Wednesday, February 12, 2014

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பொன்விழாக் கண்ட குரலிசை


முப்பதாயிரம் சபைகள் கண்ட மூத்த இசை ஆச்சார்யர்
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பொன்விழாக் கண்ட குரலிசை
டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன்
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இசை உலகைத் தன் கம்பீர கானத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மூத்த இசை அறிஞர். அண்மையில் இவரது  ஆஸ்திரேலிய வருகை நமக்கெல்லாம் பெரு விருந்தாக அமைந்தது.

பேர்த்தில் தெலுங்கு சங்கத்திற்காக  ஒரு கச்சேரியும் , சிட்னியில் ஸ்வரலயாவிற்காக ஒரு கச்சேரியுமென டாக்டர் பால முரளி கிருஷ்ணாவின் குரல் களை கட்டியது.

முகத்திலோ குரலிலோ சற்றும் தளர்வு இல்லாமல் , முழுக் கச்சேரியையும் அனாயாசமாகவும், சிரித்த முகத்துடனும்,  நடத்தி முடித்தார்.ஒரு கலா ரசிகருக்கே உரிய கோலத்தில் இடையில் பளப் பளவென  ஜரிகை கூடிய பட்டு, மையின் சாயல்கள், கழுத்திலும் கையிலும் தவழும் பொன்னாபரணங்கள் , வெற்றிலை சிவப்பு உதடுகளால் இசைவாணி அருளிய கொடையை ரசிகர்கள் செவி குளிர வாரி வழங்கி இசை அக்ஷயபாத்திரமாகினார்.

பால முரளியின் இயர் பெயர் முரளி கிருஷ்ணா. எட்டு வயதில் இவர் விஜயவாடாவில் நடந்த தியாக ராஜ ஆராதனையில் பாடிய வண்ணம் கண்டு ‘பால’ என்ற அடை மொழி கொடுக்கப் பட்டது.

ஆந்திர மானிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மங்களப்பள்ளி என்ற இடத்தில்  1930 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்தொண்டு புரிந்து வருகிறார்.தாய் சூர்ய காந்தம்மாள், தந்தை பட்டாபி ராமய்யா. இருவருமே இசை கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்கள். பாலமுரளி கிருஷ்ணா ஐந்து வயதில் இசை ஆர்வம் காட்டியதில் ஆச்சரியம் இல்லையே?

இது சாதாரணக் குழந்தை இல்லை... தெய்வாம்சம் பொருந்திய குழந்தை. நம் குடும்பத்திற்கு பேரும் புகழும் வாங்கித் தரப் போகிற குழந்தை இது. இவன் உடம்பில் ஓடறது ரத்தம் இல்லே. சங்கீதம்! இப்படி உலகம் முழுக்கப் புகழோடும் பேரோடும் வாழப் போகிற இந்தக்  குழந்தையைப் பெற்றுத் தரத்தான் நான் பிறந்தேன்' என்று பெற்ற தாயும் , "ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டனஎன்று வித்தைக் கற்றுக் கொடுத்த குருவாலும் புகழப்பட்ட கருவிலே திருவுடைய
இவர்15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன் படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார். இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட்டார்.

சாதனைகள்

ஆனால் இசை குறித்த ஆய்வுகள் இவரது வாழ்நாள் சாதனையாகும். இசை வைத்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர். அது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்தவர்.தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத, மலையாள , பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் பெரும் புலமை உடையவர்.
சுமார் 400க்கு மேற்பட்ட இசைத்தொகுப்புக்களை 72 மேளகர்த்தாக்களை கொண்டு உருவாக்கிய பெருமை இவருக்கே உரியதாகும். பல புதிய ராகங்களைக் கண்டு பிடித்து பெருமை படைத்தவர். சித்தி, லவங்கி, மகதி, சுமுகம் போன்றவை அவற்றில் சில நான்கு  இசைக்குறியீடுகளை மட்டுமே கொண்டு இயற்றப்பட்டவை. சந்த ஒலிகளைக் கோர்வையாக்கித் தாளச் சங்கிலியில் கதி பேதத்தைக் கொண்டு வந்து, புதிய தாள முறைகளை உருவாக்கிய பெருமை உடையவர். தில்லானாக்களில் சங்கதிகளைப் புகுத்தி புதுமை செய்தவர்.இப்படிப் பல சாதனைகளை செய்திருந்தாலும் கூட இவரது புதிய முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கபட்டுள்ளன.

முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக  பால முரளி கிருஷ்ணா திகழ்கிறார்.


விருதுகள் 
கலை விலைக்குள்  கட்டுப்படாதது. ஆனாலும் திமிர்ந்த ஞானம் என்பது அங்கீகாரங்களுக்குத் தலை வணங்குவதே பண்பாகும். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும், ஞானமும், ஆய்வும், கண்டுபிடிப்புகளும் பல பட்டங்களைப் பெற்றுத்தந்தன. அவற்றில் சில பத்ம பூஷன்,பத்ம விபூஷன், செவாலியர் போன்றவையாகும்.

சினிமா
‘பக்த பிரகலாதன்’ படத்தில் நாரதராக நடித்த பெருமையும் உண்டு."சின்னக் கண்ணன் அழைக்கிறான் " -  பாடல் கவிக்குயில் படத்தில், இளையராஜாவின் இசையில் , Dr. பால முரளி கிருஷ்ணா பாடிய ரீதி கௌள  ராகப் பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வகையில்  ‘திருவிளையாடல்’ படத்தில் ‘ஒரு நாள் போதுமா? , ‘நூல்வேலி’  படத்தில் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியும், ‘பசங்க’  படத்தில் அன்பாலே அழகாகும் வீடு இன்னும் சில பாடல்கள்.




No comments:

Post a Comment