Sunday, March 2, 2014

தலையங்கம் 2013 நவம்பர்

மிக பரபரப்புடன் பேசப்பட்ட குயின்ஸ்லாந்து, பண்டர்பேர்க் மருத்துவர் பட்டேல் வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது மருத்துவர் பட்டேல் சகலக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப் பட்டிருக்கிறார். அவருக்காக வாதாடிய  பாரிஸ்டரிடம் இது குறித்து பத்திரிகைகள் “பண்டர்பேர்க் மக்களுக்கு நியாயம் வழங்கப் பட்டதாக நினைக்கிறீர்களா என்று கேட்ட  கேள்விக்கு, ”நியாயம் என்பது சாட்சிகளின் அடிப்படையில் வழங்கப் படுவதாகும். சமூக பிரங்க்ஞையுடன் சமுதாயத்தில் கொடி கட்டிப் பறப்பதால் கிடைப்பதல்ல.”  என்று கென் ப்ளெமிங், கியூசி, பதில் அளித்துள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை முதல் , பொது நல வாய அமைப்புகள் வரை அனைத்தும் மறைமுகமாக  இதே அடிப்படையில் தான் செயல் படுகின்றன என்றே படுகிறது. குறிப்பாக  இலங்கை நிலைமை குறித்த நிலைப்பாட்டின் முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை இதன் அடிப்படியில் தான் வந்திருப்பதாக தோன்றுகிறது. உள் நாட்டு அவலங்கள் தொடர்புடைய சாட்சிகள் எத்தனை வலுவாக இருந்தாலும் கவனிக்கப் படாமல்,  நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் பேணப் படுவது  மேற்படி கூற்றுடன் ஒத்துப் போவது போலத்தான் தெரிகிறது. பொது நல வாய அமைப்பு மாநாடு இன்னும் ஒரு படி மேலே போய் காலுக்குத்தான்  காலணி பொருந்தாமல், காலணிக்கு ஏற்றவாறே கால் பொருந்தும் வகையில் பொது நல வாய அமைப்பு மாநாடு காத்திருந்து மாநாட்டை தள்ளி வைத்து இலங்கையில் நடத்தியுள்ளது .

சட்டத்துறையில்  பணி  செய்வோருக்கு முதல் கடமை சட்டத்துக்கும், அடுத்த கடமை நீதிமன்றத்துக்கும் அதன் பின்னரே தன் கட்சிக்காரருக்கும் என வகுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு கடமைப் படுவது  என்பது நீதிக்குத்   தலை வணங்குவதாகும். இது  போலவே  ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் உலக நீதிக்கு தலை வணங்க வேண்டியது கடமையாகும். உலக நீதி என்பது ராஜ தந்திரம் என்பதற்கு அப்பாற் பட்டது. அதைப் போலவே பொது நல வாய அமைப்பும் அதற்குட்பட்ட  நாடுகளின் நலம் கருத வேண்டும்.தவறுகள் நிகழும் போது தலையில் குட்ட வேண்டும்.  நல்லது நடக்கும் போது முதுகில் தட்ட வேண்டும். அப்போது தான் நீதி நிலைக்கும்.

மீண்டும் முதல் பத்திக்கு போவோம். ’சமூக பிரக்ஞை’ , ’உலக நன்மை’, இன்று இவை  எந்த அளவில்  ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளின் நோக்கமாக அமைந்துள்ளன என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது. இவ்  அமைப்புகளின்  நியாயம் எப்படி அநியாயத்தின் கைப்பாவையாகி உள்ளது என்பதுவும் முதல் பத்தி பதிலின் காரணமாக எழும் வேதனையை ஒத்த உணர்வைத் தருவதாகவே இருக்கிறது

No comments:

Post a Comment