Wednesday, December 25, 2013

நாதஸ்வரம்

நாதஸ்வரம்



                நாதஸ்வரம் - நாயணம், நாகஸ்வரம் எனவும் அழைக்கப்படும். தென்னிந்தியாவுக்கு சொந்தமான இக்கருவி வட இந்தியாவில் ஷெனாய் என்று அவதாரம் எடுத்துள்ளது. நாதஸ்வரம்-மங்கல வாத்தியம் ஆகும். அதாவது மங்கல விசேடங்களின் போது வாசிக்கப்படுவதாகும். அனைத்து இசைக்கருவிகளிலும் உயர்ந்ததாகப் போற்றப்படுவது. பெரிய மேளம் என்றும் ராஜவாத்யம் என்றும் அழைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் வாங்கியம் எனப்படும் இசைக் கருவி நாதஸ்வரதை ஒத்தது.

                கோவில் வழிபாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள வாத்தியம். மரமும் காற்றும் சேர்ந்து தரும் நாத இன்பமே நாதஸ்வர இசையாகும். துளைக்கருவி வகையினதான இவ்வாத்தியம் பற்றிய குறிப்புகள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூலில் காணப்படுகின்றன. இளங்கோவடிகள் இயற்றிய சிலம்பில் நாதஸ்வரம் பற்றிய குறிப்புகள் அரங்கேற்ற காதையில் ‘வங்கியம்’ எனக் குறிப்பிடப்படுவதாக உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகிறார். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்கிராஜ புராணத்திலும் நாதஸ்வரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

                சில தேவாரங்களில் ‘பண்ணார்ந்த முழவு’ என்று வருகிறது. பண் என்றால் இசை, முழவு என்றால் நாதஸ்வரத்தையே குறிக்கும். அருணகிரி நாதரின் திருப்புகழில் சில இடங்களில் தவில் வாத்யம் பற்றிச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். இன்றும், என்றும் ஸ்வாமிக்குக் கோவில்களில் பூஜையின்போதும் சுவாமி புறப்பாட்டின்போதும் இறைவனோடு ஒன்றிய வாத்யம் நாதஸ்வரமும் தவிலும்தான்.

                சங்கிலிருந்தே ஓசைகளை நம் முன்னோர் உருவாக்கி மகிழ்ந்தனர். பின்னர் மாடு மற்றும் எருதுகளின் கொம்புகளிலிருந்து இசைக்கருவிகளைச் செய்தனர். அதன் பின் மூங்கில் மற்றும் உலோகம் பயன்பட்டன.

                அனேகமாக எபனியில் தான் நாதஸ்வரம் உருவாக்கப்படுகிறது. என்றாலும் மூங்கில், சந்தனம், செம்பு-பித்தளை, பொன், வெள்ளி, செருங்காலி, கருங்காலி, யானைத்தந்தம் போன்றவற்றிலும் நாதஸ்வரம் உருவாக்கப்பட்டுள்ளது.


                இத்தனை பெருமைகள் நிறைந்த நாதஸ்வரம் பெரிய அங்கீகாரம் இல்லாமலேயே பல ஆண்டுகள் இருந்தது. காரிக்குருசி அருணாச்சலம் பிள்ளை மற்றும் டி என் ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரின் வரவுக்குப் பின்னரே நாதஸ்வரம் பிரபலமானது.
                நாதஸ்வரம் தெய்வ வாத்தியமாகும். அடி பாகமான வட்டம் சூரிய தேவனாகும். மேலே உள்ள துளை சக்தி, உள் துளைகள் விஷ்ணு, உடல் பாகம் பிரமன், ஏழு துளைகள் சப்த மாதக்கள், தோன்றும் இசை சிவன். ஸப்த ஸ்வரங்களுக்கு 7 துவாரங்களும் அடிப்பாகத்தில், சிவபெருமானின் 5 முகங்களைக் குறிக்கும்வண்ணம் 5 துவாரங்களும் இடப்பட்டிருக்கும் எனவும் ஒரு கருத்து உள்ளது.
                தற்போதைய கருவி முன்பிருந்ததை விட நீளமானது. முன்னைய கருவிகள் தற்போதைய திமிரி நாதஸ்வரத்தை ஒத்தன. பொன்னுச்சாமிப்பிள்ளை அவர்களே முதலில் நீளத்தை மாற்றியதுடன் சத்த தொனியையும் மாற்றினார். உலோகத்தை விட மரத்தாலான நாதஸ்வரத்தில் நல்ல ஒலி கிடைத்தது. தற்போதைய நாதஸ்வரத்தின் அளவு 34.5 அங்குலமாகும். 2 கட்டை தாளம் கொண்டது.

                கோவில்களில் நாதஸ்வரத்தை காலம் காலமாக வாசித்து வருகிறார்கள். வாசிக்கப்படும் ராகங்களை வைத்தே நேரத்தை ஊரில் உள்ளவர்கள் சொல்லி விடுவார்கள். பூஜை தொடங்கும் போது முதல் முடியும் வரை பல்வேறு பொருத்தமான ராகங்களை வாசிப்பார்கள். திருவனந்தல் எனப்படும் பள்ளியெழுச்சியின் போது பூபாளம், மௌலி, மலயமாருதம் போன்ற ராகங்களும், காலை 7 மணி பூஜையின் போது ஆவேரி, தன்யாசி, சாவேரி போன்ற ராகங்களும், மத்தியான வேளையில் முகாரி, பூர்ணசந்திரிகா, மந்தரி போன்ற ராகங்களும், மாலை பூஜையின் போது ஷங்கராபரணம், பைரவி, காம்பொஜி ராகங்களும், பள்ளியறை பூஜையின் போது ஆனந்த பைரவி, நீலாம்பரி ராகங்களும் வாசிக்கப்படும்.

                ஸ்வாமி புறப்பாடு நேரத்தில் மல்லாரி ராகமும், பஞ்ச நடை, ராகம், தானம், பல்லவி வாசிக்கப்படும். மல்லாரி என்பது நாதஸ்வரமும் தவிலும் இணைந்து கம்பீர நாட்டையில் இசைக்கப்படுவதாகும். கம்பீர நாட்டை தவிர பஞ்ச ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, மற்றும் ஸ்ரீராகம் விலாவரியாக ஆலாபனை செய்யப்படும். தோடியும் வாசிக்கப்படும். திருமஞ்சனம் எனப்படும் நீராட்டலில் தீர்த்த மல்லாரி, நெய்வேத்தியம் எனப்படும் உணவூட்டலின் போது தளிகை மல்லாரி, பூரண கும்ப மரியாதையின்போது கும்ப மல்லாரி, தேரெழுந்து வரும் போது தேர் மல்லாரி, ஸ்வாமி புறப்பாடு நேரத்தில் புறப்பாட்டு மல்லாரி என ஐவகை மல்லாரிகள் உள்ளன.

                ரக்தி மேளம் எனும் ரக்தி ராகங்களை வாசிப்பது நாதஸ்வர பாரம்பரியத்தில் பிரபல்யமானது. வேறுவேறு தாளங்களில் கல்யாணி, காம்போதி, தோடி, பைரவி போன்ற ராகங்களை விரிவாக ஆலாபனை செய்வது, கடந்த காலத்தில் ரக்தி மேளம் மணிக்கணக்காகவும், நாட் கணக்காகவும், வாசிக்கப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன.

                நாதஸ்வரத்துக்கு இனிமை கூட்டுவது கலைஞனின் மூச்சுக் காற்றாகும். உதடுகளும், விரல்களும், மூச்சுக் கட்டுப்பாடும் சேர்ந்து இசை கூடும்.


குடந்தை ஆதி கும்பேஸ்வர் ஆலயத்தில் ஆதி கருங்கல் நாதஸ்வரம் ஒன்று உள்ளது. கருங்கல் நாதஸ்வரம் ஆழ்வார் திருநகரி மற்றும் திருவாறு ஆகைய இடங்களிலும் உள்ளன.  

Monday, December 23, 2013

மார்கழி மாத சிறப்புக்கள்

மார்கழி மாத சிறப்புக்கள்
பீடை மாதம் என்ற அடை மொழியோடு ஒதுக்கப்பட்ட மாதமா?
டாக்டர் சந்திரிகா சுப்ரண்யன்

பீடை மாதம் என்ற அடை மொழியோடு அழைக்கப் படும் மார்கழி மாதம் உண்மையிலே ஒதுக்கப்பட்ட மாதமா? பீடு அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி பெருமை கொண்ட மாதம் என்பதே மருவி  பீடை மாதம் என்றாகியாது என்றே கொள்ள வேண்டும்.

சூரியனின் இயக்கம்  வடக்கு நோக்கி தெற்கு நோக்கி நடக்கும்.  அந்த இயக்கம்  அயனம் – பயணம் எனப்படும்.. கதிரவன்  தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். பின் தை மாதத்தில் உத்தராயனம் தொடங்கும். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.

தை மாதம் உழவர் வயலின் விளை பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் திரு நாளாம் பொங்கல் நடக்க இருப்பதால் தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழியில் அவை தொடர்பான வயல் சார்ந்த அறுவடை முதலான தொழில்களில் மிகுந்த நேரம் செலவிட இருக்கிற காரணத்தினால் வேறு விசேடங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.உண்மையில் உணவு முதலான தானியங்களை சேமிக்கும் மாதம் இதுவாகும்.

மாதங்களில் மார்கழி
மாதங்களில் நான் மார்கழி என்றார் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான். வட மொழியில் மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்'' என்று, ’மார்க்கம்’ என்றால், வழி , ‘சீர்ஷம்'’ என்றால், உயர்ந்த என்று பொருள் பட சொல்வார்கள். இறைவனை அடையும் உயர்ந்த வழிக்கு இது  உகந்த, சிறந்த  மாதமாக அமைகிறது.
திருமாலின்  நாமம்
திருமாலின் திரு நாமங்கள் பன்னிரெண்டுக்கு பன்னிரு மாதங்களின் பெயர்கள் உண்டு.
விஷ்ணு, கோவிந்தா ,மதுசூதனா, திருவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசவா நாராயணா மாதவா, கேசவா, பத்மநாபா,  தாமோதரா என் அழைக்கப்படும் அப் பெயர்களில்  மார்கழி 'கேசவன் ' என்று சுட்டப் படுவதாகும்.

வைகுண்ட ஏகாதசி
பெருமாளின் நூற்றெட்டு திவ்ய தேசங்களில் முதன்மையானதான  ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு  நடப்பதும் இந்த மாதத்தில் தான்.

மார்கழி என்றவுடனேயே , நமக்கு திருப்பாவை, திருவெம்பாவை நினைவுக்கு வராமல் போகாது.

திருப்பாவை

ஸ்ரீ வில்லிபுத்தூர் , சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் , மனிதரை நான்  மணக்க மாட்டேன் திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டும் என எண்ணி  மார்கழி மாதத்தில் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து, தன் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். கண்ணனின் மகிமைகளைப் பாடினாள்.

திருவெம்பாவை
திருவெம்பாவை மாணிக்கவாசகர் அருளிய பாடல்களாகும். நாயக நாயகி பாவத்தில் சிவனை எண்ணி எழுதப்  பட்டவை. மார்கழியில் திருவெம்பாவை சிவனுக்குச் சிறப்பாகும்.
திருவாதிரை

விஷ்ணு அலக்காரப் பிரியர், சிவன் அபிஷேகப் பிரியர். சிவலிங்கம் அடிக்கடி அபிஷேகத்தில் திளைக்கும். ஆனாலும் சிதம்பரத்தில்  தில்லை நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறைகள்தான் அபிஷேகம் நடக்கும். அபிஷேகம் அங்குள்ள  ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கும்.

சித்திரையில் திருவோணம், , ஆனியில் உத்திரம்,  மார்கழியில் திருவாதிரை, மற்றும் மாசி ஆவணி புரட்டாசி  மாதங்களில் – சதுர்த்தசி  ஆகிய ஆறும் சிறப்பான திரு மஞ்சனங்கள்.

அந்த ஆறு திருமஞ்சனங்களில் மார்கழியில் திருவாதிரை-  ஆருத்ரா தரிசன அபிஷேகம் மிகவும் விசேஷமானது.
கோலங்கள்
மார்கழியின் இன்னொரு சிறப்பு செம்மண் பூசிய தரையில்,  வெண் நிற அரிசி மாவில் புள்ளிகளிட்டு, வரைந்து வீதிகளை அலங்கரிக்கும்  விதவிதமானக் கோலங்கள்.அவற்றின் நடுவில் பச்சை நிற சாணத்தினால் பிடித்து வைக்கப் படும் பிள்ளையார் வடிவங்கள். அவற்றின் உச்சியில் மஞ்சள் நிறத்தில் அலங்காரம் செய்யும் பூசணிப் பூக்கள்.

செம்மண் சிவனையும், வெண் மா பிரமாவையும், சாணத்தின் பச்சை விஷ்ணுவையும், மஞ்சள் மங்கலத்தின்  நிறம் என வெவ்வேறு தெய்வீகத் தன்மையினை காட்டி நிற்கின்றன.

ஆறு சமயங்களிலும்   வழிபாடு 
தவிர ஆதி சங்கராச்சார்யார் ஸ்தாபித்த ஆறு மதப் பிரிவுகளிலும் அந்தந்த  தெய்வங்களுக்கு உரிய வழிபாடு மார்கழி மாதத்தில் நடக்கும் என்பதே உண்மை
சைவம் – சிவன் -  திருவாதிரை , திருவெம்பாவை
வைணவம் - விக்ஷ்ணு -வைகுந்த ஏகாதசி , திருப்பாவை
கௌமாரம் – முருகன் - படி உற்சவம்
காணாபத்யம் – பிள்ளையார் – சாணப் பிள்ளையார்
சாக்தம்- சக்தி – பாவை நோன்பு
சௌரம்- சூரியன் – பொங்கல்
ஜெயந்திகள்
ஆஞ்சனேய சுவாமிகள்  வாயு பகவானுக்கும், அஞ்சனா தேவிக்கும்  மார்கழி மாத அமாவாசை தின  மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆஞ்சனேய ஜெயந்தி தவிர , மும்மூர்த்திகளின் வடிவில் தோன்றிய  ஸ்ரீ தத்தாத்ரேயர், விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஆகியோர் ஜெயந்திகளும்  மாரக்ழியில் வருவது மிகச் சிறப்பாகும். ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்ததும் , காஞ்சி மாமுனிவர் வான் வெளி கலந்ததும் இம் மாதத்தில் தான் நடந்தேறியது.


இப்படியான பல சிறப்புகளை  உடைய மார்கழி மாதம் தெய்வ மாதம் என்றல்லவா போற்றப் பட வேண்டும்?