Sunday, October 26, 2014

”முதல் மொழி தமிழ்” நூல் வெளியீடு

சிட்னி சங்கத் தமிழ் மாநாடும் – 
“முதல் மொழி தமிழ்” நூல் வெளியீடும்


சிட்னி சங்கத் தமிழ் மா நாடு மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இன் நிகழ்ச்சிக்கு சிட்னி கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்தது விழாவை ஒட்டி சங்கத் தமிழ் தொடர்பான மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
விழாவிற்கு சென்னையிலிருந்து தமிழர் அறிஞர்கள் மறைமலை இலக்குவனார், முனைவர் உலக நாயகி பழனி மற்றும் புது தில்லி  தமிழ் சங்கத் தலைவர் ராகவன் நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
உள்ளூர் வெளியூர் தமிழ் ஆர்வலர்களின் சிறப்பு பட்டி மன்றங்கள், நடனம் மற்றும்  இசை, கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சங்கத் தமிழ் தொடர்பான தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் தமிழ்  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் இடம் பெற்றது.
இவ் விழாவின்  நோக்கம் அடுத்த தலைமுறைக்கு தமிழை அறிமுகம் செய்வதே ஆகும்.இதன் சிறப்பாக “ முதல் மொழி தமிழ்” என்ற தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்ட நூல் ஒன்று வெளியிடப்பட்டது.எழுதியவர் சிட்னி வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் மற்றும் அவரது மகள் நிவாசினி சுப்ரமண்யன்.
நூலை அறிமுகம் செய்த சிட்னி தமிழ் கலை கலாச்சார மன்றத் தலைவர் , திரு. அனகன் பாபு, இனிவரும் நாட்களில் புலம் பெயர்ந்த தமிழ் இளைய தலைமுறையினர் தமிழ் பற்றிய அடிப்படை அறிவைப் பெறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்றதுடன் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த தாயும் மகளும் மூவாயிரம் வருடத்திற்கு முந்திய மொழியை அடுத்த தலைமுறைக்கு எளிமையாக அறிமுகப்படுத்த முயன்றிருப்பது நூலின் சிறப்பாகும் என்று பேசினார்.
சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இந் நூல் தமிழின் இரண்டு தலைமுறை இடைவெளியை நிரப்ப உழைத்த உழைப்பின் வெளிப்பாடு என்றார்.ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய தமிழ் பற்றிய ஒரு தகவல் பெட்டகம் என்றும் பாராட்டினார்.
நூலை சென்னை தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார் வெளியிட முதல் பிரதியை புது தில்லி தமிழ்ச்சங்கத் தலைவர் ராகவன் நாயுடு பெற்றுக் கொண்டார்.
நிறைவாக கலாநிதி சந்திரிகா சுப்ரமணயன் ஏற்புரை நிகழ்த்தும் போது ” ஒரு மாத காலத்துக்குள்  எங்கள்  வேலைகளுக்கு நடுவில் எழுதப்பட்ட மிகக் கடுமையான உழைப்பின் பிறப்பு இந்த நூல். அடுத்த தலைமுறைக்கு தமிழைப்பற்றி  ஆங்கிலத்தில் ஓர் இளையவர் சொல்வதே சிறப்பு என்று நினைத்த போது , நானே எழுதித் தருகிறேன் என்று  நிவாசினி  முன் வந்தாள். தகவல் சேகரிப்பு பணி எனதானது. I am Tamil என்று நான் பெயரைத் தேர்ந்தெடுத்த போது இல்லை “முதல் மொழி தமிழ் ” தான் நன்றாக இருக்கும் என்று ஒரு  நள்ளிரவில் பெயரைச் சூட்டினாள்.அட்டைப்படப் புகைப்படம் திருமயிலை கபாலீஸ்வரர் கோயில் அவள் எடுத்தது.
எழுதி முடித்த  போது அவள் சொன்னது , “ தமிழ் மிக  ஆர்வமூட்டுவதாக உள்ளது”. ஆம் இந்த நூலின் நோக்கமே ”தமிழ்   அடுத்த தலைமுறையினருக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும்” என்பதாகும்.


கம்பன் விழா சிட்னி- எனது தொடக்க உரை





தமிழ்க்கடவுள் முருகனுக்கு முதல் வணக்கம்!

என் தாய் மடியாம் தமிழினிற்குத் தனிவணக்கம்!!

சண்ட மாருதமும் கொண்டல் முழக்கமும் கூட்டி வந்து
தமிழ் கொட்டிய கம்ப வாரிதி ஐயா அவர்களை வணங்குகின்றேன்  

வானர சேனையை வழிப்படுத்திய மாருதி போல
எங்கள் இளைஞர் படையை  இங்கு நெறிப்படுத்தி நிற்கும்
இளவல் ஜெயராமை வாழ்த்துகின்றேன்

கம்பன் புகழ் பாடி கன்னித் தமிழ் வளர்க்க வந்திருக்கும்
தமிழார்ந்த அனைவரரையும் வரவேற்கின்றேன்


சிரம் தாழ்த்தி கரம் கூப்பி என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு
இன் நிறைவு நாளில் தொடக்க உரையைத் தொடங்குகிறேன்

வானத்து சூரியன்
வழித்தோன்றல்
ராமனின்
கதை சொன்ன
கம்ப  நாடன்
தாள் தொழும்
நாள் இன்று.

அறுபதி னாயிரத்து மூன்று
மனைவியர்  
கூடியவனுக்குப்
பிறந்த
அவதார புருஷன்,

ஓர்  இல்      ஒரு சொல்     ஒரு வில்

என்று வாழ்ந்த
வாழ்க்கையை
இந்த உலகம்
வாழ்வதற்காக
எடுத்துச் சொன்ன
கவிதைக்காரன்
கம்ப நாடனைக் கொண்டாடும் நாள் இன்று.

காட்டிலே  ஈரேழாண்டு
கழித்தவன் காதையை - தன்
பாட்டிலே அறியச்செய்தான்
பாவலன் கம்ப ன்

அறத்தினால் அன்றி
புறத்து  ஒர்வழியும் இல்லை
புகழினைப்  பெறுதற்கு - என்பதைப்
புரியச் சொன்னான்
தேரெழுந்தூரினை
ஊர் வழுத்திடச் செய்த
உன்னதக் கவிஞன்

கவியினில்
சொல்லத் தக்கோன்
கம்பனன்றி - இப்
புவியினில் எவனும் இல்லை
என்ற புகழ் சேர்த்து
வள்ளல் சடையப்பன் வாழ்த்தும் நண்பன்.

கட்டுத்தறியில் கூட
கவி சொட்டும்  
வீட்டுடைக் கவிஞன்
இவனின்
பாட்டுடை த் தலைவனோ
அரவம் அணைந்த
அரி அவதாரமே.

சொந்தக் கதையல்ல
இவன் சொன்னது
வால்மீகி
சொன்ன கதை எனப் பலர்
சொல்லால்  இடித்தாலும்

எல்லாமே இல்லை
படித்ததை அறிவெனும்
பற்றுக் கோல் கொண்டு-
கவி வடித்தது எந்தன்
சிறப்பென நின்றான்.

யாப்பியல் மரபு சேர்த்து
யாழ் ஒலி சந்தம் சேர்த்து
மூப்பிலாக் காவியத்தை
மூவுலகறியத் தந்தான்

சொல்வண்ணம்
மொழி வண்ணம்
இயல் , இசை,நாடக வண்ணம்
சந்த வண்ணம் -சிந்து வண்ணம்
உண்மை, தத்துவம்,சத்தியம்   -  உரைத்த வண்ணம்,

உளவியல் நிலவியல்  புவியியல், அறிவியல்  புதைத்த வண்ணம்

கவி வண்ணம்,
அங்கு  கண்டோம்
கம்பனின்  கை வண்ணம்
எங்கும்  கண்டோம்

அரங்கண் உறங்கும்
அரங்கில் அரங்கேற்றிய
அற்புதக் காவியம்

ஆறு காண்டங்கள்

ஆற்றுப் படலம் முதல்
விடை கொடுத்தப் படலம் வரை
நூற்று பதினாறு  படலங்கள்

பத்தாயிரத்து ஐநூற்று முப்பத்து  நான்கு
பாடல்கள்
தொண்ணூற்று ஆறு வகை ஓசைகளுடன்
இராமாவதாரம் உருவானது
எப்படி? எப்படி??
நாளொன்றுக்கு
எத்தனைப் பாடல்கள் எழுதியிருப்பான்?
சிந்திப்போம்….  மெய் சிலிர்ப்போம் ….

பாற்கடல் தெய்வத்தைத் - தன்
பாக்கடலில் நீராட்டிய
கவி மாக்கடலின்
கால்  பணியும்
இவ்வேளையில்
கம்பனைத்
தமிழால்
வாழ்த்தவும்
வணங்கவும்
வந்திருக்கும் அனைவரையும்

வணங்குகிறேன்
வரவேற்கின்றேன்

இனி அரங்கு உங்கள் வசம்
நீங்களோ கம்பன் வசம்

அன்னமாச்சார்யா

என்றும் வாழும் அன்னமாச்சார்யா
கலைமகள் தீபாவளி மலர்



திருப்பதியை நினைப்போருக்கு தாளபாக்க அன்னமாச்சார்யாவும் சேர்ந்தே தான் நினைவுக்கு வருவார். அத்தனை ஈடுபாட்டுடன் திருவேங்கடவன் திருவருளை போற்றிப் பாடல்களை எழுதியவர் அன்னமாச்சார்யா. தெலுங்கு , சமஸ்கிருதம் இரண்டு மொழியிலும் இவர் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். எம் எஸ் அம்மாவின் தேன் குரலிலும் , பிரியா சகோதரிகளின் இசையிலும் இன்றும் நம்மைக் கட்டிப் போட்டு வைத்திருப்பவை இந்தப் பாடல்கள்.அன்னமாச்சார்யா திருவேங்கடவனின் திரு வாளின் அவதாரம் எனப்படுவார். இவருக்கு 16 வயதாயிருக்கும் போது பெருமாள் நேரில் காட்சி கொடுத்து அருள் பாலித்தார் என்பது வரலாறு.
தாளபாக்க அன்னமாச்சார்யா ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் தாளபாக்க கிராமத்தில்  1424 இல் சர்வதாரி ஆண்டு வைகாசி பௌர்ணமி அன்று பிறந்தார்.தொண்ணுற்று ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து 1503 இல் மறைந்தார்.
ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் மீதும் அலர்மேல் மங்கை மீதும் மொத்தம் சுமார் முப்பத்து இரண்டாயிரம் ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். முப்பத்து இரண்டாயிரம் பாடல்களும் முப்பத்து இரண்டாயிரம் மந்திரங்கள் என நம்பப் படுகிறது.
1922 ஆம் ஆண்டு வரை இவரது பாடல்கள் எதுவும் கிட்டவில்லை. காரணம் இவரது பாடல்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டும் செப்புத் தகட்டில் பதிவும் செய்யப்பட்டிருந்தன. இத்தகடுகள் பலகாலம் ஒளித்து  வைக்கப் பட்டு  1922 இல் தான் கண்டுபிடிக்கப் பட்டன. பதினான்காயிரம் பாடல்களா கொண்ட 25 ஆயிரம் செப்பேடுகள் திருவேங்கடவன்  கோவில் உண்டியலுக்கு எதிரில் கண்டு பிடிக்கப்பட்டன. அங்கு உள்ள ஒரு ரகசிய  அறையில் இந்த ஓலைச்சுவடிகளூம் , பின்னாளில் அவை எழுதப்பட்ட செப்பேடுகளும் 400 ஆண்டுகளூக்கு மேலாக மறைந்தே கிடந்துள்ளன.

திருப்பதி தேவஸ்த்தானம் பன்னிரண்டு ஆயிரம் பாடல்களைக்கண்டு பிடித்து பதிப்பித்தது. இவரது மனைவியும் புலமைத்துவம் பெற்றவர்.இவரது மனைவி திம்மக்கா சுபத்ரா கல்யாணம் என்ற பாடல் தொகுப்பை எழுதி தெலுங்கில் எழுதிய முதல் பெண் கவிஞர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
அவரது பாடல்கள் அத்யார்தம மற்றும் சிருங்கார ரச வகைப்பாடல்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன.அத்யார்த்தம சங்கீர்த்தனை என்பது தெய்வீகத்தின் மேம்பட்ட நிலையை பாடுவததாகும்.  இறைவனை நாடும் உயிர் இறைவனைச் சேர படும் பாடு, அதன் தொடர்பாக சந்திக்கும் சோதனைகள், எதிர்கொள்ளும் போராட்டங்கள்,லௌகீக , ஆன்மீக இருமுனைப் போராட்டத்தின் நடுவில் ஆன்மா படும் அவஸ்தைகள் ஆகியவற்றை வெளிக்காட்டி  பாடப்படும்  பாடல்கள். அன்னமாச்சார்யர் தான் இறைவனை அடைவதற்காக முயலும் போது அனுபவித்த வேதனகளையும் , சோதனைகளையும் உணர்வு பூர்வமாக தன் பாடல்களில் வெளிப்படுத்துடுகிறார்.
சிருங்கார சங்கீர்த்தனை என்பது பெருமாளை ஆத்மா தேடும் தேடல், நாயக நாயக பாவனையில் காட்டப்படும் அன்பு, இறுதியில் பெருமாளிடம் முழு சரணாகதி  போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
அன்னமாச்சார்யாவின் சங்கீதம் அனைத்தும் ஒரே வகையானக் கட்டமைப்பைக் கொண்டன.ஒவ்வொரு பாடலும் பல்லவி, நான்கு வரிகளைக் கொண்ட மூன்று சரணக் கோர்வைகள், அனேகமாக அனுபல்லவி இல்லாமல் அமைந்திருக்கும் .மிக உயர்ந்த இலக்கிய நயத்துடன் அமைந்திருந்தாலும் கூட பழகுத் தெலுங்கும் ஆங்காங்கே தலைக் காட்டத்தவறுவதில்லை.. நிறைய தமிழ் சார்புடைய தெலுங்கு சொற்களை கொண்டன. கேட்போருக்கு இலகுவில்  புரியும். அன்னமாச்சர்யாவிற்கு  பத கவிதை பிதா மஹர் என்ற பட்டமும் உள்ளது.
அன்னம்ய்யாவின் மூதாதையரில் மூன்று தலைமுறைக்கு முந்திய  நாராயணய்யா படிப்பில் மிக குறைந்த நிஅலலியில் இருந்த போது, அந்த்ககால வழக்கப்படி மிக கடினமானத் தண்டனை, அவமானம் என்று சித்திரவதைகள் இருக்கும். அவற்றில் இருந்து தப்பிக்க மரணமே முடிவென்று நாராயணய்யா அவரது கிராமமான சிந்தாலம்மா கோவில் பாம்பு புற்றுக்குள் கையை விட்டு இறக்க முற்பட்டார். அப்போது கிராமத்து அம்மன் தோன்றி தடுத்து ’உனது பரம்பரையில் மூன்றாவது தலை முறையில் ஹரியின் அம்சத்துடன் தோன்றுவான் . எனவே நீ  வாழ வேண்டும் ‘ என ஆணையிட்டதாக அன்னமைய்யா சரிதம் கூறுகிறது.
அப்படி மூன்றாவது தலை முறையில் பிறந்த சிறுவன் அன்னமய்யா ஒரு நாள் புல் வெட்ட சென்றபோது அங்கு திருப்பதிக்கு சென்று கொண்டு இருந்த ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தான்.அவனை அறியாமலேயே அவன் அவர்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.அவர்கள் வெங்கடேசப் பெருமாளின் மகிமையைப் பாடி கொண்டு நடந்தனர்.இவனும் அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது காலில் இருந்த செருப்புடன் மலை ஏறத் தொடங்கினான்.மலை மேல் செருப்புடன் செல்வது கூடாது என்று தெரியாமலேயே நடந்தான்.அப்போது ஒரு மூதாட்டி  தோன்றி செருப்பைக் கழற்றி விட்டு செல்லும் படி கூறினாள்.அம்மூதாட்டி வேறு யாரும் இல்லை.அலமேலு மங்கைத் தாயார் தான்.அலமேலு மங்கை அன்னமய்யாவுக்கு பெருமாளின் திவ்யப் பிரசாதத்தையும் அளித்தார்.அதன் பின் அம்மை மறைந்தார்.அந்தக் கணத்தில் தனது முதல் சதகத்தைப் பாடினார் அன்னமய்யா.தனது தெய்வத்தை காண பக்தன் ஏங்கும் விதமாக அப் பாடல் அமைந்தது.
பின் திருமலைக்கு சென்று திவ்யதரிசனம் பெற்றார்.பல காலம் திருமலையில் தங்கி பல பாடல்களைப் பாடினார்.பின் சொந்த ஊரான கடப்பா , தாளபாக்கம் சென்று திருமணம் செய்து இல்வாழ்க்கையில் ஈடு பட்டார்.திம்மக்கா, அக்காலம்மா ஆகிய இருவரை மணந்தார்.

இல்லறத்தில் ஈடு பட்டிருந்த காலத்தில் சிருங்கார ரசம் மிகுந்த பல பாடல்களை  பெருமாளையும் தன்னையும்  நாயக நாயகி பாவனையில் அமர்த்திப் பாடியிருக்கிறார்.சாதி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மிக சில தெய்வீக மார்க்கத்தில்  ஈடு பாடு கொண்டவர்களில் அன்னமய்யாவும் ஒருவர். இவரது படைப்புக்களில் நூறு பாடல்கள் கொண்ட சதகங்களும் அடங்கும்.சிருங்கார மஞ்சரி, வெங்கடேச மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம்  ஆகியவை குறிப்பிடத்தக்கன.இவரது ராமாயணம் (துவிபாதா) இரட்டை வரிகளில் (திருக்குறள் போல) எழுதப்பட்டுள்ளதாகும்.