Sunday, January 19, 2014

இரத்தினகிரி வாழும் பாலமுருகன்!

இரத்தினகிரி வாழும் பாலமுருகன்!
சந்திரிகா





முருகன் என்றாலே அழகன் என்று பொருள்.சிவந்த மேனி கொண்ட முருகனை , குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டு அருள் பாலிக்கிறான் என்பது தமிழர் நம்பிக்கைநமது உடலின் உச்சந்த்தலையில் இருஇக்கும் சஹஸ்ரஹாரத்தினி குறிக்கும் முகமாகவே முருகன் மலை உச்சியில் உறைகிறான்.முருகனின் ஆறு முகங்கள் ஆறு சக்கரங்கள் ஆகும்.
  'இச் சிவ பதை இரத்தி வெற்பதனில்
     திகழ் மெய்க் குமரப் பெருமாள்'
எனப் போற்றும் முருகன் பேரொளிப் பிழம்பாக நின்று பக்தர்களைக் காப்பன் என்கிறது இப்பாடல் .

அவன் அருளாட்சி செய்யும் ஆறுபடை வீடுகளைத் தவிர அநேக திருக்கோயில்களில் பக்தர்கள் நலம் காக்க நிற்கிறான்.
    
தமிழ்க்கடவுள் முருகனுக்கு தனி மனிதர் ஒருவர் தன் சொந்த முயற்சியில் திருக்கோயில் கட்டி, குளம் வெட்டி, சேவைகள் புரிந்திருக்கும் அதிசயம் தமிழகத்தில் நடந்துள்ளது.


அமைப்பு
சென்னையிலிருந்து சில மைல்கள் தொலைவில் வேலூருக்கு அண்மையில் அமைந்துள்ளது இரத்தினகிரி. செம்பொன் பவள செவ்வேள் உறையும் திருத்தலம் இரத்தினகிரியில் கீழ் மின்னல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்.

இருபதாண்டுகளுக்கு முன் இத்தலம் இருண்டு கிடந்தது. தெருவை ஒட்டியிருந்த குன்று வேலையற்ற வீண்பொழுது போக்கிகளின் தஞ்சமாக இருந்தது.
   
இன்று விபூதியும், சந்தனமும் மணக்கும் அருள் தலமாக விளங்குகிறது இவ்விடம்.


வரலாறு

தவத்திரு மௌனகுரு சுவாமிகள்
முன்பு முருகன் மழையிலும் வெயிலிலும் வாடி நின்றபோது, மலையேறி வந்த ஒருவர் அங்கு திருவிளக்குகூட எண்ணெயின்றி இருப்பது கண்டு முருகனைச் சாடினாராம். முருகனுக்கு விளக்கு ஏற்ற முடியாத ஆற்றமையால் மயங்கி விழுந்தவர் எழுந்த போது உலகம் மறந்து முருகன் உணர்ந்தவராக விளங்கினார். அந்தச் சாடலே இறுதியாகி அதுவரை உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அந்த மனிதர் மகானாகி விட்டார். அவர் தான் தவத்திரு மௌனகுரு சுவாமிகள். அன்று சிரித்த அதே சிரிப்பு உதட்டிலும் கண்களிலும் நடமாட, சடை விழுந்த முடியும், முகத்தை மறைக்கும் தாடியும், இடையில் ஒற்றைத்துண்டுமாக காட்சியளிக்கிறார்.


இவரது பணியால் திருவிளக்கேற்றவும், பூஜை புனஸ்காரங்களுக்கு வழியின்றியும் அவதிப்பட்ட ஒரு குடிலின் நிழலில் குமரக் கடவுள் குடி கொண்டிருந்தான் அன்று. இன்று மலை மேலே விண் முட்டும் கோபுரங்களும், கர்ப்ப கிருகமும், மலையேற வசதியான படிகளும் மலையடிவாரத்தில் தொண்டு அமைப்புகள், திருமணக் கூடம், பள்ளிக்கூடம், திருக்கோயில் அலுவலகம், மருத்துவமனை, திருக்குளம், பக்தர்கள் தங்கும் குடில்கள் என்று ஒரு குறுங் கிராமமாக இவ்விடம் காட்சியளிக்கிறது.

     இருபது ஆண்டுகளுக்கு முன்பு உடைகளையும் அத்தோடு இல்லற வாழ்க்கையையும் விலக்கி விட்ட இவருக்கு பாலமுருகனடிமை என்றே திருநாமம் வழங்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் நடப்பதில்லை
இங்குள்ள இறைவன் பால முருகன், வேலும் கொடியும் இரு கைகளில் தாங்கி மாறில்லா வள்ளியும், யானை தன் அணங்கும் இரு புறமும் நிற்க முகமெலாம் மலர, பக்தர் மனம் குளிர முருகன் மயில் வாகனனாக உறைகிறான். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.

அவன் அடியவரான பெரியவரோ கண்களில் தீட்சண்யத்துடன் வாய் மௌனித்து அவன் பாதத்தில் வருவோர்க்கெல்லாம் அருள் வாக்கை எழுதி வழங்கி பக்தர் குறை தீர்க்கிறார். இருபதாண்டு கால மௌனத் திரைக்குப்பின் எழுத்தால் இறைவன் வாக்கினை இயம்பி வருகிறார். குறையோடு வருபவரின் கேள்விகளுக்கு கனிவோடு குறிமேடை பதிலை எழுதி விபூதி மணக்க அள்ளித் தருகிறார். முருகனடிமை சொன்னதை முருகனே சொன்னதாகவே சிரமேற் கொண்டு நிறைவோடு திரும்புகின்றனர் மக்கள்.



சன்னதிகள்
உற்சவர் முருகன் சன்னதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் அமர்ந்திருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் அம்பாளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. வராஹிக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.


திருக்குளம்
ஆறுமுகனின் தீர்த்தத்துக்கு (ஷட்கோண) அறுகோண வடிவில் அமைக்கப்பட்டள்ள திருக்குளத்தின் அழகே அழகு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆறின் மகிமை
இங்குள்ள  முருகனுக்கு பூஜையின்போது  முருகனின் எண்ணான ஆறு என்ற எண்ணிக்கை வருமாறு  மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பப்பாகும்.

அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்குத்தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர்.

அருணகிரியார்  பாடினார்
அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத மாமணி, வித்தகர்'' எனச் சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகையன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர்


பணிகள்
  இன்று இரத்தினகிரி மலையைச் சுற்றி சுமார் எழுபது இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள குடியிருப்புக்களும், குளமும், அணி கலனும், பொருட்களும், இன்ன பிறவும் நிறைந்துள்ளன.

முருகன் உலவி வர தங்கரதமும், வெள்ளி மயிலும் அலங்காரமாக உள்ளன. ஆண்டு வருமானமாக சுமார் இரண்டரை இலட்சம் வசூலாகி பல திருப்பணிகளுக்காக செவ்வனே செலவிடப்படுகின்றது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்ந்த பெரியவர் மக்கள் வசதிக்காக பல பொதுத் தொண்டுகளை கோயில் பரிபாலனத்துடன் இணைத்து நடத்தி வருகிறார். கல்விப் பணியும், மருத்துவப் பணியும் இதில் குறிப்பிடத்தக்கன.

திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு சுமார் ஆறு லட்ச ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வருகிறது. திருமுருகன் திருமணக்கூடம் புதுமணத் தம்பதிகளுக்கு பெருவாழ்வு அளிக்கிறது. இந்த மருத்துவமனை சிற்றூர்வாசிகளை வாழ வைக்கிறது. நிபுணர்களால் நிர்மானிக்கப்பட்டு பல இலட்ச ரூபாய் செலவில் சத்திர சிகிச்சை வசதியுடனும் பல படுக்கைகளுடனும் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை இங்குள்ள பல கிராமங்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது.

காடாய் கிடந்த ஊரை தன் ஆட்சியின் கீழ் சுபிட்சம் அடையச் செய்ய அருட்கடாட்சத்தினால் ஒருவரை ஆட்கொண்டு அவர் மூலமாக அவ்வூரை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பால முருகன் திருவிளையாடலை என்னவென்பது?



No comments:

Post a Comment