Tuesday, December 9, 2014

மோதியின் வெற்றி இலங்கைத் தமிழர்களுக்கு வரமா? சாபமா??

மோதியின் வெற்றி   இலங்கைத்  தமிழர்களுக்கு  வரமா?  சாபமா??
வழக்குரைஞர் கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன்

நரேந்திர மோதி – அலை மோதி மோதி எப்படி அலை கடற்பாறைகளைக் கரைக்குமோ அப்படி காங்கிரஸ் கல்லை கரைத்து  இடம் தெரியாமல் உருக்குலைத்த இந்திய அரசியல் அலை. இவரது தலைமைத்துவம் அண்டை நாடுகளுக்கு குறிப்பாக இலங்கைக்கு வரமா? சாபமா?
இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு என்று நாம் புலம்பித் தள்ளலாம். ஆனால் அது வெறும் அரசியல் சித்து விளையாட்டு என்பது எண்பதுகளில் கூட தெரியாமல் இந்தியாவை எதிர்பார்த்து ஏமாந்த பின்னும் , புரியாமல் இருந்தால் எப்படி? இந்திய மக்கள் இலங்கைத்தமிழர்களை தொப்புள் கொடி உறவு என்றே பார்க்கிறார்கள். ஆனால் இந்திய  அரசியல்வாதிகளுக்கு இலாப நட்டக் கணக்குகளில் இலங்கைப் பிரச்சனையும் அடக்கம்.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் இலங்கை அரசுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் இலங்கை அரசும், தமிழர்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்ள வேண்டும்  என்று தமிழ் மக்களும் எதிர்ப்பார்க்கிறனர்.ஆனால் மோதி மோதிக்கு சாதகமாகவே நடந்துக் கொள்வார் என்றே அரசியல் விமர்சகர்கள் கணிப்பாகும். உள்ளூர் மற்றும் சர்வதேச அம்சங்களைக் கொண்டே இலங்கை விவகாரம் தொடர்பாக மோதி முன்னெடுக்கும் முடிவுகள் அமையும் என்பதே உண்மை.

மோதியின் நிலை இப்போது சாதாரண அரசியல் வாதி என்ற நிலையினைத் தாண்டி, குஜராத் முதல்வர் என்ற நிலையில் ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களின் பிரதி நிதி என்ற நிலைமை மாறி முழு இந்தியாவின் தலைமை அடயாளம் என்ற பிரதி நிதிதுவப் படுத்தும் நிலையில் நிற்கிறார். 1971 இல் இந்திரா காந்தி அம்மையார் தனிப்பெரும்பான்மையுடன் (352 இடங்கள்) வென்றதற்குப்  பிறகு மோதியின் வெற்றி தான்  அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.பிரதமர் பொறுப்பை  ஏற்கும் அவரிடம், ‘அரசியல்வாதி' என்ற  குண நலன்  மறைந்து ‘ராஜதந்திரி' என்ற குண நலன்  வெளிப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஆறு மாத காலத்துக்குள் அவர் கண்ட வெற்றி வேறு விதமாக முடிந்து போகும் அபாயம் ஏற்படும்.
மோதியின்  இந்த இமாலய வெற்றி  வேறு கட்சிகளின் கூட்டணி நெருக்கடிகளுக்கு அவசியம் இல்லாத சூழலை உருவாக்கி உள்ளது.  ஜெயலலிதாவின் தயவு மோதிக்கு தேவை இல்லாமை மற்றும்  ஜெயலலிதாவின் கெடு பிடிகள் , முகத்திருப்பல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய  அவசியமின்மையை மோதிக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
’இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு ... இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இணக்கப்பாடு கிடையாது’ – கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த கூற்று வெறும் அரசியல் வாய் வீச்சு என்பது அனைவரும் அறிந்ததே.
இலங்கை இந்திய விவகாரங்கள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கச்சத்தீவு காலம் தொட்டே இரு நாடுகளும் உரசுவதும், பின் கொள்கை சமரசங்களும், தலைமை உறவுகளும்,  இரு தரப்பு விரிசல்களும் மாறி மாறி அரங்கேறிய காட்சிகளே.எண்பதுகளில் இனப்பிரச்சினையின் பின் இந்திரா காந்தியின்  அரசு இலங்கைப் பிரச்சனையை  பிராந்திய  ‘BIG BROTHER’, ஆதிக்கத்திற்கான வித்தாக ஏற்றுக் கொண்டது.கச்சத்தீவு கை விட்டுப்போனாலும் இலங்கை இனப் பிரச்சினை தன் கையை விட்டுப் போக வாய்ப்பில்லை என்பதில் தொடங்கியது போராளிகளுக்கு உதவும் முனைப்பு.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதே இதன் அடிப்படை. அதன் பின் வந்த அரசுகளுக்கும் இதுவே பிள்ளையார்  சுழி போட்டது.அதன் பின் இந்திய தலையீடு இன்றி இலங்கை விவகாரம் தனித்து இயங்க முடியாதது தவிர்க்க முடியாது யதார்த்தமானது.

மக்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.இந்திய  தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்தக் கொள்கையும் ஒரு கால கட்டத்திலும்  எந்தக் காரணங்களுக்காகவும் அது தொடர்பான வெளி விவகாரக் கொள்கையை மாற்றி அமைக்காது. இந்தியாவில்அரசு மாறலாம், அரசியல் மாறலாம், வெளி நாட்டு உறவுகள் மாறலாம். ஆனால் அது இந்திய  தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளளைவிக்குமானால் முதல் கவனிப்பு இந்தியாவின் பாதுகாப்பு குறித்தே இருக்கும்.அதற்கு நிறைய ராஜ தந்திரம் தேவை. நரேந்திர மோதி  அரசாங்கம் ராஜதந்திர அடிப்படையில் செயல் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. வைக்கோக்களூம் , சீமான்களும், திருமாவளவன்களும் ஊது கோல்களாக இருக்க முடியுமே தவிர தேசிய அளவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விட முடியாது.

இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  நிலைப்பாடு   இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் கையிலேயே தங்கியுள்ளது என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.இது முற்றிலும் உண்மையாகும். தேசியபாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் படுபவரே இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  நிலைப்பாட்டினை நிர்ணயிப்பதில் மோதியின் தேசியபாதுகாப்பு ஆலோசகராக செயல் படுவார். காங்கிரஸ் ஆட்சியில் இந்தப் பதவியில் இருந்த இருந்த சிவ்சங்கர் மேனன், 1987 இலங்கை இந்திய  ஒப்பந்தத்தின் பின்காலப்பகுதியில் அரசியல் செயலராக இருந்த டாக்டர் எஸ் ஜெய்சங்கர், அல்லது இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராக 1984 ஆம் ஆண்டு முதல் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் காலப் பகுதி வரை இருந்த ஹர்தீப் பூரி இந்த பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிட்டக் கூடிய சந்தர்ப்பத்தில் இருக்கிறார்கள். இதில் பூரி இலங்கை தொடர்பான  ஆழமான அறிவு கொண்டவர்.

மோதியை பொறுத்தவரை குஜராத்தின் முதல்வராக இருக்கும் போதே பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளோடு இணக்கமான  உறவு கொண்டாடினார். இலங்கையுடனும் அவ்வாறானதொரு இணக்கமான  உறவையே கொள்வார் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். அப்படி இருக்க வேண்டியது அவரது பதவி உருவாக்கி இருக்கும் ஒரு சூழ்னிலையாகும். அந்த அடிப்படையில் அவர் தனது பதவி ஏற்கும் விழாவிற்கு இலங்கைக்கு அழைப்பிதல் அனுப்புதல் நியாயமானதே ஆகும். இன்னும் இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  இலங்கை தொடர்பாக  இந்தியாவின்  நிலைப் பாடே தெரியாத சூழ்நிலையில் இலங்கை அதிபரின் இந்திய வரவு குறித்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பது ’சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பதாகும்.
ஒரு சந்திப்பு நிகழும் வரை எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.இந்திய பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துக் கொண்டால், மக்களின் எதிர்பார்ப்பு இவைதாம்:
இரு தரப்பு அரசும் தமது நட்பு மற்றும் ராஜ தந்திர வட்டத்தினை விசாலப் படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு  நட்பு ரீதியான அழுத்தங்களைத் தரலாம்.
மோதியின் புதிய அரசாங்கம் , பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள 13வது சட்டத்திருத்தத்திற்கு வழி செய்து  மாகாண சபைகளுக்கு காணி, மற்றும் காவல்துறை  இன்ன பிற அதிகாரங்களை வழங்குவதில்  தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து தனது ராஜ தந்திரத்தை பயன் படுத்த வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியின் போது புலிகளுக்கு எதிரான கொள்கை கடைப்பிடிக்கப் பட்டது. சோனியாவின் ஆதிக்கத்தால் , ராஜிவ் காந்தி கொலை தொடர்பான ’பழிவாங்கல்’ கூடுதலான கொள்கையானது. பழையன கழிதலும் , புதியன புகுதலும் என்ற வகையில் இலங்கைத் தமிழர் தொடர்பான இந்திய அணுகு முறையில் கொள்கை மாற்றம் ஒன்றின் தேவை அவசியமானதும், அவசரமானதும்.
மோதிக்கு இலங்கை அரசுடன் நல்லுறவு இருக்க வேண்டியது போலவே தமிழ் மக்களின் நலனும் முக்கியமானது  என்பது  புரிய வேண்டும்.அல்லது அது உணர்த்தப்பட வேண்டும். இது வெறும் புறக்கணிப்பு , கூக்குரல், ஆர்ப்பாட்டம், அரசியல் சாகசம் போன்றவற்றாலும், இந்திய , இலங்கைத் தமிழ்  அரசியல் வாதிகளின் மேடைப் பேச்சுக்களினாலும் மட்டுமே சாதிக்க முடியாது. ஆண்டவனே அரசாண்டாலும் அயராமல், அசராமல், அலட்சியம் செய்வது என்பதே நோக்கமாகக் கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா  தமிழ் மக்களின் நலன் குறித்து தமிழக அரசு சார்ந்து, மோதிக்கு புரிய வைப்பார் என்று எதிர்பார்த்தால் அக் கருத்தை மாற்றிக் கொண்டேயாக வேண்டும். இதை வைத்து  அவர் அரசியல் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை.அதனால் தமிழ்மக்கள் குரலாக , எந்தவித சுய நலமும் இன்றி , இலாபம் கருதாது மோதியுடன் நல்லுறவு ஏற்படுத்தி செயல் பட  ஒரு செயல் குழுவோ அல்லது ஒரு சாணக்கியன் தமிழ் மக்கள் தரப்பில் தேவை.
மோதி அரசு தனக்குப் பெரும்பான்மை கிட்டியதால் எதிர்த்துக் கேட்க கூடிய வலுவான எதிர் கட்சி ஒன்று  இல்லை என்ற காரணத்தினால் மோதி அரசுடன் மோத எவருமில்லை என்ற அலட்சியப் போக்கு தவிர்க்கப் படவேண்டும்.
மோதிக்கு இந்து மதம் போல மகிந்தருக்கு பௌத்த மதம் – அதனால் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற கன்ணோட்டம் பொய்யாக்கப்பட வேண்டும், அதற்கு மோதியின் பழைய அரசியல் நிலைப்பாடு  மன நிலை மாறி,  தான் உலகின் மிக பெரிய ஜன நாயக நாடான இந்தியாவின் பிரதமர், அண்டை நாட்டுப் பிரச்சனைகள் தொடர்பான தமது நிலைப்பாடு பிராந்திய நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் என்ற பரந்த மனப்பான்மையுடன் ஒரு தீர்வுக்கு வழிகோலும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.
சீனா , பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இதுவரை மாநில அளவில் நல்ல உறவைப் பேணி வந்திருக்கும் மோதி இனி தேசிய அளவில் அந்த உறவினைப் பேணுவதனால்  பிராந்திய நல்லிணக்கத்துக்கு முயற்சிப்பது சீன, இந்தியா , இலங்கை கூட்டு உறவில் சிலத் தெளிவுகளைக் காட்டி சுமுகத்தீர்வுகளைக் கொண்டு வரலாம்.

மேற்படி சொன்னவை எல்லாம் ஒரு மதிப்பீடு தான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசை விட இந்திய அரசியல்வாதிகள் சக்தி வாய்ந்தவர்கள் . அவர்கள் நிறம் மாறும் வேகத்தில் தான் இலங்கைப் பிரச்சனை தீர்வும்,  வரமாக அல்லது சாபமாக அமையும் என்று மறந்து விட வேண்டாம்.

தமிழ் நாணயங்கள்

நாணயங்கள் மூலமே தமிழர் வரலாற்றை உலகறியும்
ஆருத்ரா

சென்னை திரு மயிலையில் உள்ள  சிவகாமி பெத்தாச்சி நிகழ்வரங்கில், நாணயவியலாளர் ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘செழியன்’ நாணயங்கள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

புத்தகத்தை தமிழ்நாடு தொல்லியல்துறை முன்னாள் இயக்குனர் இரா.நாகசாமி வெளியிட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.திருமலை பெற்றுக்கொண்டார். “ நாணயங்கள் மூலமே தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள முடியும்,'' என்பது டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி யின் நம்பிக்கை.

இரா. கிருஷ்ணமூர்த்தி தமிழக நாணயவியல் ஆராய்ச்சியில் முன்நிற்பவர். அதிலும் குறிப்பாகச் சங்க கால நாணயங்கள் நூலை வெளியிட்டவர். 1984இல் சங்க காலப் பாண்டிய நாணயமாகிய பெருவழுதி காசு கண்டுபிடிக்கப்பட்டது. 1986இல் சங்க காலச் சோழர் நாணயங்கள் பின்  சங்க காலச் சேரர் நாணயத்தைக் கண்டுபிடித்தார். கிருஷ்ணமூர்த்தி எழுத்துகள் இல்லாத சேரர் காசுகளை முதலில் கண்டுபிடித்தார். பின் இரா. நாகசாமி கொல்லிப்புறைக் காசைச் கண்டு பிடித்து வெளியிட்டார். பின் புகழ் பெற்ற மாக்கோதை காசைச் கண்டு பிடித்து 1990இல் இரா.  கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அவரே பின்னர் குட்டுவன் கோதை காசைக் கண்டுபிடித்து 1994இல் வெளியிட்டார்.

தொடர்ந்து, ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஏற்புரை ஏற்று பேசியபோது ,
’இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கொற்கைத் துறைமுகம் இருந்தது. உலகிலேயே சிறந்த முத்துகள் விளைந்த இடமாக இந்தப் பகுதி கருதப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள பாத்திரக் கடையொன்றில் பழைய நாணயங்களை நான் வாங்கினேன். பல ஆண்டுகளாக ஆற்று மணலில் புதையுண்டு கிடந்த நாணயமாக அது இருந்ததால், அதை சுத்தம் செய்ய முடியவில்லை. அந்த நாணயங்களை ஒரு குவளையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

”சங்க கால மதுரை பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் பின்புறத்தில், கோட்டு வடிவுடைய மீன் சின்னம் தான் இருக்கும். ஆனால், இந்த நாணயங்களின் பின்புறம் கிரீடம் அணிந்த மன்னர் தலை பொறிக்கப்பட்டுள்ளது. எனவே கொற்கையை ஆண்ட பாண்டியர்கள் சுய ஆட்சி புரிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.அசோகர் வெட்டிய கல்வெட்டுகளில் தன் பேரரசின் தெற்கு எல்லையாக, சோடா, பாடா, சதியபுதோ, கேதல புதோ, தாம்ப பம்னி என்று கூறி உள்ளார். மேலும், தாம்ப பம்னி என்ற பெயர் பாலி மொழியில் உள்ளதாகவும், அதை ‘தாம்ர பர்னி’ என்று தான் படிக்க வேண்டும் என்று எழுதி உள்ளார்.

அசோகர் காலம் கி.மு. 3–ம் நூற்றாண்டு ஆகும். அக்காலகட்டத்தில், செழிய, செழியன் நாணயங்களை வைத்து கொற்கையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள் சுயாட்சி புரிந்து இருப்பார்கள் என்று கருதுகிறேன். தற்போது, நாணயவியல் ஆராய்ச்சி தமிழக இளைஞர்களிடம் பரவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமி, சென்னை, செம்மொழி ஆராய்ச்சி மத்திய நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் க.ராமசாமி, ரீச் பவுண்டேசன் நிறுவனர் தி.சத்தியமூர்த்தி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, புலத்தலைவர் சுவடிப்புலம் கு.ராஜவேலு ஆகியோர் புத்தகம் குறித்து சிறப்புரையாற்றினர்.

நாணயம் பற்றி
- இக்காசுகளில் காணப்படும் செழியன் மற்றும் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் செழியன் என்ற இரு சொற்களும் ஒரே கால தமிழ் பிராமி போல் தெரிவதால் இவற்றின் காலத்தை கி. மு. இரண்டாம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கொள்கின்றனர்.
0.900 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 8 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
6.7 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 1.9 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வேந்தனின் தலை, தலைக்கவசம் அணிந்துள்ளார், கவசத்தின் பின்புறம் அலங்கார அணிகலன்கள், கூர்மையான நாசி, நீண்ட மீசை போன்றவை காசில் தெரிகின்றன. 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில் தலை அருகில் 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. பின்புறத்தில் யானை, நீண்ட சதுரத் தொட்டி, அதில் இரண்டு மீன்கள், சுவாசுதிக்காச் சின்னம் போன்றவை உள்ளன


Sunday, October 26, 2014

மனோரமா

மனோரமா 

1200 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப் படைத்த தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்டவர்.  1943  ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என்ற பெருமையுடன் நடித்தவர்.
சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.1958 இல் , கவிஞர் கண்ணதாசன் மாலையிட்ட மங்கையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார். அன்று தொடங்கிய  தனது கலை பங்களிப்பிற்காக 2002 இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்
தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை நடிகர் முதல் இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

சிங்களத்தில் திருவாசகம்

சிங்களத்தில் திருவாசகம்

ஆயிரத்து இருநூறு  ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் அருளிய நூல் திருவாசகம்.திருவாசகத்தின் முழுமையான முதலாவது மொழிபெயர்ப்பு 115 ஆண்டுகளுக்கு முன் 1900இல் வெளியானது. மொழிபெயர்த்தவர் ஜி. யூ. போப்பையர். ஆங்கில மொழிபெயர்ப்பு.அந்தப் புத்தகம் 1987 ஆம் ஆண்டு சென்னைப் பலகலைக்கழகத்தில் சுப்பம்மாள் வாங்கிப் படித்தேன்.அன்று முதல் வான் கலந்த மாணிக்க வாசகத் தேன் சுவையில் நான் கலந்தேன்.
திருவாசகம் இந்தியில் பேரா. சுந்தரம் மொழிபெயர்த்து கொல்கத்தா சாந்திநிகேதன் வெளியீடாக 1995இல் நூலானது.மலையாளத்தில் திருவாசகம் திரு. சந்திரசேகரன் நாயர் மொழிபெயர்த்து திருவனந்தபுரம் மன்னர் வெளியிட்டு 2012இல் நூலானது. தெலுங்கில் திருவாசகம் பேராசிரியர்கள் பரிமளம்+அரம்பை மொழிபெயர்த்து 2013இல் திருமலை திருப்பதி தேவத்தானத்தால் நூலானது. கன்னடத்தில் திருவாசகம் பேரா. ஜெயலலிதா மொழிபெயர்த்து 2014இல் நூலானது.வடமொழியில் திருவாசகம் தெரு. ச. கோதண்டராமன் மொழிபெயர்த்துச் சுவாமி தயானந்த சரசுவதி அவர்கள் அச்சிட 2014இல் நூலானது.
சிங்களத்தில் திருவாசகம் திரு. வடிவேல் இராமசாமி, திரு. இலிண்டன், திரு. வே. சண்முகநாதன் (மூவரும் கல்முனை) மொழிபெயர்த்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக் கைலாசபதி அரங்கத்தில் 26.05.2014 அன்று மாண்புமிகு அமைச்சர் வாசுதேவா நாணயக்கார இந்து, புத்த கலாச்சாரப் பேரவையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து  கொள்ளும் போது மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெரும் முயற்சியால் கலாநிதி மோகன். அமைச்சரின் தமிழ்ப்பிரிவுச் செயலாளர்  கலாநிதி மோகன். சொன்னதன் படி வாசுதேவ நாணயகாரவிடம் காண்பிக்கப்பட்டது.
அங்கே நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலிய இரத்தின தேரர் இருந்தார். தமிழ்ச் சாகித்தியங்கள் சிங்கள மக்களிடையே முழுமையாகப் போய்ச் சேரவில்லை என வண. அதுரலிய இரத்தின தேரர் உரையில் குறிப்பிட்டார். திருக்குறள் சிங்கள மொழிபெயர்ப்புச் சிங்கள மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளதாகக் கூறினார்.அமைச்சர் வாசுதேவ நாணயக்கராவும் அங்கு இருந்தார்.அமைச்சரிடம் திருவாசகம் சிங்கள மெழிபெயர்ப்பைக் காட்டிய போது  பக்கங்களைப் புரட்டியபின் வண. அதுரலிய இரத்தின தேரரிடம் அமைச்சர் நூலைக் கொடுத்தார்.
திருவாசகம் சிங்கள நூலின் பக்கங்களைப் புரட்டிய தேரர், மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் எழுதிய முன்னுரையைப் படித்தார். பாராட்டினார். "அருமையான இந்த நூலில் எனக்கு ஒரு படி தருவீர்களா" எனக் கேட்டார். மேடையில் வெளியிட்டு வையுங்கள் படியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் சொன்னார்கள். மேலதிகப் படிகள் அச்சிடப் பணமில்லாமல் இருக்கிற  நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அருமையான நூல் சிங்கள மக்களுக்குக் கிடைக்கவேண்டும் எனத் தேரர் கூறினார். அச்சிட்டுத் தரவேண்டிய கடமை அமைச்சருக்கு உள்ளது. "அச்சிட்டுத் தாருங்கள்" என அமைச்சரிடம் தேரர் கேட்டார். அமைச்சரும் மேடையிலேயே அச்சிட ஒப்புக் கொண்டார். அமைச்சர் நூலை வெளியிட்டார், தேரர் பெற்றுக்கொண்டார்.
இப்படித்தான் தொடங்க வேண்டும் நல்லிணக்கம். நன்றி, மறவன் புலவின் நல்மணியே.

பார்த்ததில் ஈர்த்தது
இந்து நூல் வெளியீட்டில் இஸ்லாமிய பேராசிரியர்
மறுபடியும் ஆன்மிகம் தான், இப்போது ’’சிவவாசகம் ’’ மற்றும் ’’பக்திப் பயிர்வளர்த்த பதின்மூவர்’’. நூல் வெளியீடு. இந்த . இரு நூல்களின்  வெளியீட்டு விழா. பூரண கும்ப மரியாதைகளுடன்..திருபனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தர மூர்த்தி சுவாமிகள்...மற்றும் திருச்சிமலைகோட்டை மெளன மடம்..ஸ்ரீமத் குமாராசுவாமி தம்பிரான் சுவாமிகள் வரவேற்கப்பட.அவர்களுடன் இணைந்து வாணியம்பாடி பேராசிரியர். அப்துல் காதர்  இந்து நூலைப் பெறும் மதநல்லிணக்கத்துடன் ஆரம்பித்தது விழா.


திருபனந்தாள் ஸ்ரீகாசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெளியீட..மீனாட்சி கல்விக்குழுமங்களின் தலைவர்..தின இதழ் பத்திரிக்கையின் நிறுவனர் திரு இராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்கள்

மதம் சாதி கடந்து..சைவசமய தொண்டாற்றிய  அரும்பெரும் மக்களின் பெருமை சொல்லும்..பக்திப் பயிர்வளர்த்த பதின் மூவர் நூலை திருச்சி மலைக்கோட்டை மெளனமடம் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெளியிட..பேராசிரியர். கவிஞர் அப்துல்காதர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

இனிய இசையுடன்...திருமதி கிரிஜா ஹரிஹரனின் அற்புதக்குரலில்..சிவவாசக பாடல்கள் 8 எடுத்து ஒலியமைத்த..குறுந்தகட்டை....திருச்சி மலைக்கோட்டை மெளன மடம். ஸ்ரீமத் குமராசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெளியிட...மீனாட்சி.கல்விகுழும நிறுவனர் திரு இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்கள்

நூலசிரியர் இரா .குமாருக்கு  .’’’இறைத்தமிழ் வேந்தர்’’’..எனும் இன்சொல் பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.இவர் தின இதழ் ஆசிரியர், இதழியல் தொடர்பாக நூல் படைத்தவர்.பல ஆண்டு கால பத்திரிகை ஆசிரியர் அனுபவம் பெற்றவர்.


படித்ததில் பிடித்தது

மன்னிக்கவும் படிக்க முடிந்தது. எழுத முடியவில்லை.ஆசிரியரிடம் எவ்வளவு கேட்டும் ஒரு நாள் அவகாசம் தர மறுத்துவிட்டார்.

மறைந்தார் ‘மிஸிஸ் டவுட் ஃபயர்' சந்திரிகா சுப்ரமண்யன்

மறைந்தார் ‘மிஸிஸ் டவுட் ஃபயர்'
சந்திரிகா சுப்ரமண்யன்



ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வெளிவந்த  'மிஸிஸ் டவுட் ஃபயர்' படம் அனேகருக்கு மறந்து போயிருக்காது.அதை ஒட்டி கமல் ஹாசன் எடுத்த வெற்றிப்படம் தான் ‘அவ்வை ஷண்முகி. அது போலவே முண்ணா பாய் எம் பி பி எஸ்சும்,  'பேட்ச் ஆடம்ஸ்'  என்ற படத்தின் மறு தயாரிப்பு தான். இந்த இரு தமிழ் படங்களைப் பார்த்து வயிறு புண்ணாகும் வரை சிரிக்காதவர்களே இருக்க முடியாது.இவற்றில்  நடித்தவர் ரொபின் வில்லியம்ஸ்.அண்மையில் அவர் இறந்து விட்டது கலை உலகின் பேர் இழப்பு.
ரொபின் வில்லியம்ஸ் என்ற மாபெரும் கலைஞனின் அற்புத நடிப்பில் வந்த இப்படங்கள் நடிப்பு சார்ந்த முக , உடல் மொழிகள் பற்றிய கலைக்களஞ்சியங்கள் ஆகும். 63 வயதான ரொபின் வில்லியம்ஸ் மிக அற்புதமான நகைச்சுவை கலைஞன். தனது அபாரமான நகைச்சுவை நடிப்பினால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வசீகரித்தவர்.உலகினை சிரிக்க வைத்த அவர் சமீப காலமாக மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது காலம் செய்த கோலம். முடிவு மரணம்.
1951ல் சிகாகோவில் பிறந்தவர் ரொபின் வில்லியம்ஸ். படிக்கும் போது  பள்ளிக்கூடத்தில் நாடக கிளப்பில் சேர்ந்தார். பிறகு, அமெரிக்காவின் புகழ்பெற்ற நுண் கலைக் கல்லூரியான நியூயார்க்கில் இருக்கும் ஜுலியார்டில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆசிரியர் ஒருவர் அவருக்கு நகைச்சுவையை தேர்ந்தெடுக்கும்படி ஊக்கமளித்தது அங்குதான் .தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருந்தாலும் ‘குட்மார்னிங் வியட்னாம்’, டெட் பொயட்ஸ் சொசைட்டி, வன் ஹவர் போட்டோ போன்ற படங்களிலும் அவர் நடித்தார். ஹாப்பி ஃபீட்டில் பெங்குயின் குரல் இவர்து ஆகும். ஜுமாஞ்சி , அல்லாடின் ஆகிய சிறுவர் மனம் கவர்ந்த படங்கல் இவரது பங்களிப்பே.
அவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும் 'குட் வில் ஹண்டிங்' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது 1998ல் கிடைத்தது. 1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹண்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர்.ஐந்து கிராமி விருதுகள் பெற்றவர்.
ஆஸ்கர் விருது பெற்ற வில்லியம்ஸ், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பினால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வசீகரித்தவர். ரசிகர்களை மகிழ்வித்த வில்லியம்ஸ் இறந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். "என் கணவர் மற்றும் சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.ஜாஸ் இசை மற்றும் சைக்கிள் ஓட்டுவது இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள்.



சென்னை நாளில் சென்னை என்னும் அன்னையை போற்றுதும்

சென்னை போற்றுதும் ! சென்னையை போற்றுதும் !!


என்னை வளர்த்த சென்னை எனக்கு இன்னொரு தாய்.
இத்தனை கல்விக்கும் முதலான கல்வியைத் தந்த தந்தை.
வேலையை நேர்த்தியாகச் செய்யக் கற்று தந்த சகோதரி.
பொறுப்புடன் மணம் முடித்து வைத்த சகோதரன்.
பிள்ளைப்பேறு பார்த்த செவிலி.

இன்னும் நான் காதலிக்கும் காதலன்.
என்றும் என் மனதுடன்  பிணைந்து கிடக்கும் கணவன்.
நான் கற்றதை திருப்பித் தர நினைக்கும் பிள்ளை.
ஸ்ரீலங்கா முதல் சிட்னி வரையிலான என் நெடிய பயணத்தில்
சென்னை என் முதல் கல். மைல் கல்.

கடந்து போன இருபத்தைந்து நாடுகளில்
இன்றும் நெஞ்சோடும் நினைவோடும் நிற்கும்  நிலம்.
நாடுகள் தாண்டி போகும் போதெல்லாம்
தங்கிடத் தேடும் நிழற்குடை.

சென்னை போற்றுதும் ! சென்னையை போற்றுதும் !!

சென்னை நாளில் சென்னை என்னும் அன்னையை போற்றுதும்!!!

ஆட்சி மாறும் , காட்சி மாறும், மனசாட்சியும் மாறும்

ஆட்சி மாறும் , காட்சி மாறும், மனசாட்சியும் மாறும்
இந்தியப் பிரதமர்  நரேந்திர மோதியும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட்டும், இரவோடு இரவாக ஒரு யுரேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இருக்கின்றனர்.
உலக அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிடம், யுரேனியம் வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில், இந்தியா கையெழுத்திடாததைக் காரணம் காட்டி, இதுவரை அதற்கு மறுப்புத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் பங்கேற்பதை தடுத்துவிடும் என்றும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்றும் ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சி கருத்ஹ்டுத் தெரிவித்துள்ளது.
அமைதிக்காக மட்டும் யுரேனியத்தை பயன்படுத்துவோம் என்று இந்தியா உறுதியளித்ததை தொடர்ந்து யுரேனியத்தை வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டதாக ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் அண்ட்ரூ ரொப் கூறியிருக்கிறார்.
எல்லாம் சரி முன்பு ஒரு காலத்தில் ( மே 1998)  இந்தியா அணு சக்தி சோதனை செய்த போது இந்தியாவில் இருந்த தனது தூதர் ரொப் லாரியைத் திருப்பி அழைத்த ஆஸ்திரேலியா எங்கே?அப்போது இருந்த தெற்காசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனம் காணாமல் போனது எப்படி?