவார்கள்.புதிய காய்கறிகளையும் சமைத்து தலை வாழையிலையில் படைப்பர். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்டு வணங்குவார்கள்.
போகி
பொங்கலுக்கு முதல் நாள் தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளாகும். அன்று 'பழையன கழித்து, புதியன புகுத்லும்’ என்ற  பழக்கமாக பழையவற்றையும், உபயோகமற்றவையும் கழிந்து போகி கொண்டாடி மகிழ்வர்.இதற்கு காரணம் பூச்சி களையும் நோக்கமே ஆகும். மனதில் உள்ள  தீய எண்ணங்களும், தவறான உணர்வுகளூம்  நீக்கப்படவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். "போக்கி' என்ற சொல் ம்ஃஅருவி போகி என்றானதாகவும் சொல்வார்கள்.

மாட்டுப் பொங்கல்
தைப்பொங்கல் நாளின் மறுநாள்  மாட்டுப் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படும் வழக்கமாகும். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு ஆவினம் வணங்கப்படும். உழவுக்கும், பால் தரும் பட்டிக்கும் உரிய ஆவினங்களுக்கு நன்றி சொல்வதாகும். மாடுகளி நீராட்டி மாடுகளின் கொம்புகளை சீவி ,  பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் அலங்கரிப்பர்.

காளை பிடிக்கும் வீர விளையாட்டு
தமிழகத்தின்   தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் வீர விளையாட்டு  ஜல்லிக்கட்டு என இந்நாளில் நடைபெறும். வீர சாகசப் போட்டிகள்  பல இடம் பெறும்.

காணும் பொங்கல்
பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா காணும் பொங்கல் ஆகும். கணுப் பண்டிகை என்றும் கன்னிப் பொங்கல் கூறப் படும் இன் நாளில்  உற்றார், உறவினர், சுற்றுலா இடங்கள்   மற்றும் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன நடக்கும்.

வட மாநிலங்களில்  மற்றும் சிங்கள மக்கள் இந்   நாளை  மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் அழைக்கின்றனர்

ராஜ கிரகம்” என்று அழைக்கப்படும் சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும்.  உத்தராயணத்தில் சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தினை(தட்ஷிணாயன தட்ஷிணம் தென் – அயனம் பயணம் )   மாற்றி மீண்டும்  வடக்கு நோக்கி ( உத்தராயணயனம் - உத்தரம்  வடக்கு,  அயனம் பயணம்) - நகரும் மாதமான மகர மாதம் முதலில் வருகிறது. இதன் முதல் நாள், “மகர சங்கராந்தி” என்றும், ‘பொங்கல்’ என்றும் நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. உத்தராயணயனம் -  புண்ணிய காலமாகும். பீஷ்மர் இக்கலம் வரை காத்து இருந்தே இறந்தார் என்கிறது பாரதம்.

தை மாதம் முதல் தேதியான மகர சங்கராந்தி தினத்தன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்படுகிறார்கள் மன்னார்குடி என்ற வைணவத் தலத்தில் சங்கராந்தி முதல் "ஸங்க்ரமண உத்ஸவம்' சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. மகர சங்கராந்தியன்றுதான் மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்தது. சபரிமலையில் ஐயப்பனுக்குக்குரிய "மகரஜோதி தரிசனம்' காண்பதும் இந்த புண்ணிய தினத் தன்றேயாகும்.

இலக்கியத்தில் பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்,
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை யும்,
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்,
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்,
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் பாராட்டும் திரு விழா இது.





இரத்தினகிரி வாழும் பாலமுருகன்!

இரத்தினகிரி வாழும் பாலமுருகன்!
சந்திரிகா





முருகன் என்றாலே அழகன் என்று பொருள்.சிவந்த மேனி கொண்ட முருகனை , குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டு அருள் பாலிக்கிறான் என்பது தமிழர் நம்பிக்கைநமது உடலின் உச்சந்த்தலையில் இருஇக்கும் சஹஸ்ரஹாரத்தினி குறிக்கும் முகமாகவே முருகன் மலை உச்சியில் உறைகிறான்.முருகனின் ஆறு முகங்கள் ஆறு சக்கரங்கள் ஆகும்.
  'இச் சிவ பதை இரத்தி வெற்பதனில்
     திகழ் மெய்க் குமரப் பெருமாள்'
எனப் போற்றும் முருகன் பேரொளிப் பிழம்பாக நின்று பக்தர்களைக் காப்பன் என்கிறது இப்பாடல் .

அவன் அருளாட்சி செய்யும் ஆறுபடை வீடுகளைத் தவிர அநேக திருக்கோயில்களில் பக்தர்கள் நலம் காக்க நிற்கிறான்.
    
தமிழ்க்கடவுள் முருகனுக்கு தனி மனிதர் ஒருவர் தன் சொந்த முயற்சியில் திருக்கோயில் கட்டி, குளம் வெட்டி, சேவைகள் புரிந்திருக்கும் அதிசயம் தமிழகத்தில் நடந்துள்ளது.


அமைப்பு
சென்னையிலிருந்து சில மைல்கள் தொலைவில் வேலூருக்கு அண்மையில் அமைந்துள்ளது இரத்தினகிரி. செம்பொன் பவள செவ்வேள் உறையும் திருத்தலம் இரத்தினகிரியில் கீழ் மின்னல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்.

இருபதாண்டுகளுக்கு முன் இத்தலம் இருண்டு கிடந்தது. தெருவை ஒட்டியிருந்த குன்று வேலையற்ற வீண்பொழுது போக்கிகளின் தஞ்சமாக இருந்தது.
   
இன்று விபூதியும், சந்தனமும் மணக்கும் அருள் தலமாக விளங்குகிறது இவ்விடம்.


வரலாறு

தவத்திரு மௌனகுரு சுவாமிகள்
முன்பு முருகன் மழையிலும் வெயிலிலும் வாடி நின்றபோது, மலையேறி வந்த ஒருவர் அங்கு திருவிளக்குகூட எண்ணெயின்றி இருப்பது கண்டு முருகனைச் சாடினாராம். முருகனுக்கு விளக்கு ஏற்ற முடியாத ஆற்றமையால் மயங்கி விழுந்தவர் எழுந்த போது உலகம் மறந்து முருகன் உணர்ந்தவராக விளங்கினார். அந்தச் சாடலே இறுதியாகி அதுவரை உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அந்த மனிதர் மகானாகி விட்டார். அவர் தான் தவத்திரு மௌனகுரு சுவாமிகள். அன்று சிரித்த அதே சிரிப்பு உதட்டிலும் கண்களிலும் நடமாட, சடை விழுந்த முடியும், முகத்தை மறைக்கும் தாடியும், இடையில் ஒற்றைத்துண்டுமாக காட்சியளிக்கிறார்.


இவரது பணியால் திருவிளக்கேற்றவும், பூஜை புனஸ்காரங்களுக்கு வழியின்றியும் அவதிப்பட்ட ஒரு குடிலின் நிழலில் குமரக் கடவுள் குடி கொண்டிருந்தான் அன்று. இன்று மலை மேலே விண் முட்டும் கோபுரங்களும், கர்ப்ப கிருகமும், மலையேற வசதியான படிகளும் மலையடிவாரத்தில் தொண்டு அமைப்புகள், திருமணக் கூடம், பள்ளிக்கூடம், திருக்கோயில் அலுவலகம், மருத்துவமனை, திருக்குளம், பக்தர்கள் தங்கும் குடில்கள் என்று ஒரு குறுங் கிராமமாக இவ்விடம் காட்சியளிக்கிறது.

     இருபது ஆண்டுகளுக்கு முன்பு உடைகளையும் அத்தோடு இல்லற வாழ்க்கையையும் விலக்கி விட்ட இவருக்கு பாலமுருகனடிமை என்றே திருநாமம் வழங்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் நடப்பதில்லை
இங்குள்ள இறைவன் பால முருகன், வேலும் கொடியும் இரு கைகளில் தாங்கி மாறில்லா வள்ளியும், யானை தன் அணங்கும் இரு புறமும் நிற்க முகமெலாம் மலர, பக்தர் மனம் குளிர முருகன் மயில் வாகனனாக உறைகிறான். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.

அவன் அடியவரான பெரியவரோ கண்களில் தீட்சண்யத்துடன் வாய் மௌனித்து அவன் பாதத்தில் வருவோர்க்கெல்லாம் அருள் வாக்கை எழுதி வழங்கி பக்தர் குறை தீர்க்கிறார். இருபதாண்டு கால மௌனத் திரைக்குப்பின் எழுத்தால் இறைவன் வாக்கினை இயம்பி வருகிறார். குறையோடு வருபவரின் கேள்விகளுக்கு கனிவோடு குறிமேடை பதிலை எழுதி விபூதி மணக்க அள்ளித் தருகிறார். முருகனடிமை சொன்னதை முருகனே சொன்னதாகவே சிரமேற் கொண்டு நிறைவோடு திரும்புகின்றனர் மக்கள்.



சன்னதிகள்
உற்சவர் முருகன் சன்னதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் அமர்ந்திருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் அம்பாளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. வராஹிக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.


திருக்குளம்
ஆறுமுகனின் தீர்த்தத்துக்கு (ஷட்கோண) அறுகோண வடிவில் அமைக்கப்பட்டள்ள திருக்குளத்தின் அழகே அழகு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆறின் மகிமை
இங்குள்ள  முருகனுக்கு பூஜையின்போது  முருகனின் எண்ணான ஆறு என்ற எண்ணிக்கை வருமாறு  மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பப்பாகும்.

அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்குத்தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர்.

அருணகிரியார்  பாடினார்
அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத மாமணி, வித்தகர்'' எனச் சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகையன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர்


பணிகள்
  இன்று இரத்தினகிரி மலையைச் சுற்றி சுமார் எழுபது இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள குடியிருப்புக்களும், குளமும், அணி கலனும், பொருட்களும், இன்ன பிறவும் நிறைந்துள்ளன.

முருகன் உலவி வர தங்கரதமும், வெள்ளி மயிலும் அலங்காரமாக உள்ளன. ஆண்டு வருமானமாக சுமார் இரண்டரை இலட்சம் வசூலாகி பல திருப்பணிகளுக்காக செவ்வனே செலவிடப்படுகின்றது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்ந்த பெரியவர் மக்கள் வசதிக்காக பல பொதுத் தொண்டுகளை கோயில் பரிபாலனத்துடன் இணைத்து நடத்தி வருகிறார். கல்விப் பணியும், மருத்துவப் பணியும் இதில் குறிப்பிடத்தக்கன.

திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு சுமார் ஆறு லட்ச ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வருகிறது. திருமுருகன் திருமணக்கூடம் புதுமணத் தம்பதிகளுக்கு பெருவாழ்வு அளிக்கிறது. இந்த மருத்துவமனை சிற்றூர்வாசிகளை வாழ வைக்கிறது. நிபுணர்களால் நிர்மானிக்கப்பட்டு பல இலட்ச ரூபாய் செலவில் சத்திர சிகிச்சை வசதியுடனும் பல படுக்கைகளுடனும் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை இங்குள்ள பல கிராமங்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது.

காடாய் கிடந்த ஊரை தன் ஆட்சியின் கீழ் சுபிட்சம் அடையச் செய்ய அருட்கடாட்சத்தினால் ஒருவரை ஆட்கொண்டு அவர் மூலமாக அவ்வூரை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பால முருகன் திருவிளையாடலை என்னவென்பது?



Saturday, December 28, 2013

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! 
இவள் மண்டையில் இருப்பது களி மண்ணா?
சுப்பராக ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு அப்போது தான் எழுந்தேன். பக்கத்து வீட்டு மிலன்பென் கையை ஆட்டினாள். ஹாய் என்று நானும் பதிலுக்கு கை ஆட்டினேன். மிலன்பென் என் குஜராத்தி நண்பி.நேரம் கிடைக்கும்  போது கூடிக்கதைப்போம்.

என்ன இன்று வெளியில் போகவில்லையா?”

இல்லை என்று தலையாட்டினேன்.

கோவிலுக்குப் போகலாமா? என்று கேட்டாள்.

சரியென்று சொன்னேன்.

எந்த கோவிலுக்கு என்று கேட்டாள்

எங்கு போகலாமென்றுஎன் பதில் கேள்வி.

வுல்லொங்கொங்கில் ஒரு கோவில் இருக்கிறதாமே அங்கு போகலாமா?” என்றாள்.

அதற்கென்ன போகலாம்.’அங்கு தான் பெருமாள்”’ என்று என் மத அறிவை மடை திறக்கத் தொடங்கினேன்.

என்னை முடிக்க விடவில்லை. “என் நண்பர்கள் எல்லோரும் அங்கு தான் படையெடுப்பார்கள்…..” தொடர்ந்தாள்.

அவ்வளவு பக்தியா? என்று நான் வியந்து முடிக்கும் முன் அவள் சொன்னது.

அங்கு தான் சிட்னிலேயே சிறந்த மசால் தோசை, குறைந்த விலையில் ,நிறைந்த சுவையில் கிடைக்குமாம்.கேள்விப்பட்டிருகிறேன். அந்த சாம்பார் மணக்குமாமே. மத்தியானத்தில் நல்ல சாப்பாடும் கிடைக்குமாம்.”

மிலன்பென் வாயிலிருந்து நயகாரா ஊற்றெடுத்துக் கொண்டு இருந்தது.எனக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.


பெருமாளே! இவள்போல இருப்பவர்கள்  மண்டையில் மசாலா வைக்க மாட்டாயாகோவிலென்பது வழிபாட்டு தலமென்பது மாறி வடைக்கடையாக மறி விட்டதே என்று “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா இவள் மண்டையில் இருப்பது களி மண்ணா? என்று  தலையில் அடித்துக் கொண்டேன்.
கணினித் தமிழ்

இக்கட்டுரை உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் (2013)  சமர்ப்பிக்கப்பட்டதாகும்.


இதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கணினி வழித் தொடர்பு அனைத்துத் தடைகளையும் தகர்த்தது.

கணினி பெரிய அளவிலிருந்து சுருங்கி, மேசைக்கு எட்டியதும், அலுவலக பயன்பாடுகளைத் தாண்டி தனி நபர் பயனுக்கும் தாவியது,அல்டஸ் (Aldus) பக்க அமைப்பு மென்பொருளும்,  விண்டோஸ் 3.1 செயலியும் சங்கேத மொழியால் (coding) உள்ளீடு செய்யும் தேவையை குறைத்து எளிய ஆங்கிலத்தோடு கூடிய பார்வை சார்ந்த  உள்ளீட்டு முறையை அறிமுகப் படுத்தியது.



எழுத்துருக்கள்

இந்த மாற்றங்கள் தமிழ் அச்சுத்துறைக்கு பெரும் மாற்றத்தை அறிமுகப் படுத்தியது.அச்சகத்துறையும் பெரிய அச்சுக் கருவிகளை பயன்படுத்துவதை  விட்டு சிறிய  அச்சுத் தேவைகளுக்கு  மேசை அச்சகங்களை பயன் படுத்தத் தொடங்கின.பதிப்புத்துறை, அதைச் சார்ந்த மற்ற ஊடகங்களையும் மாற்றத் தொடங்கியது. விளம்பரம், தொலைகாட்சி, சினிமா போன்றவைகளும் கணினித் தமிழால் பயன் பெறத்தொடங்கின.



இலங்கையில் 1983 ஜுலைக் கலவரம் தமிழர்களுக்குத் தீங்காக அமைந்தாலும் கூட, உலகளாவிய ரீதியில் தமிழர்கள் பரந்து வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது என்றால் மிகை ஆகாது. தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது கலையும் கலாச்சாரமும். தொடர்பியல் கலைக்கும் கலாச்சாரத்துக்கு மிக இன்றியமையாதது.இதனால் தமிழர்களின் உலகளாவியத் தொடர்பியல் தேவை அதிகரித்தது. அதற்கு கணினி அத்தியாவசியமாயிற்று.





மேசைக் கணினி மடிக் கணினி ஆனது, பின் அலைபேசியின் அவதாரங்கள்இணையத்தின் வரவு,  தமிழ் சமூகத்தின் உலக அளவிலான விரிவாக்கல், தமிழில் வலை மனைகளின் அறிமுகம் எனக் கணினி சார்ந்த தமிழின் வளர்ச்சி வேறு ஒரு பரிமாணத்தைத் தொட்டது.



இதனால் எழுத்துருக்கள் விதவிதமாக வரவேண்டிய தேவை உருவானது.1980 களில் முதலில் தோன்றிய மென்பொருள் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) என்பதாகும்.கனடாவை சேர்ந்த  கலாநிதி ஸ்ரீநிவாசன் அவர்களுடைய முயற்சியால் இது உருவானது. டாஸ் (Dos)  இயங்கு தளத்தில் இது பயன் படுத்தப்பட்டது.தொடர்ந்து பெங்களூர்  வேர்ட் லோர்ட் நிற்வனம் 'டாஸ்' இயக்க 'வேர்ட்’(word) மென்பொருள்  மூலம் பாரதி என்ற தமிழ் மென்பொருள் தொகுப்பினைக் கொண்டு வந்தது.



அதன் வழித்தோன்றலாக ஸ்ரீநிவாசன் வடிவமைத்த (ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து ) 'ஆதவிண் வந்தது.தொடர்ந்து பாரதி வந்தது.ஆப்பிள் கணினிகள் பிரபலமாகத்தொடங்கிய கால கட்டத்தில் அல்டஸ் பக்க அமைப்புக்கு ஏற்றபடி பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தினார். யூனிக்ஸில் தமிழுருக்கள் கலாநிதி  பால சுவாமிநாதன் மற்றும்  கலாநிதி ஞானசேகர் சகோதர்களால் அறிமுகப் படுத்தப் பட்டன. கனடாவில் கலாநிதி விஜயகுமார் ராகங்களின் பெயரில் பல எழுத்துருக்களை அறிமுகப்படுத்தினார். கலாநிதி குப்புசாமி அவர்கள் உருவாக்கிய  எழுத்துருக்களும், கலாநிதி கல்யாணசுந்தரம் உருவாக்கிய மயிலை மற்றும் பாமினி போன்றவையும் பரவலாக பன்படுத்தப்பட்டன.

தினமலர் ஆசிரியர்  இரா. கிருஷ்ணமூர்த்தி தன் சொந்த முயற்சியில், 'புனே மொடுலர்' நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார்.



தமிழ் பத்திரிகை நிறுவனங்கள் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை பயன் படுத்தின.இதில் ஒரு சிக்கல் எழுந்தது. பாமினியில் எழுதப்பட்ட ஓர் ஆவணத்தை மற்றவர் அவரது கணினியில் பாமினி எழுத்துரு இருந்தால் மட்டுமே  படிக்க முடியும். பொதுவான ஒரு தர நிர்ணயம் எழுத்துருக்களை நெறிப்படுத்துவதற்காக இருக்கவில்லை. ஓர் ஆவணத்தை  தரவிறக்கம் செய்தால் எழுத்துருக்கள் வித்தியாசப் பட்டன.மின்னஞ்சல் அனுப்புவதில் இந்த வித்தியாசம் குழப்பங்களை உண்டு பண்ணியது. அனுப்புனர் , பெறுநர் இருவருமே ஓரே எழுத்துருவை தங்கள் கணினியில் வைத்திருக்காவிட்டால் மின்னஞ்சலைப் படிக்கமுடியாது.

1990 களில் இந்த சிக்கலை நீக்க மதுரை என்ற  மென்பொருளை கலாநிதி  பால சுவாமிநாதன் உருவாக்கி  ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் உருவாக்கினார். AASCI முறையில் எந்த ஒரு எழுத்துருவையும் சாராமல் இந்த மென் பொருள் இயங்கியது சிறப்பாகும்.



மின்னஞ்சல்

மின்னஞ்சல் தொடர்பாடல் மிக முக்கியமாக கருதப்பட்ட கால கட்டத்தில் மலேசியா,சிங்கப்பூர் தமிழர்களின் முயற்சிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. திரு. முத்து நெடுமாறன், முரசு நிறுவனத்தினிலிருந்து முரசு அஞ்சலைக் கொண்டுவந்தார். இதில் எழுத்துரு, சொல் திருத்தி, மின்னஞ்சல் செயலி, விசைப்பலகை என்பனவும் வேறு சில சேவைகளும் உள்ளடக்கப்பட்டன. தட்டச்சு அறிவு இல்லாமலேயே எழுத்துப்பெயர்ப்பு மூலம் கணினியில் தமிழில் எழுதுவது இலகுவானது. தமிழை எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள் கூட தமிழில்  தட்டச்சு செய்யும் வாய்ப்பை இது உருவாக்கியது.

ஒற்றைக் குறியீட்டு அமைப்பு (Unicode)

மொழி ஆர்வலர்களும், கணினித்துறை விற்பன்னர்களும், சர்வதேசக் கணினி நிறுவனங்களூம் பல மொழி புழங்கும் நாடுகளைச் சேர்ந்த  பல்கலைக் கழகங்களும் இணைந்து ஒற்றைக் குறியீட்டு - Unicode consortium ( http://www.unicode.org/) என்பதனை உருவாக்கினர். ஒற்றைக் குறியீட்டு அமைப்பு பொதுவான ஒரு தர நிர்ணயம் ஒன்றை அறிமுகப்படுத்தி உலக மொழிகள் அனைத்தையும் தரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது.அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்துவதனால் உலக அளவில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதை ஏற்றுக் கொள்ளும் முகமாகத் தமிழக அரசு நடத்திய தமிழ்நெட்99 ஆய்வு மாநாட்டில் ஒற்றைக் குறியீட்டுமுறை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.



தமிழ் கணினித்துறைக்கு பங்காற்றியுள்ளவர்கள்

தமிழ் கணினித்துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளவர்களில் கலாநிதி   வா.செ. குழந்தைசாமி, கலாநிதி மு. ஆனந்தகிருஷ்ணன், பேராசிரியர்கள் நா. கோவிந்தசாமி, வி. கிருஷ்ணமூர்த்தி, பொன்னவைக்கோ, நா. தெய்வசுந்தரம், குப்புசாமி, மொழியியலாளர் எம். கணேசன் மற்றும் மென் பொருள் தயாரிப்பாளர்களான முத்தெழிலன், கல்யாணசுந்தரம், அன்பரசன், இளங்கோவன், செல்லப்பன், மனோஜ் அண்ணாத்துரை, ஆண்டோ பீட்டர் ,மற்றும் தமிழரல்லாதவர்களில் பேராசிரியர் ஹெரால்ட் ஷிப்மேன், சீன கணிப்பொறியாளர் ஜேம்ஸ் செங் ஆகியோரும்  அடங்குவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  பாலா பிள்ளை 'தமிழ் நெட்' என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழ் வளர்க்கும்  முயற்சிகளுக்கான முன்னோடியாக இருக்கிறார்.

தமிழ் இணைய மாநாடுகள்

தமிழில் கணினிதொடர்பாக மொழி ஆர்வலர்களும் கணினித்துறை விற்பன்னர்களும் பெரு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளமை போற்றுதற்குரிய ஒரு விடயமாகும்.இதற்காக நடத்தப்பட்ட மாநாடுகளில் முக்கியமானவை:-

·        1994 இல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழும் கணிப்பொறியும்கருத்தரங்கு.

·        1997 மே மாதம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினி மற்றும் இணைய மாநாடு தமிழ் நெட் 97 கணியன்மென்பொருள் புகழ் நா. கோவிந்தசாமியின் முயற்சியில் நடத்தப்பட்டது. இம்மாநாடு கணித்தமிழ் வளர்ச்சியிலும் , தமிழ் வரலாற்றிலும் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியது.

·        1999 இல் சென்னையில் தமிழ்நெட்99 இணையம் தொடர்பான  சர்வதேச மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.

இவை தவிர இதுவரை 12 தமிழ் இணைய மாநாடுகள் நடந்திருக்கின்றன. 13வது தமிழ் இணைய மாநாடு இந்த ஆண்டு மலேசியாவில் நடக்கிறது.



இணையம்

முதல் தமிழ் வலைப்பக்கத்தை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி 1995 இல் வடிவமைத்தார். இணையம் வளர்ந்ததோடு, தமிழ் செயலிகள், நாளிதழ்கள், நூல்கள், சஞ்சிகைகளின் மின் பதிப்புகள், வானொலிகள், மொழி வளர்க்கும் கருவிகள், தொலைகாட்சிகள், சமூக மற்றும் தனி நபர் வலைமனைகள், தேடு பொறிகள், அகராதிகள்,பதிவுகள், முகநூலில் தமிழ் போன்ற உபரி அம்சங்களும் வளர்ச்சியடைந்தன.உலகின் மிகப்பெரிய இணைய தேடல் இயந்திர இணையத்தளமான 'கூகுள்', தேடு கருவியில்  தமிழிலே தட்டச்சிட வசதி வந்துள்ளது. இணையத்தில் தமிழ் பக்கங்களை தேடுவதற்கும், ஜிமெயிலில் தொடர்பு கொள்வதற்கும் இது பயன் தருகிறது. இன்னொரு தேடல் இயந்திர இணையத்தளமான 'யாஹூ' வும் தமிழைத் தங்கள் வலைமனைக்களில்  பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றன



அலைபேசிகள்

மடியில் இருந்த கணினி கைக்குத் தாவியது. கணினியின் அம்சங்களுடன் கூடிய அலைபேசிகள் அதை சார்ந்து வந்த குளிகைக் கணினிகள் இணையம் தொடர்பான அனைத்து அம்சங்களுக்கும் ஈடு கொடுக்கத் தொடங்கின. இதற்கேற்றவாரு தமிழும் தன்னைத் தயார் செய்து கொள்ளவேண்டி இருந்தது. ஃபோன்,  பேட் , அன்ரொய்ட் வருகையால்,அவற்றின் இயங்குதளங்களுக்கு ஏற்றபடி செயலிகளையும் தேடுபொறி, பக்கங்கள், எழுத்துருக்கள் இன்ன பிறவும் தமிழில் அமைய வேண்டியதாயிற்று.இதனால்தொழில் நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக தமிழ் வளர்ச்சியும் இணையத்துடன் இணைந்து கொண்டது.



இணையத் தமிழ் தகவல் தொடர்பில் தனி நபர்களுக்கிடையே மட்டும் நடக்கும் மின் அஞ்சல், அரட்டை போன்ற தனி நபர் நிலைப்பட்ட தொடர்புகள், அடுத்து, மின்னஞ்சல் குழுக்கள், செய்திக் குழுக்கள் போன்ற குழு நிலைப்பட்ட தொடர்புகள் மற்றும்  பரவலாகத் தகவல் பெறுநர்களுக்காக நடத்தும் வலைமனைக்கள் , மின் அஞ்சல், மின் இதழ்கள் போன்ற வெகு சன ஊடகங்கள் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிப்பதனால் இணையத் தமிழ் நின்று நிலைக்கும் என்பது உறுதியாகும்.



ஆனாலும் தமிழ் ஆசிரியர்களும், தமிழ் அறிஞர்களும் தமிழில் முழுத்தொடர்பாடலையும் செய்யும் சூழ்நிலையில் இருப்பவர்களும் இன்னும் தமிழில் தட்டச்சுக்கு கணினியைப் பயன் படுத்தாதது கவலைக்குரியதாகிறது.இந்தக் குறைநிவர்த்தி செய்யப் பட வேண்டும்.ஏனென்றால் எதிர் காலத்தில் அச்சில் வரும் ஆவணங்கள்  கணினி சார்ந்த மின்னியல் ஆவணங்களினால் பிரதீயீடு செய்யப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.



சில பரிந்துரைகள்:

·        தமிழர்கள் அனைவரும் தமிழில் எழுதவதற்குக் கணினியை பயன் படுத்தவேண்டும்.



·        தமிழ் சார்ந்து பணி புரிபவர்கள் குறிப்பாக ஆசிரியர்கள்,தமிழறிஞர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் தமிழில் எழுதவதற்குக் கணினியை பயன் படுத்தவேண்டும்.



·        உயர் கல்வியில் தமிழ் படிப்பவர்களுக்கு கணினி ஒரு கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.



·        கணினியை பயன் படுத்தி தமிழில் எழுதவதற்கு தகுந்த பயிற்சி அளிக்க முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.